ஆட்சியரின் பெரிய மனசு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:23 | Best Blogger Tips
Image may contain: 2 people, car

சமீபத்தில் செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.
அந்த விழாவில் தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.
விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அப்போது மாணவி மோனிஷா அந்த ஆட்சியரிடம், "இன்று உங்கள் கையால் பரிசு வாங்கும் நான்... படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன். ஆசிர்வதியுங்கள்" என்று கேட்க...
உடனே ஆட்சியர் "வாழ்த்துக்கள் மோனிஷா! ஒரு நிமிடம் என்னுடன் வா!" என்று அழைத்துச் சென்று தன்னுடைய கார் கதவைத் திறந்து, "என் காரில் என் இருக்கையில் உட்கார்" என கூறி யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்ததுடன், அதன் அருகே தான் கைகட்டி நின்று கொண்டு அந்த மாணவியுடன் விழாவினரை புகைப்படம் எடுக்கவும் சொன்னார்.
பின்னர் அந்த மாணவியிடம், "இந்த புகைப்படத்தைச் சும்மா எடுக்கவில்லை. இதை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் உன்னுள் இருந்து கொண்டே இருக்கும். நானும் உன்னை போல்தான். ஒரு அரசு பள்ளியில் படித்துத்தான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன். நீயும் ஒருநாள் அப்படி வர எனது மனமார்ந்த ஆசீர்வாதங்கள்" என்று வாழ்த்தினார்.
இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது.
ஒரு மாணவியிடம் மிகுந்த பெருந்தன்மையுடனும் ஊக்குவிக்கும் முறையிலும் நடந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் 👌
வாழ்த்துகள்

நன்றி இணையம்