மனதிற்கு நோவு - தவிர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:55 | Best Blogger Tips
Image result for மனதிற்கு நோவு

நாம் இழக்கும் பல விஷயங்கள் வாழ்க்கையில் நமக்கு முக்கியமே இல்லை. ஆனால் அதுதான் வாழ்க்கையின் அத்தியாவசியம்என்பது போல் காலப் போக்கில் வந்து ஒட்டிக் கொண்டிருக்கும். அதை ஏதோ ஒரு காரணத்தால் இழக்க நேரிடும்போது மனது வலித்துத் துடிக்கிறது.

செல்போன் இல்லாமல் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூட, மக்கள் கூட்டம் பூவுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தது. மகிழ்ச்சிகரமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அது இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துவிடுமோ என்பது போல் தான் பலரது நிலை மாறியுள்ளது. இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படிப் பல.

அதனால் தான் உடலுக்கு வலி எப்படி உதவுகிறதோ, அதைப் போல் நமது மனதைப் பாதித்து வலிக்கும் விஷயங்கள் நமது வாழ்க்கையின் முன்னுரிமைகளை மறுபரிசீலனைச் செய்ய உதவும் என்று குறிப்பிடுகிறார்கள்.

அதற்காகக் கார், செல்போன், சொந்த வீடு, வாழ்க்கைத் துணை இல்லாமல் வாழ வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொள்ளக் கூடாது. அர்த்தம் அது இல்லை.

விஷயம் யாதெனில், வெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் அடிபட்டு, மனம் வலிக்கும்போது அதை உணர்ந்து தங்களது வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியானபடி மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்; முன்னுரிமைகளை சரிசெய்து கொள்கிறார்கள்; எதிர்பார்ப்புகளைச் சீரமைத்துக் கொள்கிறார்கள்; குற்றம் குறை காணும் மனோ நிலையைச் செப்பனிட்டுக் கொள்கிறார்கள்.

உடலுக்கு நோவு உண்டாக்கும் விஷயத்தை எப்படித் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க மாட்டோமோ, தவிர்த்துக் கொள்வோமோ அதைப் போல் மனதிற்கு நோவு உண்டாக்கும் விஷயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடாது.
தவிர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி 👤 *பெ.சுகுமார்*