கி.மு. நான்காம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்க
நாட்டின் ஏதென்ஸ் நகரில் டெமாஸ்தெனஸ் (Demosthenes) என்றொரு
அரசியல்வாதி இருந்தார். அலெக்ஸாண்டரின்
ஆளுமைக்கு எதிராகப் புரட்சியெல்லாம் முயன்று பார்த்தவர். இவரிடம் திறமை
ஒன்று இருந்தது - ஆளை அசத்தும் பேச்சு.
சரி,
அதற்கு என்ன இப்போ?
அவர் சிறுவனாய் இருந்தபோது அவரிடம் ஒரு குறை
இருந்தது. திக்கித் திக்கித்தான் பேசுவார். வாக்கியங்களைத் தடையின்றி முழுமையாய்ப்
பேச அவரால் முடியாது. அந்தக் காலத்தில் எந்த ENT ஸ்பெஷலிஸ்ட்டைப்
போய்ப் பார்ப்பது?
எனவே அவருக்கு ஒரு
யோசனை தோன்றியது. வாயில் சிறு,
சிறு கூழாங்கற்களை அடைத்துக் கொண்டு கிரேக்க மொழியில் ‘அணில், ஆடு, இலை’ என்று பேசிப் பழக
ஆரம்பித்தார் டெமாஸ்தெனஸ். அசரவில்லை;
சோர்ந்து போகவில்லை;
தினந்தோறும் கடுமையான பயிற்சி. சாப்பிடும்போது மட்டும் கல் நீக்கிச் சோறு
சாப்பிடுவாரோ என்னவோ, விடாத பயிற்சி.
முடிவு? வாய்மேல் பலன்
கிடைத்தது. இவர் ஒரு மிகச் சிறந்த சொற்பொழிவாளராக, பேச்சாளராக மாறிப்போனார். இன்றும்
வரலாற்றுப் புத்தகங்களில் அந்தச் சிறப்புத் தகுதியுடனேயே குறித்து
வைக்கப்பட்டுள்ளார்.
நம் எல்லோரிடமும் குறையுண்டு. அது உடல் குறையாக
இருக்கலாம். மனதில் இருக்கலாம்;
செயலில் இருக்கலாம்;
சிந்தனையில் இருக்கலாம். ஏதோ ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்டு என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அந்தக் குறை நம்
இலட்சியத்தை, குறிக்கோளை, மன மகிழ்வை எவ்விதத்திலும் தடுத்துவிடக்
கூடாது; அப்படித்
தடுப்பதுதான் உண்மையான குறை.
நன்றி 👤✍ *பெ.சுகுமார்*