வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,
அதைச் செய்ய வேண்டும், இதைச் சாதிக்க
வேண்டும் என்று குருட்டாம் போக்கில் பற்பல எண்ணங்களும் ஆசைகளும் இலட்சியங்களும்
இருந்தாலும் அவையெல்லாம் ஏன் அனைவருக்கும் கைகூடுவதில்லை?
அடிப்படைக் காரணம் வாழ்வின் குறிக்கோள்களை ஒழுங்குபடுத்திப் பட்டியலிட
மறப்பதுதான்!
எனவே நோட்புக், டைரி,
காலண்டர், பாத்ரூம் சுவர்
என்று எங்காவது நம் குறிக்கோள்களைப் பட்டியலிட்டுக் கொள்வது பல் துலக்குவதற்கு
அடுத்த நல்ல பழக்கம். அதைப்போல் அடுத்தகட்டமாய் அவற்றை அடைவதற்கான செயல்பாடுகள், முயற்சிகள், பணிகள் ஆகியனவற்றின் பட்டியல்.
இதன் பலனாய் நமது செயல்கள் சரியான முறையில் ஓர்
ஒழுங்குடன் அமையும்; நாம் நினைத்ததைச்
செய்து முடிக்க உதவும்.
கடைக்கும் விருந்துக்கும் விசேஷத்திற்கும்
பட்டியல் உதவுவதைப் போலவே வாழ்க்கைக்கும் பட்டியல் அவசியம்.
குறிக்கோளை ஒரு வாகனம் போலவும் நினைத்துக்
கொள்ளலாம். அது நாம் செல்ல வேண்டிய ஊருக்கு இட்டுச் செல்கிறது. செல்லும்
பாதையெல்லாம் பாடம் கற்றுத் தருகிறது.
அம்பானியாக வேண்டும் என்றால்தான் குறிக்கோள்
முக்கியம் என நினைக்கக் கூடாது. குறிக்கோளுடனான ஒரு வாழ்க்கை அமைந்தால்தான் அது
நமக்கு அனுபவத்தையும் பக்குவத்தையும் கற்றுத் தருகிறது என்பதற்காகவாவது குறிக்கோள்
வேண்டும்.
எனக்குத் தெரிந்த தம்பதியர். மனைவியுடன் ஷாப்பிங்
செல்வதாக இருந்தால் கணவர் வெகு முனைப்புடன் ஒரு சின்னப் பட்டியல் தயார் செய்து
விடுவார். மனைவியிடம், “இதோ ஷாப்பிங்
லிஸ்ட். தேவையானதை வாங்கிக் கொண்டு நாம் டைம் வேஸ்ட் செய்யாமல் வந்துவிட வேண்டும்.”
மனைவியும் சமர்த்தாய்த் தலையாட்ட, கடைக்குச் செல்வார்கள். இறுதியில்
வீட்டிற்குச் சுமந்து வரும் பைகளுக்கும் அநதப் பட்டியலுக்கும் சம்பந்தமே
இருக்காது! திட்டமிட்டதைவிட நேரம்,
பணம் எல்லாம் அதிகம் செலவாகியிருக்கும்.
“என்னங்க இது? அப்ப எதற்கு ஒவ்வொரு முறையும் லிஸ்ட்?” என்றால் அவர்
சிரித்துக் கொண்டே சொல்வார் -
“என் குறிக்கோள் என்
இல்லாளை மனம் மகிழ வைப்பது. அது நடந்துவிட்டது.”
நன்றி 👤✍ *பெ.சுகுமார்*