ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:19 PM | Best Blogger Tips
ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்...

சிலர் என்ன தான் எடையை குறைக்க முயன்றாலும் எடை குறையாமல் இருக்கும். அதிலும் சரியான டயட், உடற்பயிற்சி என்று நிறைய நேரம் உடல் எடையை குறைப்பதற்கே நேரத்தை செலவழிப்பார்கள். ஆனால் சிலர் என்ன செய்தாலும், உடல் எடை அதிகரித்துக் கொண்டு தான் இருக்குமே தவிர குறையாது.

இதற்கு காரணம் தைராய்டு வகைகளில் ஒன்றான ஹைப்போ தைராய்டிசமாக இருக்கலாம். ஏனெனில் ஹைப்போ தைராடிசத்தினால், உடல் எடை அதிகரிக்கும். இதற்கு தைராய்டு சுரப்பியானது, தைராய்டு ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்காமல், அளவுக்கு குறைவாக சுரப்பதே ஆகும்.

மேலும் இந்த ஹைப்போ தைராய்டிசம் வந்தால், செரிமான மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாடுகளைக் குறைத்துவிடும். ஏனென்றால், தைராய்டு ஹார்மோன்கள் தான் இதன் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது.

எனவே இதற்கு தீர்வாக மருத்துவர்கள், அயோடின், நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட சொல்வார்கள். இப்போது அந்த மாதியான ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா...

பச்சை இலைக் காய்கறிகள் :

தைராய்டு சுரப்பி குறைவாக ஹார்மோனை சுரப்பதால், அவற்றை சரிசெய்ய காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் டயட்டில் சேர்க்க வேண்டும். அதிலும் நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஏனெனில் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டால், செரிமான மண்டலமானது பாதிக்கப்படும். ஆகவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளான ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டை கோஸ், முளைப்பயிர்கள் மற்றும் கீரைகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

பழங்கள் :
பழங்களில் சாறுள்ள பழங்கள் செரிமானத்திற்கு சிறந்ததாக இருப்பதோடு, நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கும். எனவே தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாறுள்ள பழங்கள் சிறந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் பழங்களில் ப்ளூபெர்ரி, செர்ரி, ப்ளம்ஸ், கிவி, தக்காளி, கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றை தினமும் உண்ணும் உணவில் சேர்க்க வேண்டும்.

தானியங்கள்:
தானியங்களான ப்ரௌன் அரிசி, ஓட்ஸ், பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.

மேலும் உடலில் சுரக்கும் தைராய்டு ஹார்மோனின் அளவை சரியாக சுரக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி, தானியங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைந்த அளவில் இருப்பதால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது. எனவே தான், ஹைப்போ தைராய்டிசமால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவுகள் மிகவும் அவசியம்.

ஒமேகா-3:
ஃபேட்டி ஆசிட் மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. அதிலும் சாலமன், கானாங்கெழுத்தி போன்ற மீன்களில் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் ஹைப்போ தைராய்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் அதிகமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட சொல்வார்கள். ஏனெனில் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியாக இயங்க வைத்து, உடல் வீக்கங்களைக் குறைக்கிறது.

சிக்கன்:
ஹைப்போ தைராய்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், முட்டை, சிக்கன், வான்கோழி போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. சொல்லப்போனால் இரும்புச்சத்து குறைபாடும் ஒரு வகையில் ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறி தான். எனவே, இத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், தைராய்டு ஹார்மோனின் அளவை சரியாக சுரக்க வைக்கலாம்.