அடியார்களின் அறியாமையைப் போக்கவே

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:34 | Best Blogger Tips

 


புகழ்பெற்ற கவிஞரான திரு கண்ணதாசன் ஒருமுறை காஞ்சிபுரம் பரமாச்சார்யாரை சந்தித்தார். வழக்கம்போல ஆன்மீக விசாரங்கள் நடைபெற்றது. கண்ணதாசன் ஆன்மீகப் பாதையில் திரும்பும் முன் நாஸ்திகக் கொள்கையாளராகவும், மதங்களை விமர்சித்துக் கட்டுரை எழுதுபவராகவும் இருந்தார். ஆனால் பரமாச்சார்யார் அவரை தேவையற்ற பகுத்தறிவுவாதத்தில் இருந்து வெளிக்கொணர்ந்து, மெது மெதுவே ஆன்மீக ஞானம் பெற செய்தார்.


ஆனால் அடிப்படையில் விமர்சனம் செய்யும் போக்கானது தொடரவே செய்த்து அவரிடம்.

*கண்ணதாசன் கேட்டார், “பால் வெண்மை நிறமானது. ஆனால் பாற்கடல் ஏன் மேகவர்ணமாய் காட்டப்படுகிறது? இறைவனான ஸ்ரீவிஷ்ணுவின் நிறம், பாற்கடலில் கலந்து விட்டதா?”*.

ஆச்சார்யார் சிரித்துக் கொண்டே உனக்கான பதில் மதியம் கிடைக்கும் என்று கூறி கண்ணதாசனை குழப்பத்தில் ஆழ்த்தினார்.


அன்றைய தினம் மதியத்தில் உம்மிடியார் மடத்திற்கு வந்தார். கண்ணதாசனும் உம்மிடியாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்குள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். பின்னர், உம்மிடியார் ஒரு பச்சை மரகதக்கல்லை ஆச்சார்யாரின் பாதத்தில் ஏற்றுகொள்ள வேண்டிச் சமர்ப்பித்தார்.

கல்லுக்கும் மணிக்கும் பாகுபாடு பார்க்காத ஆச்சார்யார், காரியதரிசியை அழைத்து பாத்திரத்தில் பால் கொண்டு வரப் பணித்தார். பாலில் மரகதத்தை முக்கினார் ஆச்சார்யார். நகைத் தொழிலில், கல்லின் தரத்தைச் சோதிக்கப் படும் முறை அது. உம்மிடியாரோ திகைத்துப் போனார்.

தன் குணத்தின் பேரில் சந்தேகமா இல்லை மரகதத்தின் பெயரில் சந்தேகமா என்று உம்மிடியார் குழம்பிப் போனார். ஆச்சார்யார் பொறுமையாக கண்ணதாசனை அழைத்துப் பாலைக் காட்டினார். வெளிர்பச்சை வர்ணத்தில் பால் மாறிப்போய் இருந்தது.

வாயடைத்துப் போன கண்ணதாசனிடம் ஆச்சார்யர் விளக்கலானார். *மரகதத்தால் பால் எப்படி பச்சை வர்ணம் பெற்றதோ அதைப் போலவே ஸ்ரீமந் நாராயணனை ஏந்திக் கொண்டிருக்கும் பாற்கடலும், அவனது வர்ணத்தைப் பெறுகிறது*. அதனாலேயே மேகவர்ணமாய் இருக்கிறது என்று விளக்கினார்.

*கண்ணில் நீர்பெருக்கெடுத்த கண்ணதாசன், “திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமந் நாராயணாஎன்ற அற்புதப் பாடலை இயற்றினார்.*

உம்மிடியாரிடம் இந்த மரகதத்தை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு மகுடம் செய்து அதில் பதிக்கும்படி கேட்டுக் கொண்டார். தன் மீது சந்தேகம் கொண்டு அவமானப்படுத்தப்பட்டு விட்டதாய் தவறாக நினைத்தமைக்கு மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார் உம்மிடியார்.

கல்லின் தன்மையைச் சோதிக்க அல்ல, அடியார்களின் அறியாமையைப் போக்கவே என்று புரிந்து கொண்டார்.

 

 நன்றி இணையம்