எனக்குச் சொந்தமானது என்ற எண்ணம்தான்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:52 AM | Best Blogger Tips
Image result for எண்ணம்தான்

பல்வேறு துன்பத்திற்கு ஆளான ஒருவன் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்துகொள்வதற்காக ஒரு மலைமீது ஏறினான்.அப்போது வானில் ஒரு பருந்து இறைச்சித் துண்டு ஒன்றை கவ்வியவாறு வேகமாகப் பறந்து சென்றது.அதை கவனித்தான் இந்த மனிதன். அந்த இறைச்சித்துண்டைப் பறிப்பதற்காகப் பல பறவைகள் அப்பருந்தைத் தாக்கியவாறு பின் தொடர்ந்தன. எங்கெங்கோ பாய்ந்து பறந்தும் பருந்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் இறைச்சித் துண்டைக் கீழே நழுவ விட்டது பருந்து. உடனே, வேறொரு பறவை அதைக் கவ்விக் கொண்டதுImage result for எண்ணம்தான்
இப்போது எல்லாப் பறவைகளும் அந்தப் பருந்தை விட்டுவிட்டு, இறைச்சித் துண்டை கவ்விய மற்றொரு பறவையை விரட்ட ஆரம்பித்தன. இறைச்சியை நழுவ விட்ட பருந்து இப்போது நிம்மதியாகப் பறந்தது

-
அந்த மனிதனின் மனதில் தெளிவு பிறந்தது. இறைச்சித் துண்டைப் பற்றியிருந்த பறவை தாக்கப்படுவதைப் போல உலகப் பொருட்களின் மீது பற்று வைத்திருப்பவர்களையே துன்பம் தாக்குகிறது. இறைச்சியை விட்டுவிட்டு பருந்து நிம்மதியாகப் பறப்பதைப் போல உலகப் பற்றை விட்டவர்கள் மன நிம்மதியை அடைகின்றனர் என உணர்ந்தான் அவன்.
Image result for எண்ணம்தான்
-
அதன்பின் தற்கொலை எண்ணத்தை விட்டுவிட்டு பற்றற்றநிலையில் நிம்மதியாக வாழ்க்கையை நடத்தினான்

-
இன்னொரு சம்பவம்....

-
வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று ஊர் திரும்பிய வணிகன் ஒருவன், தனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ந்தான்; அலறித் துடித்தான். அப்போது அவனின் மூத்த மகன் ஓடி வந்து, தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்துக்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்றான். அதைக் கேட்டதும் வணிகனின் சோகம் காணாமல் போனது. இப்போது அவனும் கூட்டத்தில் ஒருவனாக வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.

சிறிது நேரத்தில் இரண்டாவது மகன் ஓடிவந்து, தந்தையே! வீட்டுக்கு முன்பணம்தான் வாங்கியிருக்கிறோம். முழுத்தொகை இன்னும் வந்துசேரவில்லை என்றான்

வணிகன் அதிர்ச்சியில் உறைந்தான். மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். சில மணித் துளிகளில், மூன்றாவது மகன் ஓடிவந்தான். தந்தையே! இந்த வீட்டை வாங்கிய மனிதர் மிகவும் நல்லவர் போலும். வீட்டை வாங்க முடிவு செய்தபோது, அது தீப்பிடித்து எரியும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே, பேசியபடி முழுத்தொகையையும் கொடுத்துவிடுகிறேன் நான் நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் என்றான். இப்போது வணிகனின் சந்தோஷம் மீண்டது.

இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு! இது என்னுடையது என்று நினைக்கும்போது, அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும்போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்குச் சொந்தமானது என்ற எண்ணம்தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. அனைத்துமே அழியக்கூடியவை அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாகக் கூடியவை. இதை நினைவில் நிறுத்தினாலே போதும்; சோகத்துக்கும் துன்பத்துக்கும் வேலையிருக்காது.

நன்றி இந்துமதம் வாட்ஸ் அப் குழு 9789374109