*வந்தே பாரத் ரயிலைத் தொடர்ந்து*
*புதிதாக வருகிறது வந்தே சாதாரண் ரயில்!*
திருநெல்வேலி, அக்.11–
வந்தே பாரத் ரயிலின் வரவேற்பைத் தொடர்ந்து புதிதாக வந்தே சாதாரண் ரயில் இந்தாண்டு இறுதிக்குள் இயக்கப்படுகிறது. இதற்கான ரயில் பெட்டிகள் வடிவமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – கோவை, நெல்லை – சென்னை. இந்த இரு ரயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் தென் மாவட்ட மக்களின் வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கான ஆதரவைத் தொடர்ந்து வந்தே சாதாரண் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான ரயில் பெட்டிகள் வடிவமைக்கும் பணி சென்னை ஐ.சி.எப்.,பணிமனையில் மும்முரமாக நடந்து வருகிறது.
22 பெட்டிகள்:
வந்தே பாரத் ரயில்போலவே ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்தில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 22 பெட்டிகளை கொண்டது. இதில் 8 பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டியாகவும், 12 பெட்டிகள் சிலிப்பர் பெட்டியாகவும், 2 பவர்கார் பெட்டிகள் கொண்டதாகவும் உள்ளது. இந்த ரயிலில் ஏ.சி.,பெட்டிகள் கிடையாது.
பெட்டிகளின் சிறப்புகள்:
வந்தே சாதரண் ரயில் பெட்டிகளில் பயோ வேக்யூம் டாய்லெட்கள், பயணிகள் தகவல் அமைப்புகள் மற்றும் சார்ஜிங் பாயின்ட்கள் போன்ற பல்வேறு நவீன வசதிகள் இருக்கும் படியாக உள்ளது. வந்தே பாரத் ரயிலுக்கு இணையாக இந்த ரயில் பெட்டிகளை சிறப்புடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சி.சி.டி.வி.,கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
130 கிலோ மீட்டர் ‘ஸ்பீடு’
வந்தே பாரத் ரயிலை போலவே 2 இன்ஜின்கள் கொண்டது. 130 கிலோ மீட்டர் ஸ்பீடு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ரயிலுக்கான இன்ஜின்கள் “வழக்கமான ரயில்களைப் போலல்லாமல், முன்பக்கம் ஒரு இன்ஜின் பின்பக்கம் ஒரு இன்ஜின் *"புஷ்-புல் ரயிலாக"* பெட்டிகளை இழுத்துச் செல்லும். இன்ஜின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது அதிக முடுக்கம் மற்றும் வேகத்தை குறைக்கும்,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
"புஷ்-புல் ரயிலுக்காக" சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரிக்கும் இன்ஜினின் ஏரோடைனமிக்ஸ், வந்தே பாரத் ரயிலைப் போல மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘வந்தே சாதாரண் ரயிலுக்கான பெட்டிகள் வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பயணிகள் சொகுசான பயணத்தை அனுபவிக்கும் வகையில் வழக்கமாக இல்லாமல் பல்வேறு மாற்றங்கள் இந்த பெட்டியில் செய்யப்பட்டுள்ளது. முதன் முதலில் எந்த வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்குவது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும்.’’ என்றார்.
சாதாரண கட்டணம்:
இந்த வந்தே சாதாரண் ரயில் துவக்க தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்தாண்டு இறுதிக்குள் இந்த ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் அதிக கட்டணத்துடன் இயக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், வந்தே சாதாரண் ரயிலின் மூலம் நீண்ட தூரம் பயணிக்கும் அனைத்து பயணிகளும் பயனடையும் வகையில் திட்டமிடப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
*16 பெட்டி கொண்ட வந்தேபாரத் இரயிலை தயாரிக்க சுமார் ₹108 கோடிகள் செலவாகும்போது, வந்தேசாதாரண் 22 பெட்டிகளுடன் சுமார் ₹65 கோடிகள்தான் செலவாகும்*
*எதிர்பார்க்கப்படும் வந்தே சாதாரண் சேவைகள்*
1) பாட்னா - புது டெல்லி
2) ஹவுரா - புது டெல்லி
3) மும்பை - புது டெல்லி
4) ஹைதராபாத் - புது டெல்லி
5) எர்ணாகுளம் - கௌஹாத்தி
படிப்படியாக சோதனைமுயற்சிகளை தொடரந்து நாடுமுழுவதும் இவ்வசதி விரிவாக்கப்படும்.
நன்றி
இணையம்