ஆயுதங்களை
எல்லாம் அகற்றிவிட்டு,நிராயுதபாணியாக
தன் குதிரையிலிருந்து இறங்கி,அமைதியாக
அந்தப் படைகளை நோக்கி நடந்து வருகிறார் அவர்.
முதல்
வரிசை வீரனின் துப்பாக்கி முன் வந்து நின்று,
"இதோ
உங்கள் முன் உங்கள் அரசனாகிய நான் நிற்கிறேன்...சுடுங்கள்...தாராளமாகச்
சுடுங்கள்" என்று அந்த படை வீரனின் கண்ணுக்கு கண் நோக்கி உரத்த குரலில்
கூறுகிறார்.
அடுத்த
நொடி,மொத்தப் படையும் ஆயுதங்களை கீழேப் போட்டுவிட்டு,பேரரசர் வாழ்க என்ற விண்ணைப் பிளக்கும்
முழக்கமிட்டபடி,அவருடன் மீண்டும் சேர்ந்து
கொள்கிறது.
தன்னை
உயிருடனோ,பிணமாகவோ கொண்டு வருவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட
அந்தப் படைகளுக்குத் தலைமை தாங்கி மீண்டும் தன் நாட்டின் தலைநகருக்குள் நுழைகிறார் அவர்.
மன்னர்
வாழ்க என்ற கோஷத்தில் தலைநகரம் அதிர்கிறது.
"அவர்
ஒருவர் போதும்.நாற்பதாயிரம் படைவீரர்களுக்குச் சமம் அவர்."--இது அவருடனான
இறுதிப் போரில்-அவரை வென்ற தளபதி வெலிங்கடன் தன் கைப்பட எழுதி வைத்த கூற்று.
"அவரைக்
கைது செய்து 2000 கி.மீ தொலைவில்,ஒரு
தனித்தீவில் அடைத்த பின்பும்,எங்கே
தப்பி வந்து,மீண்டும் படை திரட்டி
விடுவாரோ" என்ற பதட்டம் அவருடைய எதிரிகளுக்கும்,எப்படியும் நம் மன்னர் தப்பிவிடுவார்,தப்பிவந்து மீண்டும் நம் நாட்டை ஆள்வார் என்ற
நம்பிக்கை அவருடைய சொந்த நாட்டு மக்களுக்கும் அவரது மரணம் வரை இருந்தது.
"அவருடன்
பேச்சுவார்த்தை மட்டும் நடத்தாதீர்கள்.ஐந்தே ஐந்து நிமிடம் அவர் பேசினாலே
போதும்.ஆயதங்களே தேவையில்லை,எப்பேற்பட்ட
நெஞ்சுரம் கொண்ட தலைவரையும் வீழ்த்தி விடுவார்" என்று அவரை எதிர்த்துப்
போரிட்ட மற்றொரு நாட்டு தளபதி தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி தன் நட்பு நாடுகளுக்கு
அனுப்பி வைத்ததாக ஒரு செய்தி உண்டு.
இந்திய
தேசிய இராணுவத்தைக் கட்டமைத்து,அன்றைய
இந்தியாவின் கிழக்கு வாயிலான பர்மா வரையிலும் வந்து-இனி அடுத்து டெல்லி தான் என்ற
நிலையில் மர்மமாக முடிந்து போன நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையைப் போன்றது
தான் "அவருடைய" வாழ்க்கையும்.
யார்
அந்த அவர்?
அவர்
தான்,ஐரோப்பாவின் எங்கோ ஒரு மூலையில்,ஒரு சிறு தீவில்,சாதாரண குடும்பத்தில் பிறந்து,அடிப்படை சிப்பாயாக பிரான்ஸ் இராணுவத்தில்
சேர்ந்து-தன் சுய திறமையால் முன்னேறி,இறுதியில்
அந்நாடிற்கே பேரரசனாக மாறி-ஒட்டு மொத்த உலகையே கிடுகிடுக்க வைத்த
ஆட்சியாளர்-இராணுவத் தளபதி,
"நெப்போலியன்
போனப்பார்ட்"
பிரான்ஸின்
நாட்டின் தலையெழுத்தை மட்டுமல்ல,சூரியன்
எங்கள் நாட்டில் மறைவதேயில்லை என்று இறுமாப்புடன் திரிந்த இங்கிலாந்துப் பேரரசின்
இடுப்பில் ஓங்கிக் குத்திய மாவீரன்.
தன்
இறுதி யுத்தமான வாட்டர்லூ போரில் மட்டும் நெப்போலியன் வென்றிருந்தால்,இன்று ஐரோப்பாவின் தலைமையகமாக பிரான்ஸ்
இருந்திருக்கும்.இந்தியாவில் இருந்து நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னமே
இங்கிலாந்து வெளியேற்றப்பட்டு,இந்தியா
பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகயிருக்கும்.இங்கிலீஷ் என்ற மொழிக்கு இவ்வளவு
முக்கியத்துவம் இருந்திருக்காது.இங்கிலாந்து என்ற நாடும் இருந்திருக்காது.ஒருவேளை
ஐரோப்பா என்ற ஒரு கூட்டமைப்பே கூட உருவாகாது கூட போயிருக்கும்.
இப்படி
எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.......
அத்தனையையும்
நடக்க விடாமல்,உலக வரலாற்றை வேறு பாதைக்குத்
திருப்பிய,
மாவீரன் நெப்போலியன் போனபார்ட் மறைந்த தினம்
நன்றி இணையம்