யாருக்கும் தீங்கின்றி நல்லெண்ணெத்தோடு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:39 PM | Best Blogger Tips


சுபுஹு தொழுதுவிட்டு தனது மளிகை கடையை திறந்த தீன் காக்கா காலண்டரில் 10.06.1984 என்ற தேதியை கிழித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். பணியாட்கள் சாமான்களை பரத்த ஆரம்பித்தனர். வியாபாரமும் ஆரம்பித்து சூடுப்பிடித்து ஓய்ந்திருந்த நேரம்.


கடைக்கு வெளியே பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அலங்கோலமாக நின்றிருந்தான். அவனது கோலம் பிச்சை கேட்பதாக காக்காவுக்கு தோன்றியது.


தம்பி இங்கிட்டு வா..!” என்று கூப்பிட்டு 20 பைசாவை நீட்டினார். வந்தவன் எந்த அசைவுமின்றி சுரத்தில்லாமல்பசிக்குது..!” என்றான். ஒரு வட்டபன்னை எடுத்து அவனிடம் நீட்டினார். வாங்கிக் கொண்டு செல்ல எத்தனித்தவனிடம்இங்கேயே உட்கார்ந்து சாப்பிடு..!” என்று வெளியில் கிடந்த முக்காலியை காட்டினார். வீட்டிலிருந்து தேத்தண்ணி வரவே அதில் அவனுக்கு ஒரு லோட்டாவில் ஊத்தி கொடுத்துவிட்டுஇன்னொரு வட்ட பன்னு சாப்பிடுறியா..!” என்றார்.


வேணா போதும்..” என்றவன் தேத்தண்ணியை குடித்துவிட்டுகெளம்புறேன்..!” என்றான், “இங்கிட்டு வா.. உன்னோட அப்பா அம்மா எங்கே..? ஏன் இப்படி இருக்குறே..?” என்றார் காக்கா.


அம்மா இல்ல.. அப்பா இறந்து ஏழு நாளாச்சு..! நா பக்கத்துல கரியாப்பட்டிணம்..” என்றான். தீன் காக்கா கண்ணீர் விட்டுவிட்டார். “சரிடாப்பா.. சொந்தக்காரங்க யாரும் இல்லையா..? எங்கே போறே இப்போ..?” என்றார் கரிசனத்துடன்.


யாரோடவும் இருக்க பிடிக்கல. ஏதாவது வேலை தேடி போறேன்..!” என்றவனிடம்நம்ம கடையில வேலை செய்றியா..?” என்று கேட்ட காக்கவிடம் மகிழ்வாக தலையாட்டினான். “சரி வா.. வீட்டுக்கு போய்ட்டு வருவோம்..” என்று அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.


ஜொஹரா பீவி..! இந்த பையனை புதுசா வேலைக்கு சேர்த்திருக்கேன்.. அப்துல்லா கைலி சட்டையில் நல்லதா ஒன்னு எடுத்து கொடுங்க.. காலை பசியார இவருக்கு சேர்த்து செய்யுங்க..” என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு, “என் சின்ன மவனோட கைலி சட்டை தருவாங்க.. இப்போதைக்கு போட்டுக்க, பழசுன்னு எதும் நெனச்சுக்காத, மதியம் புதுசு வாங்கி தரேன்..” என்ற காக்காவை பார்த்து மகிழ்வா சிரித்தான் மணியன்.


ஆமா.. உன் பேர் என்னுன்னு கேட்கவே இல்ல பாத்தியா.. உன் பேர் என்ன..?” என்ற காக்காவுக்குமணியன்..” என்று பதிலளித்தான் மணி..!


கடை வேலை, வீட்டு வேலை, வெளி வேலைன்னு மணி சுறுசுறுப்பா வேலை பார்த்து கொண்டிருந்தான். மூணு வேளையும் வீட்டு சாப்பாடு, அது இதுன்னு குறைவில்லாமல் ஒரு மாதமும் ஓடிவிட்டது.


மணியா.. இங்கே வாங்க..!” என்ற அழைத்த காக்காவின் குரலுக்குவந்துட்டேன் காக்கா..!” என்று வந்து நின்றான் மணியன். இந்தாங்க உங்க சம்பளம் முன்னூறு ரூபா..!” என்ற காக்காவிடம்இப்ப பணம் வேணாம் காக்கா.. நீங்களே வச்சுக்குங்க.. எனக்கு தேவைப்படும் போது கொடுங்க..!” என்ற மணிக்கு, “அப்படியா.. அதுவும் நல்லதுதான்..!” என்று அப்பணத்தை தனியே பத்திரப்படுத்தினார்..


காலங்கள் உருண்டோடியது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தாண்டிவிட்டது மணி தீன் காக்காவிடம் வேலைக்கு வந்து. இளைஞனாகி விட்டான். அவனுக்கு திருமணத்திற்கு பொண்ணு பார்க்கனும் என்ற நினைப்பில் இருந்தார் காக்கா.


காக்கா..! நா மெட்ராஸ் வரையிலும் போகனும்..!” என்று இழுத்தான் மணியன்.. “ஏனப்பா.. இப்ப மெட்ராஸுக்கு..!” என்ற காக்காவிடம், “விஜிபி கோல்டன் பீச்சுன்னு ஒன்னு இருக்காம்.. அதெல்லாம் பார்த்திட்டு மெட்ராஸை சுத்திப் பார்த்திட்டு வரேன்.. ஆசையா இருக்கு..!” என்றான் மணியன்.


உன் வாயிலிருந்து இப்பதான்ப்பா ஆசைன்ற வார்த்தையே வந்திருக்கு.. சரி சரி போய்ட்டு வா..! எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிக்க..! ஆனா பத்திரமா போய்ட்டு வரணும்.. வெள்ளந்தியான புள்ள நீ.. அதான் பயமாயிருக்கு..!” என்ற காக்காவிடம்நா என்ன சின்ன புள்ளையா காக்கா..? அதெல்லாம் பார்த்து போயிட்டு வந்திடுறேன்..! நாளைக்கு ரயில்ல கிளம்பவா..?” என்றவனுக்கும்ம்..” என்று அரை மனசா உத்தரவு கொடுத்தார் காக்கா..!


மணியன் புறப்பட்டு சென்று இன்றோடு பத்து நாளாச்சு.. இன்னும் திரும்பவில்லை எந்த தொடர்பும் இல்லை. தீன் காக்காவுக்கு கவலையாகிவிட்டது. மெட்ராஸில் அவருக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு விசாரித்த வகையில் ஒரு தகவலும் இல்லை. அவரே நேரில் சென்று மூன்று நாட்கள் மெட்ராஸில் தங்கி அலைந்து திரிந்து விசாரித்து பார்த்துவிட்டார். ஒரு தகவலும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தார்.


மணியா.. மணியா என்று மூச்சுக்கு முண்ணூறு தடவை கூப்பிடுபவர் ஊமையாகிவிட்டதை போல் உணர்ந்தார். அவனது சேமிப்பு பணத்தை பார்த்து கண்ணீர் விட்டார். தான் கடனாளியாக போய்விட்டதாக அவரது மனம் ரணமாகியது.


நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி, வருடங்களாகவும் உருண்டோடியது. மணியன் திரும்பவில்லை.


எதிர் கடை ராமச்சந்திரன் வந்து, “காக்கா.. நா கடையை காலிப்பண்ண போறேன். நீங்க வாடகைக்கு எடுத்துக்குங்க..!” என்றார். “அப்படியா.. யோசிச்சு சொல்றேன்..!” என்றார் தீன் காக்கா.


பட்டுக்கோட்டையிலிருந்து பீட்டன் பாக்கு வியாபாரி வந்திருந்தார். “காக்கா.. உங்கக்கிட்ட ஒரு யாவார சங்கதி பேசனும்..!” என்று பீடிகை வைத்தார்


சொல்லுங்க வைரவ தேவரே..!” என்ற காக்காவிடம், “மச்சினர் பெரிய அளவில் கயிறு கால்மிதியடி தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பித்திருக்கிறார். இந்த ஊருக்கு நீங்க தான் மொத்த வியாபாரம் செய்து கொடுக்கனும்..” என்றார்.


காக்கா யோசித்தார். “அப்படியா..! நாளை நா நேரில் வரேன். பொருளை பார்த்திட்டு பேசிக்கிடுவோம்..!” என்றார். மகிழ்வோடு விடைப் பெற்று சென்றார் வைரவ தேவர்.


மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு சென்றவர், “ஜொஹரா பீவி.. எதிர்க்கடை ராமச்சந்திரன் கடை காலியாகுதாம்.. நம்மள எடுத்துக்க சொல்றார்.. பட்டுக்கோட்டை வைரவ தேவர் கால் மிதியடி யாவாரம் ஆரம்பிச்சிருக்காராம்.. அதை வாங்கி எதிர் கடையில் வைத்து யாவாரம் ஆரம்பிக்கலாமான்னு யோசனையா இருக்கு..!” என்றார். “பாடுப்பட ஆள் வேணும்.. பாத்து யோச்சிச்சு செய்ங்க..!” என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார் ஜொஹரா.. “இல்ல புள்ள.. மணியன் காசு அப்படியே இருக்கு.. அவனையும் காணோம்.. அதான் அத ஒரு முதலீடா போட்டு செய்யலாமேன்னு..!” என்று இழுத்தார்.. அவரது எண்ணத்தை உணர்ந்த ஜொஹராவும் இறைவனிடம் பிரார்த்தித்தார்.


அன்று சாயங்காலமே ராமச்சந்திரனை கூப்பிட்டு கடைக்கு அட்வான்ஸை கொடுத்துவிட்டார். அடுத்த நாள் புறப்பட்டு போய் மிதியடிகளின் தரத்தையும் அழகையும் கண்டு திருப்தி கொண்டு, வைரவ தேவரின் மைத்துனரிடம் தொகையையும் கொடுத்து, பொருளை அனுப்பும்படி சொல்லிவிட்டு ஊர் திரும்பினார் தீன் காக்கா..!


அடுத்தடுத்த வாரங்களில் புதியக்கடை திறக்கப்பட்டது. மிதியடி மட்டுமல்லாமல், கயிறு, கயிறு சார்ந்த பொருட்கள், துணிப் பைகள், ட்ரங்கு பெட்டிகள், தலையனை, பாய் என பல பொருட்களை கொண்டு.


வியாபாரம் சூடுப்பிடிக்க இன்னும் பல வகையான பொருட்களை கடையில் இறக்கினார் தீன் காக்கா. நல்ல திருப்தியான வியாபாரம். போதுமான லாபம். தரமான பொருட்கள் என அக்கடை அந்நகரின் ஒரு அடையாளமாக மாறிப் போனது. தீன் காக்காவினால் நம்ப முடியவில்லை அக்கடையின் வளர்ச்சியையும் வியாபாரத்தையும்.


இவ்வாறாக அக்கடையும் ஆரம்பித்து ஏழாண்டுகளை கடந்துவிட்டது.


சுபுஹு தொழுதுவிட்டு கடையை திறந்து உட்கார்ந்தார் தீன் காக்கா. ஒருவர் தளர்வாக கடையை நோக்கி வருவதை கண்டு, பார்வையை கூர்மையாக்கினார்..


மணியா..!” என்று பதட்டமாக சொல்லியவாறு எழுந்தார் காக்கா. மணியனோ வெறுமையான பார்வையை கீழ் நோக்கி செலுத்திக் கொண்டே, “நல்லா இருக்கீங்களா காக்கா..!” என்றான். “என்னாச்சுப்பா உனக்கு..? மெட்ராஸ் போயிட்டு வரேன்னு போனவந்தான்.. ஒரு சேதியும் இல்ல.. நா தேடாத இடமும் இல்ல.. எங்கே போனே..? என்ன ஆச்சு..? ஒரு கடுதாசி கூட இல்ல..? தவிச்சு போய்ட்டேமே மணியா..!” என்றார் காக்கா கண்களில் ஈரத்துடன்.


சொல்ல முடியா வேதனைகள் காக்கா..! ஒரு பெண்ணின் மானத்தை காப்பாத்த போய் கொலை குற்றவாளியாக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றுவிட்டேன் காக்கா..! உங்கள் முகத்தை பார்க்கவும் கூச்சமா இருக்கு காக்கா..!” என்றான் மணியன்.


அப்படியல்ல மணி.. நீ தப்பு பண்ண மாட்டேடா.. நா அறிவேனப்பா..! வா.. உள்ளே வா..!” என்ற காக்காவிடம், “காக்கா.. நா ஒன்னு இல்லாதவனா அப்போ சிறுவனா உங்க முன்னாடி நின்ன மாதிரியே இப்பவும் நிக்கிறேன் காக்கா..! என் வாலிபம் சிறையில் போச்சு.. மானமும் போச்சு.. உடல் வலிவும் போச்சு.. பசிக்குது காக்கா..!” என்றான் கண்ணீருடன் மணியன்.


காக்காவும் கலங்கிவிட்டார். “அப்படி சொல்லாதடா மணியா..! நாங்க இல்லையாடா உனக்கு.. இந்தா இத முதல்ல சாப்பிடு..!” என்று பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்துவிட்டு, தேத்தண்ணியை லோட்டாவில் ஊத்தினார் காக்கா.


தேத்தண்ணியை குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட மணி, “உங்கள பாக்கனும் போல தோனுச்சு.. பார்த்துட்டேன்.. நா கெளம்புறேன் காக்கா..” என்ற மணியின் பேச்சை குறிக்கிட்டவராக, “எங்கப்பா போறே..?” என்றார் காக்கா. “தெரியல காக்கா..! 

எங்கேயாவது..! தெரிந்தவர்களை பார்க்கவே கூச்சமா இருக்கு.. சிறைக்கு போயிட்டு வந்தாலே தப்பு செய்தவன்னுதானே என்று எல்லோரும் நெனப்பாங்க.. என்னால அத தாங்க முடியல காக்கா..! எங்கேயாவது போயி..” என்றவனை குறுக்கிட்டு, “போயி..!” என்ற காக்காவுக்கு, “போயி.. ஏதாவது வேலை பாத்து, கிடைக்கிறதை சாப்பிட்டு என் காலத்தை ஓட்டி முடிச்சுக்கிறேன்..!” என்றான் மணியன் கண்களில் கண்ணீர் கசிந்தப்படி.

ஏன் அப்படி நெனச்சிட்ட..? நா இல்லையா..? என்னைப் பத்தி நீ என்ன நெனச்சிட்ட..?” என்ற காக்காவுக்கு, “நா அநாதையா வந்தப்போ, என்னை உங்க வீட்ல ஒருத்தனா நெனச்சு வளர்த்தீங்க.. பெரிய மனசு காக்கா உங்களுக்கு, நா தான் உங்க பேர கெடுக்குற மாதிரி நடந்து போச்சு, ஊரு எப்படி பேசுச்சோ..? மேற்கொண்டு உங்களுக்கு கஷ்டம் கொடுக்க மனசு வரல காக்கா..? நா எங்கேயாச்சும் போறேன்..” என்ற மணியனை மறித்து,


போ.. எங்கே வேணாலும் போ.. அதோ அந்த எதிர்ல இருக்குற கடை உனக்கு சொந்தமானது.. அதை வித்து காசை எடுத்துக்கிட்டு போ..!” என்று காக்கா சொன்னதும் திகைத்து அவர் கைக்காட்டிய திசையில் நோக்கினான் மணியன்.


மணியன் மெர்ச்சண்ட்ஸ்என்ற பெயருடன் கடை பளப்பளத்தது. குழப்பத்துடன்என்ன காக்கா இது..?” என்ற மணியனுக்கு,


உன் காசுதான்டா..! பத்து வருசத்துக்கு மேலா நீ உழைச்சதுக்கான சம்பள காசில் நா திறந்த கடை அது..! அல்லா அதில் அபிவிருத்தியை உண்டாக்கி மேலே மேலே வளர்த்து இப்போ பெருமரமா வளர்ந்து நிக்குது.. உன்னோட ஹக்கு மணியா அது..! உனக்கு மட்டுமே சொந்தமானது டா..! இந்தா சாவி..! போ.. போயி கடையை தொறந்து கல்லாவுல உக்காரு..! அதுக்கு முன்னாடி வீட்டுக்கு போயி குளிச்சிட்டு புது ஆடையா போட்டுட்டு வா..!” என்று சொல்லிவிட்டு, “எங்களையெல்லாம் விட்டுட்டு போறாராம்லே..” என்று முணங்கிவிட்டு முகத்தை பொய் கோபமாக வைத்துக் கொண்டார் தீன் காக்கா.


மணியனோ திகைத்து மிரண்டு போய் நின்றிருந்தான். “இன்னும் ஏன் நிக்க.. கெளம்பு போய் குளிச்சிட்டு வா.. என்ன கடன்காரனாவே வச்சிடலாம்ன்னு முடிவு பன்னிட்டியா..? உன் கடனை அடைக்காம நா ஹஜ்ஜுக்கு கூட போகாம கெடக்கேன் மணியா..! நீ கூச்சநாச்சப்படாம பெரும்பாடு பட்டு சம்பாதிச்ச காசு மணியா இது..! சாவிய வாங்கிக்க மணியா..!” என்றார் குரல் தழுதழுக்க..


ஒரு முழுமையான மனிதனாக தீன் காக்காவை கண்டான் மணியன், கண்களில் நீர் சாரை சாரையாக வழிந்தோட..!

ஒரு நபிமொழியை கருவாக கொண்ட சிறுகதை

படித்ததில் பிடித்தது


கதாசிரியர்

Manoj bharath

மிக நீண்ட கதையை பதிந்தமைக்கு மன்னிக்கவும். நேர்மை நமக்கு ஈருலகிலும் வெற்றியை மட்டுமே தரும்.

யாருக்கும் தீங்கின்றி நல்லெண்ணெத்தோடு பயணத்தை தொடருவோம்!

நன்றி இணையம்