ஒரு பழைய நண்பரை திடீரென சந்தித்துப் பேசினால், அக்கறையோடு ஒரு உறவினர் நலம் விசாரித்தால், நேசிக்கும் பெண் ஒரு புன்னகை பூத்தால்... உடனே மகிழ்ச்சி மலையின் சிகரத்தை அடைவது பலருக்கு சாத்தியம்.
ஆனால் அமெரிக்கர்கள் அப்படி இல்லை. உயர்ந்த வேலை, காஸ்ட்லி கார், சொகுசு பங்களா என பல சமாச்சாரங்களில் மகிழ்ச்சியை ஒளித்து வைத்து தவிக்கிறார்கள் அவர்கள். இதனால் மன அழுத்தத்தில் தவிக்கும் பலரை மகிழ்ச்சி அடைய வைப்பது அங்கே பெரிய பிசினஸ். புத்தகங்கள், யோகா, தியானம் என அமெரிக்க மகிழ்ச்சி வியாபாரத்தின் மதிப்பு 63 ஆயிரம் கோடி ரூபாய்.
இதனால்தான், மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குவது எப்படி என அறிவியல் ஆராய்ச்சி அங்கே நடந்தது. அதில் மகிழ்ச்சியைப் பெறும் 5 வழிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவை இங்கே...
தினமும் சில நிமிடங்களை ஒதுக்கி தோட்ட வேலை போன்ற ஏதாவது வழக்கத்துக்கு மாறான பணியைச் செய்வதும், நீண்ட நாட்களாக பார்க்காத ஒரு நண்பரைப் பார்த்துப் பேசுவதும், மனதில் பாசிட்டிவ் சிந்தனைகளை விதைத்து மன அழுத்தத்தைத் துரத்திவிடுகிறதாம்.
பிடித்த இசை - அது கர்நாடக சங்கீதமோ, இளையராஜா பாடலோ, பாப் மார்லே ஆல்பமோ - கேட்பது மனதை இதமாக்கி மகிழ்ச்சியை ஊற்றெடுக்கச் செய்கிறது. மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்ற உந்துதல் இல்லாமல் இயல்பாக இசையை ரசித்தால், மகிழ்ச்சி தானாகக் கிடைக்கும்.
டிகிரி பாஸ் செய்தது, முதல் நாள் வேலைக்குப் போனது, திருமண மேடையில் பூரிப்போடு அமர்ந்திருந்தது என உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் அன்றோடு மறந்து போவதற்கு அல்ல! அவற்றை அவ்வப்போது நினைத்து நினைத்து மகிழ்ச்சியை ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள். சந்தோஷ அறையின்
எளிய சாவி இதுதான்!
அமைதி விரும்பியாக இருப்பவர்கள் மகிழ்ச்சியை லேசான புன்முறுவலுடன் ஏற்கிறார்கள். துன்பத்தை உதட்டைக் கடித்தபடி சகித்துக்கொள்கிறார்கள். மகிழ்ச்சியான தருணங்கள் உடனே மறந்துபோக, துன்பம் மட்டும் சுமையாக மனதில் தங்கிவிடுகிறது. இப்படி இல்லாமல், ஆர்ப்பாட்டத்தோடு மகிழ்ச்சியை அனுபவிக்கிறவர்கள், துன்பத்தையும் நான்கு பேரிடம் புலம்பி லேசாக்கிக்கொள்கிறார்கள். மகிழ்ச்சியை ஆர்ப்பாட்டமாக அனுபவியுங்கள்.
எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக அனுபவிக்க நினைத்தால் மகிழ்ச்சி தொலைந்துவிடுகிறதாம். தீபாவளியை எப்படிக் கொண்டாட வேண்டும் என ஒரு மாதமாக திட்டமிட்டு, டிரஸ், ஸ்வீட், பட்டாசு, உறவினர் வீடுகளுக்கு டூர் என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்பவர்கள், ஏதோ ஓரிடத்தில் தப்பு நேர்கிறபோது நிம்மதி தொலைக்கிறார்கள்.
ஆனால் தீபாவளியை அந்த தினத்தில் ரசித்துக் கொண்டாடுபவர்கள் அதிக மகிழ்ச்சி பெறுகிறார்கள்.
வேலைகளைத் திட்டமிடுங்கள்; சந்தோஷ
தருணங்களை இயல்பாக எதிர்கொள்ளுங்கள்.
👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
நன்றி 👤✍ *பெ.சுகுமார்*