குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips

 May be an image of 1 person and child

 

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை வாக்குவாதம் முற்றிவிட்டது.
 
“நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது.. ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதைவிட ஒழிந்து தொலை!” என்று ஆவேசமாகத் திட்டிவிட்டு, அலுவலகத்துக்குச் சென்று விட்டார்.
 
இத்தனைக்கும் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லக் கூடியவர்கள்தான். கணவனின் மனக்குழப்பம் அப்படிப் பேசவைத்துவிட்டது. வீட்டில் நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் அவர் பணியில் ஆழ்ந்து விட்டார்.
 
மாலையில் வீடு திரும்பியபோது தெருவில் இருக்கும் சிறுவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு மண்ணைக் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டுக் கதவு ‘ஆ’வென திறந்து கிடந்தது. வீட்டில் இருக்கும் நாய்க் கூண்டு காலியாக இருந்தது.
 
திகைப்போடு வீட்டுக்குள் நுழைந்தால், களேபரம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. தொலைக்காட்சியில் கார்ட்டூன் நிகழ்ச்சி சத்தமாக அலறிக் கொண்டிருந்தது. விளக்கு ஒன்று கீழே தள்ளி விடப்பட்டிருந்தது. தரை விரிப்பு ஒரு சுவரின் அருகே ஒழுங்கின்றி கிடந்தது.
 
அறை முழுவதிலும் விளையாட்டு பொம்மைகளும் பல்வேறுபட்ட துணிகளும் இறைந்து கிடந்தன.
 
சமையலறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தார். சாமான் கழுவும் தொட்டியில் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மேடையில் காலைச் சிற்றுண்டி சிந்திக் கிடந்தது.
 
குளிரூட்டும் பெட்டியின் கதவு அகலமாகத் திறந்திருந்தது. அதில் இருந்த நாய்க்கான உணவு தரையில் சிந்தியிருந்தது. மேஜையின் அடியில் ஓர் உடைந்த கண்ணாடி தம்ளர் இருந்தது.
 
பின்கதவின் அருகில் ஒரு மணல்மேடு காணப்பட்டது. ஏதோ நடத்திருக்கிறது. மதிய உணவு வேளைக்கு முன்பே தன் மனைவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று உள்மனம் சொன்னது. கணவருக்குப் படபடப்பு அதிகமானது.
 
ஹாலை ஒட்டி இருந்த குளியலறையை நோக்கித் திரும்ப, அங்கும் அதிர்ச்சிக் காட்சிகள். உள்ளே தண்ணீர் சொட்டும் சப்தம், நிசப்தத்தை மேலும் திகிலாக்கியது.
 
கதவைத் தாண்டி வெளியே வந்து தண்ணீர் குட்டை போல தேங்கிக் கிடந்தது. ஈரத் துண்டுகளும், தண்ணீரில் ஊறிப்போயிருந்த சோப்புக் கட்டியும், மேலும் பல விளையாட்டு பொம்மைகளும் குளியலறை தரை முழுவதும் சிதறிக் கிடந்ததைக் கண்டார்.
 
மைல் கணக்கில் நீளமான டாய்லட் காகிதம் ஓரத்தில் குவியலாகக் கிடந்தது. கண்ணாடியின் மீதும் சுவர்கள் மீதும் பற்பசை பூசப் பட்டிருந்தது.
‘டாடி’ என்ற குரல் கேட்டு, திடுக்கிட்ட கணவர் தனது ஒன்றரை வயது மகன் பேஸ்ட்டைப் பிதுக்கி விளையாடிக் கொண்டிருப்பதைச் கணித்து அவனை அவசரமாகத் தூக்கி ஆழ்ந்த முத்தம் கொடுத்து அணைத்துக் கொண்டார்.
கண்களில் நீர் பொங்கியது. மனைவிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற பிதியுடன் அவளைத் தேடினார்.
 
படுக்கையறையை நோக்கிப் பார்வை திரும்ப, அவசரமாக அதன் கதவைத் திறந்தார். உள்ளே.. முதுகுக்கு தலையணை கொடுத்து, ஒய்யாரமாக சாய்ந்திருந்த அவரது மனைவி, ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
 
‘ஸ்வீட்டி’ என்றார், உலர்ந்த நாக்குடன், அவரைப் பார்த்து புன்னகை புரிந்த மனைவி, “எப்போ வந்தீங்க” என்று கேட்டாள்.
 
அதிர்ச்சியிலிருந்து மீளாத கணவர், “இன்று வீட்டில் என்னதான் நடந்தது?” என்று கேட்டார்.
மறுபடியும் சிரித்த மனைவி, “வீட்டிலே என்னதான் வெட்டி முறிச்சியோ.. என்று அலுவலகம் முடிந்து வந்தவுடன் நீங்கள் கேட்பது வழக்கம். இன்று ஒன்றும் வெட்டி முறிக்கவில்லை! அதுதான் நடந்திருக்கிறது” என்று கூறினாள்.
 
செல்லாத காசிலும் செப்பு இருக்கும் என்பார்கள். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இயல்பாகச் சில விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாலேயே அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாத குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
 
 
– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை, ஒரு விதை’ நூலிலிருந்து…✍🏼🌹

 

🌷 🌷🌷 🌷  

May be an image of 1 person, beard and smiling

🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹