பருவமழை தொடங்கியாச்சு: என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா?!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:36 PM | Best Blogger Tips
ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை வெயில் கொளுத்திய நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பருவமழை கொட்டி வருகிறது. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வரும் நிலையில் மழைக்காலத்தில் நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். என்னென்ன நோய்கள் ஏற்படும், அதற்கு எவ்வாறு நிவாரணம் காணலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.

தொற்றுநோய்களின் தொல்லை

மழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்க் காடாகவே இருக்கும். இதனால் எளிதில் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கியவர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும். இப்படிப் பரவும் நோய்களிலிருந்து தப்பிக்க, வருமுன் காக்கும் பாலிஸிதான் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

சளி, தும்மல், காய்ச்சல்

தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை இந்த வைரஸ் நோய்க்கிருமிகள் தாக்கி இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை கவனிக்காமல் விட்டு-விட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும்- அபாயமும் இருக்கிறது. மழைக்காலத்தில் ஒருவர் பயன்படுத்திய டவல், கைக்குட்டை ஆகியவற்றை மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

டெங்கு வரும் எச்சரிக்கை

மழைக்காலத்தில் விலைவாசி போல விறுவிறுவென உயர்ந்துவிடும் கொசுக்களின் எண்ணிக்கையும். கொசுக்கள் மூலமாக எளிதில் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல். இதற்கும் உடல்வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும். கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.

மலேரியாவா இருக்கலாமோ?

மழைக்காலத்தில் பாரசைட் என்ற கிருமிகள், மலேரியாவை ஏற்படுத்தும். இது பெண் கொசுவால் பரவும். ரத்த சோகை, மலத்தில் ரத்தம், நடுக்கம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.
ரத்த சோகை, மூளை தொற்றுநோய், ஈரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், நுரையீரலில் நீர்த்தேக்கத்தால் மூச்சிரைப்பு, சுவாசத் தடை, மண்ணீரலீல் சிதைவு ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்படும். இந்த நோய் ஏற்படுவதை தடுக்க உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும்.

உலைவைக்கும் மஞ்சள் காய்ச்சல்

ப்ளாவி வைரஸ் மூலம் மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது. தொற்று நோய்க் கொசுக்களால் மட்டும் பரவும். தலைவலி, உடல்தசை மட்டும் மூட்டுகளில் வலி, காய்ச்சல், முகத்தில் சிவப்புத்தன்மை, பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் உடனே மறைந்து விடும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு 3 - 4 நாட்களில் காய்ச்சலும் மற்ற அறிகுறிகளும் மறைந்து போகும்.

கோமா நிலை ஜாக்கிரதை

காய்ச்சல் அதிகரித்தால் நோயாளிகளுக்கு மயக்க நிலை ஏற்படும். தாறுமாறான இதய துடிப்பு, ரத்தக் கசிவு, சிறுநீர் கழித்தல் குறைந்து விடும், மனப்பதற்றம், வாந்தி, உடல்தசை வலி, காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை, தசைவலி, கண்கள் சிவத்தல், மற்றும் கோமா நிலையை கூட அடையலாம். இதனால் மரணம் கூட ஏற்படும்.

எலிகள் மூலம் பரவும் எலிக்காய்ச்சல்

ஹெப்படிடிஸ் ஈ வகை வைரஸ் கிருமி எலி மூலமாக பரவுகிறது. இதனை எலிக் காய்ச்சல் என்று கூறுவார்கள். ஜுரம், மூட்டு வலி, மஞ்சள் காமாலை ஆகியவை எலிக் காய்ச்சலின் அறிகுறிகள். இந்தக் காய்ச்சல் உயிரையே பலிவாங்கக்கூடியது என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தலைவலி தரும் டைபாய்டு

மழைக்காலத்தில் டைபாய்டு காய்ச்சல் ஏற்படுவது இயற்கை. வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இந்த காய்ச்சலினால் அடிவயிறு வலிக்கும். தலைவலி வாட்டி எடுக்கும். விட்டு விட்டு காய்ச்சல் வரும். எனவே உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். நன்றாக ஓய்வெடுக்கவேண்டியது அவசியம்.

பூஞ்சை தொற்றுநோய் ஜாக்கிரதை

மழைக்காலத்தில் ஜாலியாக இருக்கிறது என்பதற்காக மழையில் நனைவதும் நல்லதல்ல. ஈரமான ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும். ஈரத் துணிகளில் இருந்து நம் உடலில் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகளும் இருக்கின்றன. மழைக்காலம், வெயில் காலம் என்று எந்தக் காலமாக இருந்தாலும் நம்மையும் நாம் சார்ந்த இடத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டாலே போதும். நோய்கள் குறித்த கவலை இல்லாமல் இருக்கலாம்

வாட்டி எடுக்கும் வயிற்றுப்போக்கு

மழைக்காலத்தில் தண்ணீரின் மூலம் பரவும் நோய் காலரா. இதனால் வாந்தி பேதி ஏற்பட்டு வாட்டி எடுக்கும். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உடனடியாக செய்யவேண்டியது காய்ச்சி ஆறவைத்த நீரில் சர்க்கரை, உப்பு கலந்து பருக கொடுக்கலாம்.

கண்வலி வரும் ஜாக்கிறதை

மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி மழைக் காலத்தில்தான் அதிகம் பரவும். இது கஞ்சக்டிவ் வைரஸ் மூலமாகப் பரவுகிறது. இந்த வைரஸ் முதலில் நுரையீரலைத் தாக்கும். அதன் பிறகுதான் கண்ணைத் தாக்கும். லேசான கண்வலி, எரிச்சல் வந்தால் வெதுவெதுப்பான நீரில் கண்களைக் கழுவ வேண்டும்.

காய்ச்சிய தண்ணீரை குடிங்க

தண்ணீரின் மூலம்தான் அநேக நோய்கள் பரவுகின்றன. எனவே எந்த சீசனாக இருந்தாலும் தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும். மினரல் வாட்டரோ மெட்ரோ வாட்டரோ எந்த தண்ணீராக இருந்தாலும் காய்ச்சி, வடிகட்டி குடிப்பதுதான் நல்லது.

செருப்பில்லாமல் போகாதீங்க

மழைக்காலத்தில் செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. பாதாள சாக்கடைகள்தான் இதுபோன்ற நோய்கள் பரவுவதற்கான முக்கிய பொறுப்பை ஏற்கின்றன. எனவே சாக்கடைகள் நிரம்பி வழியும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கலாம். சாலைகளில், வீடுகளின் வெளிப்புறத்தில், எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும். வீட்டிற்குள் வந்தவுடன், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவவும்.

சூடான உணவுகளை சாப்பிடுங்களேன்

எப்போதும் சுத்தமான உணவுகளைச் சாப்பிடுவதுடன் தெருக்களில் விற்கும் ஜூஸ், பொரித்த உணவுகள், ஓட்டல் சாப்பாடு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பழைய, மீதமான உணவை குளிர்பெட்டியில் வைத்து, மீண்டும் சூடுபடுத்தி உண்ணக் கூடாது.