மிகப்பெரிய தொந்திக்குச்
சொந்தக்காரர் ஒருவர். ஒரு நாள் தம் செருப்பைத் தேடக் குனிய முடியாமல்போய், அதைப் பார்த்துப் பக்கத்து
வீட்டுக்காரர் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததால் முடிவே
செய்துவிட்டார்… உடற்
பயிற்சி!
அதை ஆரம்பித்து, சிறிது
சிறிதாய்ப் பயிற்சி செய்து, ஆனால்
கரைத்த கொழுப்பைவிட அதிகமாய் உண்டு, ஒரு
மாதத்தில் பெரிய பலன் ஏதும் இல்லையென்றதும் அத்தீர்மானத்தைத் தூக்கிப்
போட்டுவிட்டார். என்னாவது? மிச்ச
வாழ்நாளும் அவர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.
மற்றொருவருக்கு வேறு கவலை. பணம்
என்று எதுவும் சேமிக்க முடியாமல் எப்பவும் செலவாகிக் கொண்டே இருக்கிறதே; இம்மாதத்திலிருந்து
சிறிது சிறிதாய்ப் பணம் சேமித்து ஆண்டு இறுதியில் அதைக் கொண்டு உருப்படியாய்
ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஏதாவது செலவு வந்து
கொண்டேயிருக்க ‘நமக்கு
இது சரிப்படாது’ என்று
விட்டுவிட்டார்.
குறிக்கோளுக்கான தீர்மானமொன்றை
ஏற்படுத்திக் கொண்டால் இடையில் ஏற்படும் தடங்கலைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள்; தீர்மானத்தைக்
கைவிடாதீர்கள்.
சிலர் சாமான்யமாய் எதையும்
விட்டுவிடுவதில்லை.
குறிக்கோளை நோக்கி நகர்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம்
என்ன பிரச்சனை, எங்கே
பிரச்சனை எனப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் தங்களது செயல்பாடுகளை
அமைத்துக் கொள்கிறார்கள் அவர்கள்.
அடியெடுத்து வைக்கும்போது அங்கு சறுக்கினால் ‘இது
தப்பு அல்லது என்னிடம் தப்பு’ என்று அடுத்து அடியெடுத்து வைக்கும்போது
திருத்திக் கொள்கிறார்கள். தங்களைத் திருத்தி, தங்களது
செயல்பாடுகளைத் திருத்தி,
இப்படித் திருத்தி திருத்திக் குறிக்கோளின் இலக்கை
வெற்றிகரமாய் எட்டிவிடுகிறார்கள்.
யார் அவர்கள்?
வெற்றியாளர்கள்!
நன்றி 👤✍ *பெ.சுகுமார்*