இந்திய தொழில் துறை, ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் (T.V.Sundaram Iyengar) சிறப்பு பகிர்வு.
தி.வே. சுந்தரம் ஐயங்கார் ஒரு மகா விருட்சமாய்... -
தி.வே. சுந்தரம் அய்யங்கார் (திருக்குறுங்குடி வேங்ககுருஸ்வாமி சுந்தரம்) அவர்கள், இந்திய தொழில் துறை, ஆட்டோமொபைல் துறையின் உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மாமனிதர். இவர் எல்லோராலும் T V சுந்தரம் அய்யங்கார் என அன்பாக அழைக்கப்பட்டார்.
பல ஆண்டுகளாக நடந்து தேய்ந்து போயிருந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வுகொடுத்து, பேருந்துகளில் பயணிக்கவைத்த பெருமை டி.வி.சுந்தரம் ஐயங்காரையே சேரும்.
வாகனங்களில் செல்வதே கனவாக இருந்த போது, மதுரையில் முதன்முதலில் கிராமப்புற பேருந்து சேவையை தொடங்கினார். தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை 1911-ல் தொடங்கி, தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழித்தடத்தில் 1912-ல் பேருந்து சேவை தொடங்கி, தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு முன்னோடியானார். பிறகு இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, ஒரு அடித்தளத்தை அமைத்தார். தி.வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், தொடங்கிய நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில் மோட்டார் தொழில், மோட்டார் சேவைகள் மற்றும் நிதி என பல துறைகளில் பரந்து விரிந்தது. இப்போது டிவிஎஸ் குழுமத்தை சேர்க்காமல் ஆசிய ஆட்டோமொபைலே இல்லை என்ற அளவிற்கு வளர்ச்சி கொண்டுள்ளது.
தி. வே. சுந்தரம் ஐயங்கார் ஆரம்ப கால வாழ்க்கை:
தி.வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், இன்றைய தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி என்ற ஊரில் 1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி பிறந்தார்.
திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின், சட்டக் கல்லூரியில் சேர்ந்து. சட்டக்கல்வியில் தனது இளங்கலைப் பட்டத்தை பெற்றார். இவர் ஒரு வழக்கறிஞராக தனது தொழில்துறையைத் தொடங்கினார். பின்னர் இந்திய ரயில்வேயிலும், அதன் பின் ஒரு வங்கியிலும் வேலை செய்தார். தொடக்கத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், பின்னாளில் வெற்றிகரமான தொழில் அதிபராக திகழ்ந்தார். அப்போதைய சென்னை மாகாணத்தில் முதன் முதலில் பேருந்து சேவையைத் தொடங்கியவர் இவரே.
டிவிஎஸ் வளர்ச்சி:
இளமையிலேயே சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்த டிவிஎஸ் அவர்களின் ஆர்வத்தை, திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கத்தில் நடைபெற்ற லாயர் நார்டன் எனும் ஆங்கிலேயரின் உரை மேலும் தூண்டியது. இவர் தன் வங்கி வேலையை விட்டுவிட்டு, தொழில் துறைக்கு திரும்பினார். 1911 ஆம் ஆண்டு, மதுரையில் முதல் பஸ் சேவையை துவக்கினார். தொடர்ந்து 1923 இல் டி.வி.சுந்தரம் ஐயங்கார் மற்றும் சன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவினார். 1929-ல் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் வாகனங்களுக்கும், உதிரிபாகங்களுக்கும் டிவிஎஸ் நிறுவனம் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றதால், டிவிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றில் புதியதொரு திருப்பம் ஆரம்பமானது. 1939-ல் சதர்ன் ரோட்வேஸ் லிமிடெட் என்ற பெயரில், லாரிகள் மற்றும் பேருந்துகளுடன் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டு... பிறகு, ‘தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் மோட்டார்ஸ் லிமிடெட்’ போன்ற தொழிற்சாலைகளை தொடங்கினார்.
1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது, சென்னை மாகாணத்தில் பெரும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, அவர் ‘டி.வி.எஸ் கரி எரிவாயு ஆலையை’ வடிவமைத்து உருவாக்கினார்.
1950-களில், ஜெனரல் மோட்டார்ஸின் மிகப்பெரிய விநியோகஸ்தராக ‘மெட்ராஸ் ஆட்டோ சர்விஸ் லிமிடெட்’ விரிவடைந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தி.வே. சுந்தரம் ஐயங்கார் அவர்களால் மிக எளிமையாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இப்போது இந்தியாவின் மிகப் பெரும் உதிரி பாகங்கள் தயாரிக்கும், வினியோகிக்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
தி.வே. சுந்தரம் ஐயங்கார் தன் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் தன்னுடைய பிள்ளைகளிடம் ஒப்படைத்த பின், “டி.வி.எஸ்” என்ற பெயரின் கீழ் நான்கு தனித் தனி கிளைகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் விநியோக நிறுவனம் என்ற பெருமை டி.வி. எஸ். குழுமத்தையே சேரும். இந்தக் குழுமம் தானியங்கி பாகங்கள் உற்பத்தி, வாகன விற்பனை, மின்னணு, ஐ.டி மற்றும் நிதி போன்ற பல்வேறு துறைகளில் சுமார் 50,000 பேரை பணியில் அமர்த்தி செயல்படுகிறது. இப்பொழுது டிவிஎஸ் குழுமத்தில் சுமார் 40 நிறுவனங்களும் மற்றும் ஆட்டோமோட்டிவ் பிரிவில் துணை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
டி.வி.எஸ் குழுமத்தின் கீழ் வரும் நிறுவனங்களில் சில:
வீல்ஸ் இந்தியா, ப்ரேக்ஸ் இந்தியா, சுந்தரம் ஃபாஸ்டநெர்ஸ், டி.வி.எஸ் இன்ஃபோடெக், டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி, இஸட்எஃப் எலெக்ட்ரானிக்ஸ் டி.வி.எஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சுந்தரம் ஃபைனான்ஸ், டர்போ எனர்ஜி லிமிடெட், ஆக்சல்ஸ் இந்தியா, சுந்தரம் கிளேட்டன், லூகாஸ் டி.வி. எஸ், சுந்தரம் மோட்டார்ஸ், சுந்தரம் பிரேக் லைனிங், டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ், டி.வி.எஸ் சதர்ன் ரோட்வேஸ் லிமிடெட், மற்றும் சுந்தரம் ஹைட்ராலிக்ஸ் லிமிடெட்.
“டி.வி.எஸ்” பற்றி காஞ்சி மகா பெரியவர்:
காஞ்சி மகா பெரியவர் புதுக்கோட்டையில் ஒருமுறை முகாமிட்டிருந்தார். எந்தக் கடிகாரமும் இல்லாமல், சரியாக அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்துவிடுவார். அவரது சீடருக்கு ஒரு சந்தேகம்... பெரிவா எப்படி சரியாக அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து விடுகிறார்... பெரிவா சீடரை கூப்பிட்டு, அவரது சந்தேகத்தை தீர்த்து வைத்தார். புதுக்கோட்டைக்கு வர்ற டிவிஎஸ் பஸ் நம்ம சத்திரத்தைக் கடந்து போறதைப் பார்த்தேன்.
‘டிவிஎஸ் பஸ் ஒரு இடத்துக்கு வர்ற குறிப்பிட்ட டயத்தை வெச்சுண்டே, நம்ம கடிகாரத்தை கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்’னு சொல்லுவா. அது வாஸ்தவம்தான். சத்திரவாசலுக்கு அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரை மணிக்கு தாண்டிப் போகும் போது பஸ்ஸோட சத்தம் கேட்டவுடனேயே எழுந்து விட்டேன்…’’ என்றார். காஞ்சி மகா பெரியவர் கூறியது, இவரது பேருந்து நிறுவனத்தின் நேரம் தவறாமைக்கு நற்சான்று!
“டி.வி.எஸ்” தொழிலாளர்களுக்கு செய்த வசதி:
தி.வே. சுந்தரம் ஐயங்கார் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்தினார். ஊழியர் குடியிருப்புகள், அவர்களது குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற வசதிகளையும் செய்து கொடுத்தார். இன்றும் இவைகள் தொடர்கின்றன.
நானும் ஒரு தொழிலாளி:
தி.வே. சுந்தரம் ஐயங்கார் தன் வாரிசுகளை தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்ய வைத்தார். வீண் செலவைக் குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளில் தொழிலாளர்களையும் பங்கேற்க வைத்தார். தொழிலாளர்களில் சிறந்த ஆலோசனைகளைச் சொன்னவர்களுக்குப் பரிசுகளும் கொடுத்தார்கள். டி.வி.எஸ் நிறுவனத்தில் இன்றைக்கு இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கும் அனைவரும், யூனிஃபார்முடனும் கிரீஸ் கறையுடனும் தொழிலாளிகளோடு தொழிலாளியாக வேலை செய்தவர்கள். அதனால்தான் தங்கள் தொழிலாளர்களின் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்க அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இவரது 5 மகன்களும் தந்தைக்கு உதவியாக தொழிலில் இறங்கினர். வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர் கலைகளையும் ஆதரித்தார். காந்தியக் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றினார்.
தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.
தன் வாரிசுகளை தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்ய வைத்தார். நிர்வாக யோசனைகளில் தொழிலாளர்களைப் பங்கேற்க வைத்தார். தாத்தா அப்பா பேரன் - கொள்ளுப்பேரன் என 4 தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற குடும்பங்கள் பல உண்டு.
ஒரு மகா விருட்சமாய்...
தி.வே. சுந்தரம் ஐயங்கார் தனது 78வது வயதில் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாலையில் கொடைக்கானலில் காலமானார். இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வெண்கலமும் பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு உருவச்சிலை மதுரையில் 1957-ல் ஆகஸ்டு 7ஆம் தேதி அந்நாள் மத்திய வணிக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இவர் மறைந்தாலும் இவர் உருவாக்கிய டிவிஎஸ் குழுமம் ஆல விருட்சம் போல் தழைத்து விழுதுகளாகி, அவரது நான்காம் தலைமுறை வாரிசுகள் டி.வி.எஸ் குழுமத்தில் இன்றைக்கு 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களும் கொண்ட மகா விருட்சமாய் வளர்ச்சி அடைந்துள்ளது.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏