குற்றம் குறை சொல்பவர்களுடன் உங்கள் சங்காத்தம்
இருந்தால் நீங்களும் தொட்டதற்கெல்லாம் குற்றம் குறை சொல்லப்பழகிவிடுவீர்கள்.
மகிழ்ச்சிகரமான மக்களுடன் பழகினால் உங்களையும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.
குழப்பவாதி, குளறுபடியாளர்களுடன்
இருந்தால் உங்கள் வாழ்க்கை முறையும் குழப்பம்தான். ஆர்வம் நிறைந்த உற்சாக
மனிதர்கள் உங்கள் தோஸ்த் என்றால் நீங்களும் உற்சாக மனிதர்.
ரேஸ் கார் ஓட்டுவது,
வீர சாகச வேலைகள் புரிவது என்று சிலருக்கு ஆர்வமிருக்கும். அவர்களுடன் நீங்கள் இணைந்தால் உங்களுக்கும் அந்த ஆர்வம் தோன்றிவிடும்.
எதையும் விவாதித்துக் கொண்டே இருப்பவர்களுடன் உறவாட
நேரிட்டால், விவாதம் புரிவதே உங்களுடைய இயல்பாகவும் மாறிவிட்டிருக்கும்.
அதைப் போலவே
வெற்றியாளர்களுடன் இணைந்தால் அவர்களது பழக்க வழக்கங்கள், வெற்றிப்பாதை உங்களுக்கும் சொந்தமாகிவிடும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் யாராக மாறவிரும்புகிறோமோ
அத்தகையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் நமது உறவை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் வாழ்க்கையில் நொடித்துப் போனவராக, மன அழுத்தத்தில் உள்ளவராக, உற்சாகமற்றவராக இருந்தால், வெகுநிச்சயமாக அவர் பழகும் நட்பு வட்டாரம்
அத்தகையவர்களாகவே இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள். ஏனெனில் ஒருவர்
வாழ்க்கையில் எப்பொழுதுமே அத்தகைய நிலையிலிருந்தால் அது தற்செயல் அல்லவாம்.
ஆகவே
அவர் வாழ்க்கையில் உருப்படுவதற்கு வழிவகை காணவேண்டும் எனில் முதலில் தன்னைச்
சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதைவிட்டு விலகி வரவேண்டும்.
அடுத்து நற்குண மக்கள், பண்பாளர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் சேர்ந்து கொள்ளவேண்டும். ”பூவுடன் சேர்ந்து நாரும் மணப்பதைப் போல” மனம் மாறும், மகிழ்வுறும். வாழ்க்கையும் தானாய் மாறும்.