தஞ்சாவூர் மாவட்ட அரசு அதிகாரிகள் கவனத்திற்கு
(1) தஞ்சாவூர் அருளானந்தநகர்ப் பகுதியில் இன்று (06.03.2024) காலை நடைப் பயிற்சி மேற்கொண்டபோது, தெருவில் கோலமாவு விற்றுக் கொண்டிருந்த இந்தப் பெரியவரைப் பார்த்தேன். இவ்வளவு வயோதிக நிலையிலும் சைக்கிளில் வீடு வீடாகச் சென்று கோலமாவு விற்றுப் பிழைப்பு நடத்தும் அப்பெரியவரின் தோற்றமும்,இந்த வயதிலும் உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற அவரது உறுதியான மனமும், அந்தப் பெரியவர் மீது எனக்குள் ஒரு பெரும் மரியாதையும்,அதே நேரத்தில் ஒரு பரிதாப உணர்வையும் ஏற்படுத்தியதுடன்,அவருடன் அளவலாவ வேண்டும் என்ற ஆவலும் ஏற்பட்டது.
(2) “அய்யா தங்களுக்கு என்ன வயது?” என்றேன்.
அதற்கு அவர், என்னைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, “ எனக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது அய்யா,” என்றார்.
“ இந்த வயதிலும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள். வீட்டில் உங்களுக்கு உதவுவதற்கு உங்கள் குடும்பத்தினரோ, பிள்ளைகளோ எவரும் இல்லையா?”என்று கேட்டேன்.
“ அய்யா, எனக்கு ஒரே பெண் பிள்ளைதான்.அதையும் வெளியூரில் திருமணம் செய்து கொடுத்து விட்டேன்.என் மனைவியும் என் மகளோடு சென்று வசிக்கிறார்.நான் மட்டும் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் வெள்ளைப் பிளையார் கோவில் எதிர்புறம் ஒரு வாடகை போர்ஷனில் வசிக்கிறேன்,”என்றார்.
“ உங்களுக்கு தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியம் வருகிறதா? அது உங்களைப் போன்றவர்களுக்குக் கைகொடுக்குமே..!” என்றேன்.
அதைக் கேட்டதும், அந்தப் பெரியவர் கைகூப்பியவாறே, “அதை ஏன்யா கேக்குறீங்க…! நானும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து…மனு கொடுத்து…ஓய்ந்து போய்விட்டேன் அய்யா..! எத்தனைமுறை மனுகொடுத்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக மனுகொடுங்கள் என்கிறார்கள்.பின் அதையும் காணாமல் அடித்துவிடுகிறார்கள். மீண்டும் போய்க் கேட்டால்,அவரைப் போய்ப் பார் இவரைப் போய்ப் பார் என்று விரட்டி விடுகிறார்கள்,” என்று தன் கரங்களை கூப்பிய நிலையிலேயே பதில் அளித்தார்.
(3) மனுநீதிச் சோழன் அட்சி நடந்த இந்த டெல்டா மண்ணில் முகநூல் மூலம் அடிக்கும் இந்த “ஆராய்ச்சி மணி” (பதிவு) மன்னன் காதுகளில் கேட்கிறதோ இல்லையோ, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குச் செல்லும் என நம்புகிறேன். கரம் கூப்பி நிற்கும் அந்தப் பெரியவரின் முதியோர் உதவித் தொகைக்கான மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, முதியோரு பென்ஷன் வழங்க உத்தரவு பிறப்பித்தால் இந்த 80 வயதுப் பெரியவரின் வறுமை படிந்த கண்களில் ஒரு புத்துயிர் ஒளியை உண்டாக்கிய புண்ணியம் நம் தமிழக அரசுக்குக் கிடைக்கும்.
(4) அந்தப் பெரியவர் பெயர் முத்துச்சாமி .வயது 80. வசிப்பிடம்:தஞ்சாவூர் நகரம் கீழவாசல் பகுதி.(வெள்ளைப் பிள்ளையார் கோவில் எதிர்புறம்) ,
Copy from Lion Getek Karthik