எளிமையின்
திருஉருவம் கக்கனைப்
பற்றி "யோசிக்கும் வேளையில் " நூலில் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்:)
`…நானும் அவரும் ஒரு சமயம் ஒரே ரயில் பெட்டியில் பிரயாணம் செய்ய நேர்ந்தது.
இருவரும் மதுரை விருந்தினர் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம்.
நான் அக்காலத்தில் மிகவும் ஆடம்பரப் பிரியனாய் இருந்தேன்!
எலெக்ட்ரிக் ஷேவரில் தான் சவரம். ஒடிகொலன் கலந்த ‘after shave lotion’, ஸ்னோ, பவுடர் இத்யாதிகளுடன் நான் இருப்பதைப் பார்த்து சிரித்தார் திரு.கக்கன்.
``இது என்னங்க அவ்வளவு பெரிய வேலையா?… நம்ம வழக்கம் இவ்வளவுதாங்க’’ என்று சொல்லி ஒரு பிளேடை எடுத்தார்.
குறுக்கில் பாதியாக உடைத்தார்.
ஒரு பாதியில் மழமழவென்று முகச்சவரம் செய்து கொண்டார்.
ஒரு கீறல்,
ஒரு வெட்டு,
சிறு ரத்தக் கசிவு ஒன்றுமில்லாத லாவகத்தை ரசித்தேன்.
அவரது குரலும் சிரிப்பும் என் செவியில் இப்போதும் ஒலிக்கிறது. சிந்தையில்
அவர் முகம் தெரிகிறது.
திரு.கக்கன் சொன்னார்:
``இது ஜெயிலில் இருந்த காலத்துப் பழக்கம்; மந்திரியானா மாறிடுமா?….
ஒரு சின்ன வித்தியாசம் உண்டுங்க. அந்தப் பாதியை இப்ப சமயத்திலே மறந்து அப்படியே போட்டுடறேன்.
முந்தியெல்லாம் அதையும் பத்திரமா எடுத்து வெச்சுக்குவோம்.
சிக்கனமாக இருக்கிறதுதாங்க நல்லது!’’
நான் காந்திஜியை நினைத்துக் கொண்டேன்.
தமது வாழ்வின்அனைத்து நிலைகளிலும் காந்தியத் தொண்டனாகவே வாழ்ந்து காட்டியவர் கக்கன்.
அத்துடன், அரசியலில் தாம் பெறுகிற வெற்றி என்பது, தொண்டு செய்ய மக்கள் தமக்கு வழங்கிய கருவி என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு செயல்பட்டதால், எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.
எவராலும் பின்பற்ற முடியாத நெறிமுறைகளைப் பின்பற்றினார்.
நான் அவரிடம் கற்ற பாடம்
எளிமை என்பதற்கு மறுபெயர் கக்கன் தானோ?
ஆரவாரம் இல்லை,
அலட்டல் எதுவுமில்லை;
எளிமையே அவரிடம் சிரித்தது…
'எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர்! '