*“எந்த இடத்தில்...யாராக இருந்தாலும், நாம் மக்களை சந்திப்பதற்கு எப்போதும் ஒரு காரணம் இருக்கும்.*
*ஒன்று அவர்கள் நமது வாழ்க்கையை மாற்றுவார்கள், அல்லது நாம் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுவோம்.”*
ஆங்கிலத்தில் பகிரப்பட்ட அருமையான பதிவு!
தமிழில்....
ஒருமுறை நான் என் நண்பருடன் கடவுச் சீட்டு (passport) அவசரப் பிரிவில் (Tatkal) விண்ணப்பிக்க கடவுச்சீட்டு அலுவலகம் (Passport office) சென்றிருந்தேன்.
நாங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம், நாங்கள் பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டிய இடத்தை அடைந்த போது பணியில் இருந்த எழுத்தர் அங்கிருந்த டிக்கட் கவுன்டரை மூடி விட்டு நேரம் முடிந்தது, நாளை வாருங்கள் என்றார்.
ஒரு நாள் முழுவதும் காத்திருந்து விட்டோம், கட்டணம் செலுத்துவது மட்டுமே உள்ளது ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினோம்.
அந்த எழுத்தரோ வருத்தமும் கோபமுமாக “நீங்கள் நாள் முழுவதும் செலவழித்தது என் தவறு அல்ல..
அதற்கு நான் பொறுப்பும் அல்ல...
தேவையான அதிக நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியது அரசின் கடமை. காலை முதல் நான் என் வேலையைச் செய்து வருகிறேன். . " என்று கூறினார்.
என் நண்பர் மிகுந்த ஏமாற்றத்தோடு நாளை மீண்டும் வருவோம் என்று கூறினார்.
நான் அவரிடம் கொஞ்சம் காத்திரு நான் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறேன் என்றேன்.
எழுத்தர் தனது சாப்பாட்டுப் பையுடன் எழுந்தார். நான் எதுவும் பேசாமல், அமைதியாக அவரைப் பின்தொடர்ந்தேன்.
அவர் அலுவலகத்தில் இருந்த கேண்டீனுக்குச் சென்று, தனது பையில் இருந்து மதிய உணவை எடுத்து மெதுவாக தனியாக சாப்பிடத் தொடங்கினார்.
நான் அவர் முன்பு இருந்த இருக்கையில் அமர்ந்தேன். உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்றும், தினமும் பல புதிய நபர்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறினேன்.
அதற்கு அவர் ஆம், தான் நிறைய மூத்த அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களை சந்திப்பதாகவும்,
தினமும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள், எம்எல்ஏக்கள் இங்கு வந்து என் நாற்காலியின் முன் வந்து காத்திருக்கிறார்கள் என்றார்.
அப்போது நான் அவரிடம் உங்கள் தட்டில் இருந்து ஒரு ரொட்டி சாப்பிட தரமுடியுமா? என்றேன். அவர் சரி என்றதும் அவருடைய தட்டில் இருந்து ஒரு ரொட்டியை எடுத்து, காய்கறியுடன் சாப்பிட ஆரம்பித்தேன்.
உணவைப் பாராட்டினேன், உங்கள் மனைவி மிகவும் சுவையாக சமைத்திருக்கிறார் என்றேன்.
நீங்கள் மிக முக்கியமான இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறீர்கள். எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் கடவுச் சீட்டு வாங்க வேண்டும் என்றால் உங்களைத் தேடி வரவேண்டும்.
இந்த அளவு மதிப்புமிக்க நாற்காலியில் அமர நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி, மேலும் மிகவும் பொறுப்புமிக்க வேலை செய்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு, உங்கள் வேலையை மதிக்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு,
நீங்கள் உங்கள் வேலையை மதிக்கவில்லை என்று நானே பதிலும் சொன்னேன்.
“அதை எப்படி நீங்கள் சொல்ல முடியும்?" என்று கோபித்துக் கொண்டார்.
அவரிடம் நான் பொறுமையாக
உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மரியாதை இருந்தால், நீங்கள் இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டீர்கள் என்று சொன்னேன்.
நீங்கள் அலுவலக கேண்டீனில் தனியாக சாப்பிடுகிறீர்கள், நண்பர்கள் கூட இல்லை,
உங்கள் இருக்கையில் கூட விரக்தியுடன் உட்கார்ந்து, நாடி வரும் மக்களின் வேலையை முடிப்பதற்கு பதிலாக அலைக்கழிக்கிறீர்கள்.
காலையில் வெளி ஊர்களில் இருந்து வரும் மக்கள், காத்திருந்து கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவாமல் “அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்த அரசாங்கத்திடம் கேளுங்கள்." என்று பதில் சொல்கிறீர்கள்.
ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள், அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டால், உங்கள் முக்கியத்துவம் குறையாதா? அல்லது ஒருவேளை இந்த இடம் உங்களிடமிருந்து பறிக்கப்படலாம்.
உறவுகளை உருவாக்க கடவுள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். ஆனால் உங்கள் துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள், அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, நீங்கள் உறவுகளைக் கெடுக்கிறீர்கள்.
இதனால் எங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. நாளையோ அல்லது நாளை மறுநாளோ கூட நாங்கள் வரமுடியும்.
ஆனால் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த, ஒருவருக்கு உதவ. உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது..அதை நீங்கள் தவற விட்டீர்கள் என்று சொன்னேன்.
மேலும்,
நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம்,ஆனால் எந்த உறவையும் சம்பாதிக்கவில்லை என்றால் எல்லாம் பயனற்றது.
பணத்தை வைத்து என்ன செய்வீர்கள்? உங்கள் நடத்தையை நீங்கள் மாற்றாவிட்டால், உங்கள் குடும்ப உறுப்பினர்களும் உங்களுடன் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். மேலும் உங்களுக்கு நண்பர்கள்! கூட இருக்க மாட்டார்கள் என்றேன்.
நான் பேசுவதைக் கேட்ட அவர் கண்ணீர் விட்டார்.
நீங்கள் சொல்வது சரிதான்.
நான் தனியாக இருக்கிறேன்.
தகராறும் மன வருத்தமும் ஏற்பட்டு என் மனைவி அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். குழந்தைகளுக்கும் என்னைப் பிடிக்காது. என் அம்மாவும் என்னிடம் அதிகம் பேசுவதில்லை.
அவள் காலையில் நான்கைந்து ரொட்டிகள் செய்து தருகிறார். இங்கே நான் தனியாக சாப்பிடுகிறேன். இரவில் வீட்டுக்குச் செல்வதைக் கூட விரும்புவதில்லை என்று கூறிவிட்டு எங்கே தவறு செய்தேன் என்று புரியவில்லை? என்று கூறினார்.
நான் அவரிடம் மெதுவாக சொன்னேன், "மக்களின் இதயங்களோடு தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒருவருக்கு உதவ முடிந்தால், அதைச் செய்யுங்கள். என்னிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் உள்ளது. என் நண்பரின் பாஸ்போர்ட்டிற்காக நான் இங்கு வந்துள்ளேன். என் சுயநலத்திற்காக இல்லாமல் ஒரு நண்பருக்காக நான் உங்களிடம் கெஞ்சினேன். அதனால்தான் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு இல்லை. ” என்றேன்.
அவர் எழுந்து என்னை கவுன்டருக்கு வரச்சொன்னார். என் நண்பரின் படிவத்தையும் மற்றவர்களின் படிவத்தையும் வாங்கினார்.
பின்னர் அவர் எனது தொலைபேசி எண்ணைக் கேட்டார், நான் கொடுத்தேன்.
ஆண்டுகள் பல கடந்துவிட்டன.
இந்த ரக்ஷா பந்தன் அன்று எனது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது ...
ரவீந்திர குமார் சவுத்ரி பேசுகிறார், ஐயா. பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு நண்பரின் பாஸ்போர்ட்டிற்காக வந்திருந்தீர்கள், நீங்களும் என்னுடன் ரொட்டி சாப்பிட்டீர்கள். பணத்திற்கு பதிலாக உறவுகளை உருவாக்குங்கள் என்று சொன்னீர்கள் என்றார்
எனக்கு ஞாபகம் வந்தது.
நான் "ஆம், எப்படி இருக்கிறீர்கள் சவுத்திரி சாப்” என்று கேட்டேன்.
அவர் மகிழ்ச்சியுடன் "ஐயா, நீங்கள் அன்று சென்ற பிறகு, நான் நீண்ட நேரம் யோசித்தேன்.
அது உண்மை என்று உணர்ந்தேன். நிறைய பேர் தங்கள் வேலையைச் செய்ய பணம் கொடுக்கிறார்கள், ஆனால் உட்கார்ந்து உணவு சாப்பிட யாரும் இல்லை.
அடுத்த நாள் நான் என் மனைவியின் தாய் வீட்டிற்குச் சென்றேன், நிறைய சமாதானமாகப் பேசி, அவளை வீட்டிற்கு அழைத்தேன் அவள் சம்மதிக்கவில்லை, அவள் சாப்பிட உட்கார்ந்தாள், நான் அவள் தட்டில் இருந்து ஒரு ரொட்டியை எடுத்து, நீ எனக்கு உணவளிப்பாயா? என்று கேட்டேன், அவள் ஆச்சரியப்பட்டு அழ ஆரம்பித்தாள்.
அவள் என்னுடன் வீட்டிற்கு வந்தாள், குழந்தைகளும் உடன் வந்தார்கள்.
ஐயா, இப்போது நான் பணத்தை பெரிதாக நினைக்கவில்லை, உறவுகளை சம்பாதிக்கிறேன். என்னிடம் யார் வந்தாலும், அவருடைய வேலையை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன்.
ஐயா இன்று ரக்ஷாபந்தன் வாழ்த்துச் சொல்ல உங்களை அழைத்தேன், ஏன் தெரியுமா? மக்களுடன் எப்படி தொடர்புகொள்வது, உறவுகளில் எப்படி ஈடுபடுவது என்பதை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்.
அடுத்த மாதம் என் மகளின் திருமணம். நீங்கள் வந்து என் மகளை ஆசீர்வதிக்க வேண்டும்.
நீங்கள் உறவுகளை மீண்டும் ஏற்படுத்தியவர்...
அவர் பேசிக்கொண்டே போனார், நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்.
ஒரு நாள் நான் பேசியது அவரது வாழ்க்கையை பாதிக்கும், என்றும் இந்த அளவு பணத்தை விட உறவுகளை மதிப்பவராக மாறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆம்,
உறவுகள் என்பது நண்பர்கள்,
தெரிந்த அல்லது தெரியாத மக்கள், மற்றும் நாம் சந்திக்கும் நபர்களின் உணர்ச்சிகளின் மீது கட்டமைக்கப்படுகின்றன.
வாழ்க்கை மிக வேகமாக ஓடுகிறது. ஒருமுறை நின்று சுற்றிப் பார்க்கவில்லை என்றால் நமக்குத் தான் இழப்பு.
*அறிவும் விதிகளும் உறவுகளை உருவாக்காது.*
இயந்திரத்தனமாக விதிகளை மட்டுமே பிடித்துக் கொண்டு வேலை செய்கிறவர்களைவிட,
மனித நேயத்தோடும்
உதவும் உயர்ந்த உள்ளத்தோடும்
வேலை செய்பவர்களே மகத்தான மனிதர்கள்.
*நாம் இயந்திரங்கள் அல்ல, இதயம் உள்ள மனிதர்கள்.*
எந்த வேலையாக இருந்தாலும்
உதட்டில் சிறு புன்னகையோடு செய்வோம்.
அது தரும் நம்பிக்கையையும்,
தைரியத்தையும் எதனாலும் தரமுடியாது
*நாம் மேலே உயர்வது*
*நம்மை பிறர் பார்க்க அல்ல*
*நாம் பிறரைப் பார்க்க.*
சமூக அக்கறை உள்ளோர் பகிரலாமே...!
நன்றி இணையம்