காமாட்சி அம்மன் கையில் கரும்பு

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:11 | Best Blogger Tips

 


காமாட்சி அம்மன் கையில் கரும்பு வைத்திருப்பது ஏன்?

 

அன்பின்(காதலின்) கடவுளான மன்மதனிடம் தான் கரும்பு வில்லும் ஐவகை மலர் அம்புகளும் இருக்கும்.

 

ஆனால், காஞ்சி காமாட்சியும் தனது கையில் கரும்பு வில்லை வைத்திருப்பதற்கு என்ன காரணம்?

 

அன்னை காஞ்சி காமாட்சி கையில் வைத்திருக்கும் கரும்பில் ஒரு சூட்சும

ரகசியம் மறைந்து உள்ளது.

 


காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன்

தனது கையில் கரும்பு வைத்திருப்பதை பலரும் பார்த்து இருப்போம்.

 

உண்மையில் அது தேவி புராணத்தின் படி வெறும் கரும்பு அல்ல,அது ஒரு

கரும்பு வில்.

 

அதில் நாணேற்றி தொடுக்கும் வகையில் புஷ்ப பானத்தையும் காமாட்சி அம்மன் உடன் வைத்திருக்கிறாள்.

 

காமாட்சி அம்மன் எதற்காக கையில் கரும்பை வைத்திருக்கிறார் என்று காஞ்சி பெரியவர், கூறியதை பார்க்கலாம்.

 


அன்னை காமாட்சி கைக்கு கரும்பு வில் வந்த கதை:

 

சூரபத்ம சகோதர அசுரர்களின் தொல்லை, தேவர்களை அதிகளவில் துயரப்படுத்தியதையடுத்து, சிவ மைந்தனால் மட்டுமே சூரபத்மனை அழிக்க முடியும் என்ற நிலையில், சிவனும், பார்வதியும் தனித்து இருந்தால், அது எப்படி சாத்தியமாகும் என்று, தேவர்களின் வற்புறுத்தலின் பேரில் தவம் செய்து கொண்டிருந்த சிவபெருமானின் தவத்தை கலைப்பதற்காக மன்மதன், சிவபெருமான் மீது மலர் கணைகளை ஏவினான்.

 

அதனால், கடும் கோபமடைந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.

 

போரில் தோற்றவர்களின் பொருட்கள், வெற்றி பெற்றவரிடம் சேரும் என்ற விதியின்படி, மன்மதன் கையில் இருந்த கரும்பு வில் சிவனிடம் வந்தது.

 

கால மாற்றத்தில், சிவபெருமான், அன்னை பார்வதியை மணந்த பிறகு ஈசனின் கையில் இருந்த கரும்பு வில், அன்னை பார்வதியின் கைக்கு மாறியது.

 

அன்னை பார்வதியே சிவனை இடையே வேண்டி காமாட்சியாக அவதாரம் பெற்றாள்.

 

அதனால் தான், “ஸுமபாணேக்ஷ கோதண்ட மண்டிதாஎன்று போற்றப் படுகிறாள் அன்னை காமாட்சி.

 

மன்மதனின் மலர்க் கணைகள் மல்லிகை, நிலோத்பலம், தாமரை, மா, அசோகம் ஆகிய ஐந்து வகை மலர் அம்புகளையும், கரும்பு வில்லையும் தனது கரத்தில் ஏந்தியபடி காட்சி தருகிறாள் அன்னை காமாட்சி.

 

அன்பும் பாசமும் எப்போதும்

ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கவே மன்மதனிடம் இருந்து அன்னை கரும்பு வில்லை வாங்கி வைத்திருக்கிறாள் என்று காஞ்சி மகாபெரியவர்   சொல்லி இருக்கிறார்.

 

அது மட்டுமல்ல மன்மதனை சிவனார் எரித்த பிறகு, சக்தியின் வேண்டுதலுக்காக மன்மதனுக்கு உயிர் கொடுத்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும் விதமாக மாற்றினார்.

 

ஆனாலும் மன்மதன் தனது எல்லை மீறாமல் இருக்கவும், தர்மநெறி தவறாமல் வாழும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் தன் திருக்கரத்தில் கரும்பை ஏந்தியபடி அன்னை காமாட்சி காட்சி தருக்கிறார்.

 

மன்மதனின் கையில் இருந்த கரும்பு வில் மோகத்தைத் தூண்டக்கூடியது.

 

ஆனால் காமாட்சியின் கையில் இருக்கும் கரும்பு வில்லோ, காமத்தை அடக்கி ஆன்மீகத்தில் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

 

இதுவே அன்னை காஞ்சி காமாட்சி கையில் வைத்திருக்கும்  கரும்பில் மறைந்திருக்கும்  சூட்சும ரகசியமாகும்.

நன்றி இணையம்