பிரதமர் மோடி - பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:57 AM | Best Blogger Tips
Image may contain: 1 person

#குஜராத்தின் வாத்நகர் என்ற சிறுகிராமத்தின் நடுவே, முதலைகள் கூட்டமாய் அலையும் ஷர்மிஸ்தா ஏரி. இதன் நடுவில் ஒரு சிறு கோயில். விழாவின் போது, கோயில் உச்சியில், புதிய கொடியை கட்டுவார்கள். அன்றும் அப்படித்தான். முதலைகளுக்கு பயப்படாமல், ஏரிக்கு நடுவில் சென்று கொடியை கட்ட மூன்று சிறுவர்கள் நீந்தினார்கள். அதில் இரண்டு பேர் பின்வாங்கினர்.

ஊரே சுற்றி நின்று உற்சாகப்படுத்த, முதலைகளை விரட்ட மக்கள் மத்தளம் முழுக்க, அந்த 14 வயது சிறுவன் நீந்தி சென்று, காவிக்கொடியை ஏற்றி கரை சேர்ந்தான். மக்கள் எல்லாம் கூடி நின்று சிறுவனின் துணிச்சலை பாராட்டினர்; துாக்கி கொண்டாடினர். ஆர்ப்பரித்தனர். அப்போது அந்த சிறுவன் நினைத்திருக்கவில்லை, 50 ஆண்டுகள் கழித்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் ஆவேன் என்று! உலகின் 15 சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவன் ஆவேன் என்று! அவர் நரேந்திர மோடி! அவருக்கு இன்று 67 வயது.

மின்சாரமே நுழையாத வாத்நகரில், ஏழை டீக்கடைக்காரரின் மகனாக, செப்.,17, 1950ல் மண்குடிசையில் பிறந்த மோடி, இந்தியாவின் பிரதமராக எளிதாக உயர்ந்து வந்துவிடவில்லை. விடாமுயற்சி, கொண்ட கொள்கையில் உறுதி, மாற்று சிந்தனை, புதுமை பார்வை, தனிமனித துாய்மை, நேர்மை, நல்லொழுக்கம் என நரேந்திர மோடியின் தனிக்குணங்கள் ஏராளம்.

பள்ளி படிப்பில் ஆசிரியர்கள் கூறும் கருத்தை கவனமாக கேட்டாலும், அதில் மாற்று சிந்தனையை முன்வைப்பார். அவர் வாழ்ந்த வாத்நகர் புத்த, இந்து, முஸ்லிம் கலாச்சார பின்னணி கொண்டது. அவரது பால்ய நண்பர்கள் எல்லாம் முஸ்லிம்கள். அனைத்து மத பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அப்போதே அறிந்து வைத்திருந்தார்.
தேசப்பற்று
ஆழ்ந்த தேசப்பற்று கொண்டவராக இருந்தார். 1965 இந்திய-பாக் போரின் போது, வாத்நகர் ரயில்வே ஸ்டேஷன் வழியே ராணுவ வீர்கள் ஆயுதங்களுடன் செல்வர். 15 வயது சிறுவனான மோடி, அவர்களை ஊக்கப்படுத்த, இலவசமாக டீயை தருவாராம். ராணுவத்தினரை பிரமிப்போடு பார்த்து, நாமும் இவர்களோடு போருக்கு சென்றால் என்ன என்று சிந்திப்பார்.

முதன்முதலாக மோடி, திகார் சிறைவாசம் அனுபவித்ததே ராணுவத்திற்கு செல்லும் ஆசையில் தான். 1971 போரில் பங்கேற்கும் நோக்கில், 'எங்களையும் ராணுவத்தில் சேருங்கள்' என்று ஆர்.எஸ்.எஸ்., இயக்க இளைஞர்கள் போராடினர். அதில் மோடியும் ஒருவர். அப்போது தான் கைதானார். இதனை பின்னாளில் ஒரு கட்டுரையில் மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டார், 'எங்களை போருக்கு அனுப்புங்கள் என்று கெஞ்சினோம்; திகாருக்கு அனுப்பினார்கள்'

8 வயதில்
உள்ளத்துாய்மையும், உடல் துாய்மையும் வேண்டும், தேசத்தை காக்க வேண்டும் என்ற உத்வேகம், மோடிக்கு 8 வயதிலேயே உதயமானது. ஆம், வாத்நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., 'சாகாவில்' தினமும் கலந்து கொள்ளும், மிகச்சிறிய வயது சிறுவன் இவர் தான்.நாட்டிற்கு கடமை ஆற்ற வேண்டும் என்று, அப்போது மனதில் உறுதி எடுத்துக்கொண்டார். எட்டு வயதில் இருந்து, ஆர்.எஸ்.எஸ்., பயிற்சியில் கற்ற விஷயங்கள், பெற்ற அனுபவங்கள், பின்னாளில் அவரது வாழ்க்கைக்கு புதுப்பாதை அமைத்தது.

பள்ளிபடிப்பின் போதே, ஏராளமான புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்ட மோடியின் சிந்தனை, விவேகானந்தர் பக்கம் திரும்பியது. பதினேழு வயதில் வீட்டை விட்டு வெளியேறி, நாட்டின் பல பகுதிகளில் ஒரு துறவி போல அலைந்து, விவேகானந்தர் மடம், ராமகிருஷ்ண மடம் சென்று ஆன்மிக விஷயங்களை அறிந்து கொண்டார். இன்றும், நவராத்திரிக்கு 9 நாட்கள், ஒரு வேளை உணவருந்தி விரதம் இருப்பது அவர் வழக்கம். 'நரேந்திர மோடி- பொலிடிக்கல் பயோகிராபி' என்ற ஆங்கில புத்தகத்தில், அந்த வாழ்க்கையை மோடி இவ்வாறு குறிப்பிடுகிறார்...

''எனக்கென்று வாழ்க்கையில் எந்த வசதிகளும் வைத்துக்கொள்ளவில்லை. கூடவே தோளில் ஒரு பை மட்டும் தான். அதற்குள் இருந்தது தான் என் சொத்து. விரும்பிய இடத்திற்கு செல்வேன்; விரும்பிய இடத்தில் சாப்பிடுவேன்; விரும்பிய திண்ணையில் துாங்குவேன்! அப்படித்தான் சில ஆண்டுகள் என் வாழ்க்கை கழிந்தது. இதனால் நான் பெற்ற அனுபவங்கள் புதுமையானது''

இருபது வயதில்
மூன்றாண்டுகள் நாடுமுழுக்க அலைந்து திரிந்த பின்பு, இருபதாவது வயதில் வீட்டிற்கு திரும்பினார். மகன் மீது கொண்ட பாசத்தில், அவரது அம்மா 'என் மகன் நாட்டிற்காக, வீட்டை விட்டு போய் விடுவான் என்றே தோன்றுகிறது,' என புலம்பினார். அவர் கூறியது போல, இரண்டு நாட்கள் மட்டும் அங்கு தங்கி இருந்தார். பின்னர் ஆமதாபாத் சென்று, ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் முழுநேர ஊழியரானார். அதற்குப்பிறகு இருபது ஆண்டு கழித்து தான், உறவினர்களை பார்க்க, வாத்நகர் வந்தார்.

ஆமதாபாத்தில்...
ஆமதாபாத் ஆர்.எஸ்.எஸ்., அலுவலக வாசம், மோடியின் அரசியல் தொடர்புகளுக்கு அடித்தளமிட்டது. அவர் பிரதமரானதும், 'துாய்மை இந்தியா' கோஷத்தை முன்வைத்தார். நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும், வீட்டையும், தெருவையும், நாட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று, யாரும் சிந்திக்கவில்லை. எந்த தலைவனும் பேசவில்லை. அதை மோடி, 'கையில் எடுக்க' காரணம் உண்டு.

சிறுவயதில் இருந்தே, வீட்டை, ஊரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவர் மோடி. 'வீட்டில் உள்ள அத்தனை அழுக்கு துணிகளையும், ஊர்குளத்தில் அழகாக துவைப்பார்; இவர் எப்படி துவைக்கிறார் என்று பார்க்க மக்கள் வருவார்கள்.' என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அம்மா ஹிராபென்.ஆமதாபாத் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தின், மொத்த துாய்மைப்பணியும், மோடி கையில் வந்தது. அதனை மோடியே குறிப்பிடுகிறார்...

''காலை 5 மணிக்கு எழுந்து தியானம், யோகா செய்வேன். பால் கறப்பேன்; மற்றவர்களை எழுப்புவேன். டீ தயாரிப்பேன். தரை, பாத்திரங்கள் கழுவுவேன். காலை பயிற்சிக்கு செல்வேன். பின்னர் சமையல் செய்வேன். ஒன்பது அறைகளை கூட்டி பெருக்கி சுத்தம் செய்வேன். ஓய்வே இல்லை''- இந்த பயிற்சி தான் நாட்டின் பிரதமர் ஆனதும், குப்பைகளை அகற்றிட, துடைப்பம் துாக்க வைத்தது போலும்! அது இன்று ஒரு இயக்கமாக நாடு முழுவதும் நடக்கிறது.

ஓய்வு இல்லை
இன்றும் பிரதமர் மோடி ஓய்வறியாதவர்; 5 மணி நேரம் மட்டுமே துாங்குகிறார். குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றினார்.சிறுவயதில் அம்மாவிடம் எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்பாராம், 'இந்த விஷயத்தை ஏன் இப்படி செய்தீர்கள்; வேறு வழியில் செய்யக்கூடாதா' என்று. அந்த சிந்தனை நாட்டிற்கு பணியாற்ற வந்த போதும் தொடர்கிறது. குஜராத் முதல்வரானதும், எல்லா விஷயங்களிலும் மாற்று சிந்தனையை முன்வைத்தார். 'இடையூறு இல்லாமல், 24 மணி நேரமும் மின்வினியோகம் செய்ய வேண்டும்,' என்று அவர் கூறியபோது, அதிகாரிகள் இது நடக்காது என்றனர்.

இரண்டாண்டுகளில், குஜராத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி காட்டினார்; இதனால் தொழில் வளம் பெருகியது. ஆறு கோடி மக்கள் கொண்ட குஜராத்தை, இந்தியாவின் முன் மாதிரி மாநிலம் ஆக்கினார்.இந்த தகுதியே, 120 கோடி மக்கள் கொண்ட இந்தியாவை ஆளும் தகுதியை, மோடிக்கு பெற்று தந்தது. 'இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்த, இந்திய பிரதமர்' என்ற பெருமை மோடிக்கு உண்டு.

அதுபோலவே, பிற பிரதமர்களை விட, தொலைநோக்கு பார்வையோடு, வித்தியாசமாக, வளர்ச்சியை பற்றி சிந்திக்கிறார். ஜப்பானின் 'புல்லட் ரயிலை' இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார். சென்னை-நெல்லை 11 மணி நேர ரயில்பயண துாரத்தை, மூன்று மணி நேரத்தில் புல்லட் ரயில் கடந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான், ஆமதாபாத்-மும்பை புல்லட் ரயில் வரப்போகிறது. நிறைவேற்ற 5 ஆண்டு காலக்கெடு நிர்ணயித்து விட்டார். இதன் மூலம் 15 லட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைக்க போகிறது.

அவரது முடிவுகள், திட்டங்கள் வரவேற்பையும், சர்ச்சைகளையும் ஒருங்கே பெற்றிருக்கின்றன. என்றாலும், ஊழல் என்ற குற்றச்சாட்டு இல்லை. அதுவே இந்திய குடிமகனுக்கு ஆறுதலான விஷயம். நிர்வாக இயந்திரம் வேகமாக நகர்கிறது என்பதிலும் மாற்று கருத்து இல்லை. என்றாலும் மோடியிடம், இளைஞர்களின் எதிர்ப்பார்ப்பு இன்னும் நிறையவே உள்ளது.
'மக்களுக்கு, மக்களை கொண்டு, தொண்டு செய்' என்பதே மோடியின் நிர்வாக சித்தாந்தம்.குறை, நிறைகள் பல கூறினாலும், மோடி நமது நாட்டின் பிரதமர். மக்களுக்கு தொண்டு செய்ய, வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவோம்

#Thanks chellakovai ji #Namoji