பிறப்பும், இறப்பும் ஒரே நாளில் கண்ட தில்லையாடி வள்ளியம்மை பிறந்த தினமும் இறந்த தினமும் இன்று....
வாழ்ந்த காலம் 16 ஆண்டுகள் தான் ஆனால் படைத்ததோ சரித்திரம்...
மறைக்கப்பட்ட மாபெரும் பெண் சுதந்திர போராட்ட வீர பெண்மணி
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் உள்ள தில்லையாடி என்ற ஊரை சேர்ந்த நெசவு தொழிலாளரான ரா. முனுசாமி முதலியார் மங்களம்மாளுக்கு மகளாய் இதே தினம் 1898 ல் தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோகன்ஸ் பர்க்கில் பிறந்தார் வள்ளியம்மை.
தென்னாப்ரிக்காவில் ஆட்சியை கைப்பற்றி குடியேறிய ஆங்கிலேயர்கள் கரும்பு பண்ணைகள்,சுரங்கங்களில் வேலைப்பார்க்க கறுப்பினத்தவரை முதலில் வேலைக்கு வைத்தாலும் அவர்கள் பல சமயங்களில் முரண்டு பிடித்ததால் வேறு வாய்ப்புகளை நோக்கினார்கள் .அப்பொழுது தான் இந்தியர்கள் முதலிய காலனி நாட்டு மக்கள் கண்ணில் பட்டார்கள் அவர்களை அங்கே கொண்டு போய் கடுமையான வேலை வாங்கினார்கள் .
மிகவும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள் இந்தியர்கள் . அப்படி கூலித்தொழிலாளியாக முனுசாமி மங்கம்மாள் எனும் தில்லையாடியை சேர்ந்த தம்பதியினர் அங்கே போனார்கள். அங்கு சிறிய பழக்கடை நடத்தி வந்தார் முனுசாமி முதலியார்.
தலைக்கு மூன்று பவுன் கட்ட வேண்டும்,மிகக்குறைந்த கூலி,பின்னியெடுக்கும் வேலை,ஓட்டுரிமை மறுப்பு,வெள்ளையர் பள்ளிகளில் இடம் மறுப்பு,தொடர்வண்டிகளில் வெள்ளையருடன் இணைந்து பயணிக்க அனுமதி மறுப்பு ;தனிப்பகுதிகளில் சுகாதார வசதியின்றி,ஒதுங்க ஒழுங்கான இடமின்றி என எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தனர்.
பாலசுந்தரம் என்பரது வழக்கில் வாதாடிய காந்தி இருபது வருடங்கள் அங்கேயே இருந்தார். 1912 இல் தலைவரி ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வந்தது ; ஓராண்டாகியும் அது அமல்படுத்தப்படாத நிலையில் சியர்லே எனும் நீதிபதி கிறிஸ்துவ முறைப்படி செய்துகொண்ட திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்,மற்ற திருமணங்கள் செல்லாது என்றார் .இதன் மூலம் தாய், தந்தை, பிள்ளைகள் என்கிற பந்தம் சட்டப்படி செல்லாமல் போனது . மேலும்,எல்லா இந்திய கூலிகளும் தங்களின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது .இதை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது .
அந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு எண்ணற்ற மக்களுக்கு உதவும் பணியை பெருமையாக செய்து கொண்டிருந்தார் பதினைந்து வயது சிறுமி வள்ளியம்மை.
புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்க டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. அதுவரை பெண்களை, குழந்தைகளை போராட்டத்தில் அவ்வளவு முனைப்பாக ஈடுபடுத்தாத காந்தி முதல்முறையாக அவர்கள் கலந்து கொள்ள செய்தார். அதில் வள்ளியம்மையும் டிரான்ஸ்வாலிருந்து நியு காசில் என்னும் நட்டால் நகருக்கு 1913 அக்டோபர் 29 தேதியில் நடைபெற்ற அனுமதியில்லா ஊர்வலத்தில் தன் தாயார் மங்களம்மாளுடன் கலந்து கொண்டார்.
வெள்ளை அதிகாரி ஒருவன் காந்தியை சுட துப்பாக்கியை நீட்டிய பொழுது,"என்னை முதலில் சுடு பார்க்கலாம்" என தைரியமாக கூறியவர் வள்ளியம்மை
பின்பு 1913 டிசம்பர் 22ல் வால்கரஸ்ட் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மேரிட்ஸ் பர்க் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார், அபராதம் செலுத்தினால் விடுதலை என்ற போது,"அது சத்யாகிராகிக்கு இழுக்கு "என நெஞ்சுரத்தோடு மறுத்தார் அவர்.
ஒரு ஆங்கிலேய அதிகாரி, "சொந்தக்கொடி கூட இல்லாத நாட்டு கூலிகளுக்கு இவ்வளவு வெறியா ?"எனக்கேள்வி எழுப்பியதும்,தன் முந்தானையை கிழித்து அந்த அதிகாரி முகத்தில் எறிந்து,"இதுதான் எங்கள் தேசியக்கொடி "என்றதும் வள்ளியம்மை தான். சுகாதாரமற்ற சிறை வாழ்க்கை அவரின் உடல்நிலையை உருக்குலைத்தது; கடுமையாக சிறுபெண் எனப்பாராமல் வேலை வாங்கினார்கள், பலவீனமடைந்த அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் ஆங்கிலேயர்கள். தலைவரி ரத்து செய்தால் தான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்று அடம்பிடித்து பின்னர் அச்சட்டம் ரத்து செய்த பின் சிறையில் இருந்து வெளியே வந்து பத்து நாள் போராட்டத்துக்கு பிறகு 16 வயதில் அவரது பிறந்த நாள் அன்று இறந்து போனார் அந்த வீர மங்கை.
காந்தி இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள் தில்லையாடி வள்ளியம்மை .அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’ என்று உணர்ச்சி மேலிட எழுதினார் .
அந்தப் போராட்டத்தின் காரணமாக இந்தியர்களின் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்பட்டது. எல்லாத் திருமணங்களும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன.
ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட பிராம்பான்டேன் கல்லறை தோட்டத்தில் அவருக்கு நினைவு சின்னம் ஒன்று காந்தி இந்தியா திரும்ப 3 நாட்களுக்கு முன் 15 ஜூலை 1914 எழுப்பினர், காந்தி அதில் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் முலம் 1915 ஏப்ரல் 29 மயிலாடுதுறை வந்த காந்தி தரங்கம்பாடி சென்று அங்கிருந்து மே 1 அன்று தில்லையாடிக்கு வந்த பொழுது அந்த மண்ணை அப்படியே கண்களில் ஒற்றிக்கொண்டு கண் கலங்கினார். அந்த இடத்தில் வள்ளியம்மைக்கு மணிமண்டபம் கட்டபட்டது. காந்தி வந்த நூற்றாண்டு தினத்தை திருப்பனந்தாள் காசி மடம் சிறப்பாக கொண்டாடியது.
. . . .
. . . .
. . . .
. . . .