உளுந்தின் உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:59 | Best Blogger Tips
உளுந்தின் உடல்நல நன்மைகள்:-

இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.


தென்னிந்திய உணவு வகை,

வட இந்திய உணவு வகை.

தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.

இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.