1000 ஆண்டு பழமையான மிகவும் சக்தி பெற்ற வராஹி கோவில் தரிசனம்
வரம் தருவாள் வாராஹி!
அம்பிகையின் வடிவங்களுள் ஒன்றான ராஜராஜேஸ்வரியின் போர்ப்படைத் தளபதியாக விளங்கும் சிறப்புப் பெற்றவள், வாராஹி அம்மன். எல்லா வெற்றிகளும் கிட்டிட வழி செய்யும் தேவி இவள்.
ஸ்ரீசக்கரத்தில் பதினாறாவது இடம் கொண்டவள். பராசக்தியின் வடிவங்களுள் முதன்மையானதும், பிரளயத்தின்போது பூமியை வெளிக்கொணர்ந்து விஷ்ணுவிற்கு துணையாகி பூமித்தாயானதும், கம்சனுக்கு எட்டுக் கரங்களுடன் காட்சி தந்ததும், வேத காலத்தில் வாக்கு தேவியாக வந்தவளும் வாராஹியே!
திருச்சானூரில் அலர்மேல் மங்கை தாயாரின் சேனைத் தலைவியாக இருப்பள். நம் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்தியில் உறைபவள். அந்தகாசுரன் என்ற அசுரனை அழிக்க சிவனுக்கு துணையானவள். இவளே என்று போற்றுகிறது மார்க்கண்டேய புராணம். உலகின் மிகப் பழமையான நகரான காசி நகரை இரவில் உலா வந்த காப்பவள் வாராஹியே.
இத்துணை பெருமைக்கு உரிய வாராஹிக்கு தனி ஆலயம் அபூர்வமாய் சில இடங்களிலேயே அமைந்துள்ளதால் இந்த அம்மனை வணங்கும் சந்தர்ப்பம் அரிதாகவே கிடைக்கிறது. காஞ்சியை அடுத்த திருமால்பூருக்கு அருகே உள்ள பள்ளூர் எனும் கிராமத்தில் தொன்மையான வாராஹி ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கே இவள். கிராம தேவதையாக அரசாலை அம்மன் என்று போற்றப்படுகிறாள். வாராஹி சஹஸ்ரநாமத்தில் அரசாலைஎன்று குறிப்பிடப்படும் சிறப்பு இவ்வாலயத்துக்கு உண்டு.
சுமார் 1500 ஆண்டு பழமையான ஆலயம் என்று கணக்கிட்டுள்ளார்கள். ஔவையார் மற்றும் தேவார மூவரால் பாடப்பெற்ற தலம்.
சிறிய ஆலயத்தின் முகப்பு வாயில் கடந்து சென்றால் உள் மண்டபத்தில் இடது புறமாக விநாயகர் காட்சிதர, அடுத்துள்ள கருவறையில் சொர்ண வாராஹியாக அம்மன் அருள்கிறாள். தெற்கு நோக்கிய வாராஹி ஆனதால், எம பயம் நீக்கும் வரப் பிரசாதி! தெற்கு பார்த்த தெய்வங்கள் அறிவைக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவை. அந்த வகையில் பள்ளூர் வாராஹி, ஞானத்தையும் கல்வியையும் வழங்கும் ஆற்றல் கொண்டிருக்கிறாள். பிராகாரத்தில் வலம் வரும்போது ஆலயத்தின் கூரையில் மீனாட்சி காமாட்சி, விசாலாட்சி வடிவங்களை காணலாம். அழகிய வாராஹி ரூபத்தை பிராகாரத்திலும், விமான கோபுரத்திலும் தரிசிக்கலாம்.
உருக்கிய பொன்னைப் போன்ற நிறமுடையவளாகவும், பெண் வடிவத்தில் கழுத்துக்கு மேலே பன்றி முகம் கொண்டவளாகவும் பழுப்பு நிற பிடரி முடி துலங்கிட மூன்று கண்களும், அபய கரத்துடன் சங்கு சக்கங்களுடனான உருவமே அன்னை வாராஹி. குதிரை வாகனத்தில் அஸ்வாரூடா, சிங்கத்தில் சிங்கரூடா, புலி மீது வியாக்ராரூடா என்று போற்றப்படும் வாராஹி இவ்வாலயத்தில் எருமை மீதுள்ள மகிஷாரூடாவாகக் காட்சி தருகிறாள்.
வெற்றி வேண்டி வாராஹியை வழிபட்ட பின்னரே அரசர்கள் போருக்குச் செல்வார்கள். தடைகளை நீக்கி வெற்றிக்கு வழிகாட்டுபவள் வாராஹி கடன் தொல்லை, திருமணத் தடை தீய சக்திகள், பகைவர்களால் ஏற்படும் பிரச்னைகள் நீங்க, வாஸ்து தோஷங்கள், குடும்ப பூசல்கள் களையவும், .எலும்பு நோய்கள் குணமாகவும், வியாபார விருத்தி, குழந்தை பாக்கியம் ஏற்படவும் வாராஹி கண்கண்ட தெய்வம். இந்த அன்னையை வழிபட்டால் மறுபிறவி இல்லை. நம் குறைகள் தீர பஞ்சமியன்று முறைப்படி வழிபட அடுத்த பஞ்சமிக்குள் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்கள் வாராஹி நவராத்திரி அம்பாள் உபாசகர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
மனித உடம்பில் மணிபூரகம், மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் சக்ரங்களை இவளே ஆட்சி செய்வதாகவும் கைவல்ய ரூபிணி என்றும் லலிதா சகஸ்ரநாமம் சொல்கிறது.
புத்த மதத்தினர் வணங்கும் வஜ்ர வாராஹி மற்றமு் மரிச்சி ஆகியோர் நமது வாராஹி அம்மனிலிருந்து தோன்றியவர்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயமும் வாராஹி பீடமாகவே அறியப்படுகிறது.
கோரிக்கை நிறைவடைய வாராஹிக்கு விசேஷ வழிபாடுகள் செய்யப்படுகிறது. இதனால் கோரிய பலன் கிட்டுவது நிச்சயம் என்று பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள். இந்த சாரதா நவராத்திரி நாட்களில் நீங்களும் ஒருமுறை பள்ளூர் சென்று வாராஹியை வழிபட்டு வேண்டிய நன்மைகளை வரமாகப் பெற்று கொள்ளுங்களேன்.
எங்கே இருக்கு: காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பள்ளூர் நிறுத்தத்திலிருந்து நடை தூரத்தில் வாராஹி கோயில் உள்ளது. திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 8-12; மாலை 4.30 - 7.30
நன்றி இணையம்