ஒரு புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளர் ஒரு பள்ளி ஒன்றில் உரையாற்றினார். தனது பேச்சிலே நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களை இடைவெளி இல்லாமல் வரிசையாகக் கட்டித் தொங்கவிட்டார். ஆனால், மாணவர்கள் மறந்தும்கூடச் சிரிக்கவில்லை. ஒரு வேளை அனைத்து மாணவர்களுக்கும் ஜெர்மன் அல்லது ஸ்பானிஷ்தான் தாய்மொழியாக இருக்குமோ என்றெல்லாம் பேச்சாளர் மனதுக்குள் குழம்பினார்.
உண்மையில் நடந்தது என்னவென்றால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். “நாளைக்கு நம்ம பள்ளிக்கூடத்துக்குப் பேச ஒரு பெரிய பேச்சாளர் வாறாரு. நீங்க யாராச்சும் கெக்கே பிக்கேன்னு சிரிச்சு வைச்சீங்க, தோலை உரிச்சிடுவேன்” என முந்தைய நாளே மாணவர்களிடம் எச்சரித்து வைத்திருந்தார். புதுப் பிரம்புடன் இரண்டு வாத்தியார்களை அதற்கான வேலையிலும் ஈடுபடுத்தியிருந்தார். பிறகு எந்த மாணவனுக்காவது சிரிப்பு வரும்?
நம்முடைய மனமும் பல நேரம் இந்தத் தலைமை ஆசிரியரைப் போன்றே வாழ்க்கையை ரசிக்க வேண்டிய நேரத்தில் ரசிக்காமல் எப்போது பார்த்தாலும் செய்ய வேண்டிய வேலைகளை, அடைய வேண்டிய லட்சியங்களை, கட்ட வேண்டிய மாதத் தவணைகளைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு, சிரிப்பதைத் தள்ளிப் போட்டுவிடுகிறோம். இந்த விஷயங்களெல்லாம் நடந்தால்தான் சிரிப்பேன் என மகிழ்ச்சியாக இருப்பதற்குச் சில முன்நிபந்தனைகளை வேலை வெட்டியில்லாமல் விதித்துக்கொள்கிறோம். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலேயே நமது மகிழ்ச்சியையும் தொலைத்துவிடுகிறோம்.
👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*