தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:37 PM | Best Blogger Tips
Image result for தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர்"

*🚩தீராத குறைகளையும் தீர்க்கும் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர்🙏*
 Image result for தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர்"
*வேலூர் அடுத்த வசூரில் அருள்பாலிக்கிறார்*

வள்ளிக்கும், முருகனுக்கும் சம உயர சிலை அமைந்த அபூர்வ ஆலயம், முருகப்பெருமானின் திருவடிகள் அமைந்துள்ள அழகிய மலை, வள்ளியை மணம் முடிக்கும் முன் முருகன் இளைப்பாறிய மலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட கோயிலாக திகழ்கிறது வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோயில்.வள்ளியை மணம் புரிய விரும்பிய முருகப்பெருமான், வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை நோக்கிச்சென்றபோது, இந்த மலையில் சிறிது நேரம் இளைப்பாறி, பாதம் பதித்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக முருகப்பெருமானின் பாதச்சுவடுகள் இன்றும் இந்த கோயிலுக்கு படியேறிச்செல்லும் பாதையில் அமைந்துள்ளன.

மலை அடிவாரத்தில் செல்வ விநாயகர் சன்னதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அதன் எதிரில் பெரிய அளவிலான திருக்குளம் இருக்கிறது. 222 படிகள் ஏறினால் மலை உச்சியை அடையலாம். 10 படிகள் ஏறியதுமே வலதுபுறம் முருகப்பெருமானின் திருவடிகள் காட்சி தருகின்றன. அதனையடுத்து முருகனின் பணிவிடைப் பெண்கள் என்றுகூறப்படும் கன்னிமார்கள் சன்னதி படியேறும் போது இடதுபுறம் அமைந்துள்ளது. அதன் வலப்புறம் விழுதுகள் இல்லாத கல்லால மரம் காட்சி தருகின்றது.மலை ஏறியதும், அழகிய முருகப்பெருமானின் ஆலயம் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. இவ்வாலயத்தின் மூலவர் பழமையானவராக இருந்தாலும், அண்மை கால கட்டிட அமைப்பு அதனை புதுக்கோயிலாக மாற்றியுள்ளது.
கோயிலின் மேற்கே ஆலமரம், கிழக்கே அத்திமரம், தென்கிழக்கே அரசமரம், வட கிழக்கே தல மரமான நாவல்மரம் ஆகியவை உள்ளன. ஆலமரத்தின் அடியில் பாறையின் கீழே இன்றும் சுனைத் தீர்த்தம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே இத்தலம் தீர்த்தகிரி என வழங்கப்படுகிறது.மூலவர் வள்ளி-தெய்வானையோடு கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதில் முருகப்பெருமானும், வள்ளியம்மையும் சம அளவிலான உயரத்திலும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். காதலித்து மணம் முடித்த முருகப்பெருமான், காதலியான வள்ளியை சம உயரத்தில் வைத்து பார்த்துள்ளது ஒரு புதிய அனுபவமாக உள்ளது. இங்குள்ள மூலவர் முருகப்பெருமான், வேலைவாய்ப்பு, திருமண வரம், குழந்தை வரம் என வேண்டிய வரத்தை அள்ளித்தரும் வள்ளலாக விளங்குகிறார். பக்தர்களின் தீராத குறைகளை தீர்த்து வைக்கும் கருணை கடலாக விளங்குகிறார்.
இக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருத்திகைக்கு முதல்நாள், மறுநாள் என 2 நாட்கள் விழா நடைபெறுகிறது. இதுதவிர பவுர்ணமி, கிருத்திகை, பிரதோஷம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், பால்குட அபிஷேகம், விளக்கு பூஜை போன்ற விழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
*அமைவிடம்:*
*சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள வசூர் ஊரின் எல்லையில் உள்ளது. வேலூர் அடுத்துள்ள சத்துவாச்சாரி அருகே உள்ள வள்ளலார் பஸ் நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அதன் தென்புறம் உள்ள மலை மீது தீர்த்தகிரி கோயில் உள்ளது.*

நன்றி இணையம்