சரஸ்வதி பூஜை!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:48 AM | Best Blogger Tips


தற்காலத்தில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. “பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்ற அருள்வாக்குப்படி, ஏழை, எளியவர்கள் கூட கடன் பெற்றேனும் படிக்கின்றனர். கலைமகளின் ஆட்சி எங்கும் நடக்கிறது. இந்த இனிய காலத்தில், கல்விக்கே அரசியான கலைமகளைப் பற்றி தெரிந்து கொண்டு, அவளுக்கு விழா எடுத்தால் அர்த்தமுள்ளதாக இருக்குமல்லவா!
மாணவர்கள் படிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் நல்ல நேரம் காலை 4.30 முதல் ஆறு மணிக்குள் உள்ள பிரம்ம முகூர்த்த நேரம் அல்லது மாலையில் விளக்கு வைக்கும் வேளை. இவ்வாறு, காலத்தை நிர்ணயித்ததற்கு காரணம் உண்டு. காலையிலும், மாலையிலும் சூரியனின் சக்தி குறைந்து, மப்பும் மந்தாரமுமான ஒரு நிலை காணப்படும். இந்தச்சூழ்நிலை படிப்பதற்கு ஏற்ற நேரம். இம்மாதிரி நேரங்களில் மனம் இயற்கையாகவே ஒருமைப்படும். இதனால் தான் புரட்டாசி மாதத்தை சரஸ்வதி பூஜை நடத்த நம் முன்னோர் தேர்ந்தெடுத்தனர். இக்காலத்தில் இந்தியாவில் அநேகமாக எல்லா இடங்களிலும் இதமான சீதோஷ்ண நிலை நிலவும். வெயிலும் அதிகமிருக்காது, குளிரும் அதிகமிருக்காது. இப்படிப்பட்ட மந்தாரமான சூழலில், படிப்பவர்கள் தங்கள் பாடங்களை வேகமாக முடித்துக் கொள்ள நல்ல காலம்.

கண்ணுக்கு இதமான நிறம் வெள்ளை. இதனால் தான் சரஸ்வதிக்கு வெண்பட்டு உடுத்துகின்றனர். அதுமட்டுமல்ல, நாம் கற்கும் கல்வி, மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிறத்தைத் தேர்ந்தெடுத்தனர். முக்கிய கோவில்களில் அம்பாளுக்கு மாலை நேர பூஜையில், வெள்ளைப்புடவை உடுத்துவது இப்போதும் வழக்கமாக உள்ளது.

நாம் கற்கிற கல்வி பிறருக்கு உதவுவதாகவும், குடும்ப நலன் கருதி எத்தகைய சுகத்தையும் தியாகம் செய்யக்கூட தயாராக இருக்க வேண்டும் என்பதையும் சரஸ்வதிதேவியின் வாழ்க்கை வரலாறு உறுதிப்படுத்துகிறது. சரஸ்வதியின் கணவரான பிரம்மாவுக்கு, சிவபெருமானால் ஒரு சாபம் வழங்கப்பட்டது. அதாவது, பிரம்மாவுக்கு வழிபாடே கிடையாது என்பது அந்த சாபம். இதன் காரணமாக அவருக்கு கோவில்கள் இல்லாமல் போனது. தன் கணவருக்கு கோவில்கள் இல்லாமல் போனதால், சரஸ்வதி தேவியும் தனக்கு வழிபாடே வேண்டாம் என சொல்லிவிட்டாள். இவர்கள் மட்டுமல்ல, பிரம்மாவின் மானஸபுத்திரரான நாரதரும் தனக்கு வழிபாடு வேண்டாம் என இருந்து விட்டார்.

இந்தியாவில், இவர்களுக்கான கோவில்கள் விரல் விட்டு எண்ணுமளவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, வேதங்களையே கையில் வைத்திருக்கும் பிரம்மா, கல்விக்கே தெய்வமான சரஸ்வதி, மூவுலகத்திற்கும் சென்று வரும் ஞானியான நாரதர் மூவரும் தங்கள் குடும்பத்தலைவருக்கு இல்லாத சுகம் தங்களுக்கும் வேண்டாம் என்று தங்கள் சுகத்தையும் தியாகம் செய்துள்ளனர்.

பார்வதி தேவிக்கும், லட்சுமிக்கும் ஒரு ஆண்டில் பல பூஜைகள் வருகின்றன. கோவில்களும் இவர்களுக்கு அதிகம்; ஆனால், சரஸ்வதிக்கு ஒரே ஒரு பூஜை தான்.

படித்தால் மட்டும் போதாதுபடித்து, சம்பளத்தை வாங்கிக் குவித்து பெருமையடித்துக் கொண்டால் மட்டும் போதாதுகல்வியின் அடிப்படையான, தியாகம், ஒழுக்கம் என்பதை இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் தெரிந்து கொண்டு, அவளை வரவேற்கத் தயாராவோம்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/s480x480/564100_492765357434451_481560432_n.jpg