பசுவிற்கு தருமம் செய்தால்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:00 | Best Blogger Tips
பசு தருமம் க்கான பட முடிவு

இடைக்காடர் யானும் வரமாய் ஏற்று பசுவிற்கு தருமம் செய்தால் வருகின்ற நன்மைகளை ஓலைச்சுவடிகளின் வழிதனிலே உலகறிய பெருமையுடன் உலகநலன் கருதி உரைக்கின்றேன் சூட்சும ஆசி நூல் வடிவினிலே இடைக்காடர் யானுமே என்கிறார் மகான் இடைக்காடர்.

உலகெங்கிலும் உள்ள பசுக்களெல்லாம் புனிதமான ஜீவன்களாகும். இவ்வுலகினில் எந்த யுகமாயினும் சரி, பசு எனும் ஜீவனானது தாய்க்கு சமமாய் எண்ணப்படுவதும், தாயின் அன்பிற்கு நிகரானதும், சக்தியின் வடிவமாகவும், ஒப்பிடக் கூடிய உயர் தன்மையுடைய ஜீவனாகும்.

1. தாய்க்கும் சக்திக்கும் ஒப்பான பசுவிற்கு மனமுவந்து தருமமிட்டால், உணவளித்தால் இவ்வுலகமெங்கும் சக்தி பலம் பெருகுமப்பா.

2. முறையோடு பசுவிற்கு உணவளித்தால் இந்த உலகமே அமைதியான உலகமாக மாறிவிடும்.

3. பசுவிற்கு உணவளித்தால் உலகெங்கும் உள்ள இயற்கை சீர்கேடுகளெல்லாம் நிவர்த்தியாகி இயற்கை வளம் பெருகும், இயற்கை சீற்றங்கள் வராது, ஆபத்தில்லாத நல்லுலகமாக மாறும்.

4. பசுவிற்கு உணவளித்தால் உலகெங்கும் உள்ள பூசல்களெல்லாம் நிவர்த்தியாகி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் கொண்டு, மனம் இலேசாகி சமாதானம் பெருகி இந்த யுகமெங்கும் சமாதானம் நிகழும்.

5. உலகெங்கும் பசுவதை செய்வதை தடை செய்து தாய்க்கு ஒப்பான பசுவினை பாதுகாத்து அதை தாய்க்கு உணவளிப்பது போல, உணவளித்து பேணி பாதுகாத்து வந்தால், அதை தாயை வணங்குவது போல பால் அளித்து காக்கின்ற செவிலித் தாயாய் எண்ணி வணங்கி வந்தால் இவ்வுலகினில் உள்ள வறுமை தானே விலகிடும்.

6. எந்த அரசு பசுக்களை தாய்க்கு ஒப்பாக எண்ணி பசுவதை தடை செய்து பாதுகாத்து உணவளித்து காக்கிறதோ, அந்த அரசிற்கு உண்டான எதிர்மறையான நிகழ்வுகளெல்லாம் பசுவை பாதுகாத்த புண்ணிய பலத்தினால் மாற்றப்பட்டு, அந்த நாட்டை விட்டே எதிர்மறை நிகழ்வுகள் விலகி ஓடும், அதாவது போராட்டம் மற்றும் தீவிரவாதங்கள் இருக்காது, மக்கள் அரசுக்கு விரோதமாக செயல்படமாட்டார்கள்.

7. பசுவதை தவிர்த்து, உயிர்க்கொலை தவிர்த்து, பசுக்களை பாதுகாத்து வருகின்ற தேசமும், பசுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற உலகமுமே ஞான உலகாக மாறும்.

8. பசுக்களுக்கு பாதுகாப்பும் உணவும் அளித்தால் எந்த நாடு இவ்வித பாதுகாப்பும் உணவும் அளிக்கிறதோ அந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பும், பெண்களிடத்து கற்புநெறி தவறாமையும், தருமநெறி சிறந்தும் விளங்கி அத்தேசம் மிக வலிமையுள்ள தேசமாக மாறிடும். உலகெங்கும் இதை செய்தால், இவ்வுலகமே நல்லுலகமாக மாறும்.


9. பசுக்களை போற்றி பாதுகாக்கின்ற தேசம் சமூக வளர்ச்சியை சிறப்பாய் காணும், உண்மையான நிலையான ஆன்மீக வளர்ச்சியை அடையும், அரசும் அதீத வளர்ச்சியை அடையும், அநீதிகள் நாட்டில் குறையும், நீதி பெருகும், நிதி ஆதாரங்கள் வளர்ச்சியடைந்து நிதிநிலைமை சீரடையும்.
ஆதலின் நாட்டின் ஆட்சியாளர் ஞானிகளையும், பெண்களையும், ஆதரவற்றோரையும், பண்புடையோரையும் பாதுகாப்பதோடு தாய்க்கு நிகரான பசுவையும் பாதுகாப்பது அவசியம் என்பதையும் அறிதல் வேண்டும். பசுவிற்கு உணவளிப்பது என்பது தனிமனிதனும் செய்யலாம். தனிமனிதன் பசுவிற்கு தன்னால் இயன்ற அளவு உணவளித்து பாதுகாப்போனேயானால் அவனது இச்செயலால் அடையும் பயன்கள்தான் அளவிடற்கரியதாம்.

10. பசுவிற்கு உணவளித்தால், உணவு அளிப்பவனிடத்து உள்ள கடின மனம் நீங்கி, தர்மசிந்தை பெருகி அவனுள் ஜீவதயவெனும் பரோபகாரம் பெருகி நிற்கும்.

11. பசுவிற்கு உணவளித்தால் தயவு பெருகுவதோடு தீயகுணங்களெல்லாம் மாறி நற்குணங்கள் பெருகும், மனோபலமும், மனோதிடமும் பெருகும்.

12. பசுவிற்கு உணவளித்தால் தொழிலில் உள்ள பிரச்சனைகள் நீங்கும், உத்தியோகத்தில் உள்ள பிரச்சனைகளும் நீங்கி தனிநபர் வருமானம் பெருகிடும். முருகப்பெருமானின் அருளாசிகளையும் பெற்றிடுவார்கள்.


13. வெகுகாலம் திருமணமாகாமல் திருமணத்தடை உள்ளவர்கள், பசுவிற்கு உணவளித்தால் திருமணத்தடை நீங்கி நல்வரன் அமைந்து தடையின்றி திருமணம் செய்து நல்ல புத்திர பாக்கியங்களை பெறுவார்கள்.

14. புத்திரபாக்கிய தடை உள்ளவர்கள் பசுக்களை வணங்கி உணவளித்து வரவர, புத்திரபாக்கிய தடை நீங்கி நல்ல பண்பும், அறிவும் உள்ள புத்திரபாக்கியம் உண்டாகும்.

15. பசுக்களுக்கு தொடர்ந்து உணவளித்து வந்தால், உணவளிப்போர் குடும்பத்தில் உள்ள புத்திரர்கள் அறிவிலும், உடல் நலனிலும் சிறப்படைவார்கள், ஆரோக்கியமான வாழ்வை பெறுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். அதோடு முருகப்பெருமானின் அருள்பலமும், அவர்களுக்கு உண்டாகி நீடிய ஆயுளையும் பெறுவார்கள்.

16. பசுவிற்கு உணவளித்தால், உணவு அளிப்போர்க்கு நிலையான தொழில் அமையும், நல்ல வருவாய் உண்டாகும், அறிவில் தெளிவும், ஞானமும், மதிநுட்பமும் உண்டாகும்.

17. மாணவர்கள் பசுவிற்கு உணவளித்தால், உணவு அளிப்போர்க்கு கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் உண்டாகும். அதீத ஆற்றலும் ஞாபகசக்தியும் பெருகி நல்ல உயர்நிலையையும் அடைவார்கள்.

18. நாட்டில் மனுதர்மம் எனும் அரசியல் தர்மம் நிலைபட நேர்மையுடன் செயல்பட வேண்டுமாயின், அந்நாட்டிலுள்ள பசுக்களை அரசு பாதுகாத்து உணவளிக்க வேண்டும். மக்கள் பண்புடன் வாழவும், பஞ்சமின்றி வாழவும், அந்த அரசு அவசியம் பசுக்களை பாதுகாக்க வேண்டும், பசுவதையை தடை செய்ய வேண்டும்.

19. நாட்டினில் பருவமழை தவறாமல் பெய்யவும், விவசாயம் சிறப்படைந்து நல்விளைச்சல் உண்டாகவும், வளம் பல பெருகிடவும், பசுவிற்கு உணவளிப்பதை நாட்டு மக்கள் அவசிய தொண்டாய் செய்திடல் வேண்டும்.

20. மக்கள் நல்ல குருமார்களை பெறவும், மகா குருமார்களின் அருளைப் பெறவும், நல்ஞானமும் பெற்று கடைத்தேறவும், பக்குவமடையவும் விரும்புகின்றோர் அவசியம் பசுக்களுக்கு தொடர்ந்து உணவளித்து வர வேண்டும்.

இவ்விதமே எண்ணிலா பலன் உடைய பசுவிற்கு உணவளிக்கும் செயலானது ஜீவதயவின் உச்சமாகும். உலக நலன் கருதியே அவதரித்த முருகப்பெருமானின் அவதாரம் ஆறுமுக அரங்கமகாதேசிகரின் தொண்டுகள் பெருகி மக்களிடத்தும், தேசமெங்கும் தருமசிந்தை வளரவும், ஞானிகளை வணங்கவும், தருமசிந்தை வளர்க்கவுமே இவ்வித உபாயம் தன்னை வழங்கினேன் இடைக்காடர் யானுமே.

பசுக்களுக்கு தவறாது தொடர்ந்து உணவளிப்பதோடு, எந்த அளவிற்கு பசுக்களுக்கு உணவளிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு அந்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உண்டாகும்.

பசுக்களையும் பெண்களையும் பாதுகாக்கும் தேசமே ஞானதேசமாக மாறும். பசுக்களுக்கு உணவளிக்கும் தருமம் பெருக பெருக இவ்வுலகம் புண்ணிய உலகமாக மாறும். புண்ணிய உலகம் ஆகியபின், முருகப்பெருமான் ஆற்றலுள்ள உலகாய் உலகம்தனை படைத்து ஞானஉலகமாக இவ்வுலகை மாற்றுவது உறுதி உறுதி.

பசுக்களுக்கு உணவளிக்கும் தருமம் பெருக பெருக, எல்லா உயிர்களுக்கும், உணவளித்து காக்கப்பட, உயர்நிலை தருமம் பெருகிட ஏழாம் படை வீட்டு முருகப்பெருமானின் அருளினால் இவ்வுலகெங்கும் முருகப்பெருமானின் அருளாட்சி நடைபெறும். இனிவரும் காலமெல்லாம் தாய்க்கு ஒப்பான பசுவிற்கு உணவளித்து வரம் பெறுவீர்கள் கலியுக மக்களே! என கூறுகிறார் மகான் இடைக்காடர்.
-
சுபம்-
இந்த உலகம் தோன்றியதிலிருந்து இதுநாள் வரையிலும், தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பெற்ற தாய்போல் இருந்து பாலூட்டியது பசுவேயாகும்.
அப்படிப்பட்ட தாயான பசுவை போற்றி பாதுகாத்து, உணவளித்து பராமரிப்பதே ஆறறிவு படைத்த மனிதனுக்கு உகந்ததும் நல்லறிவும் ஆகும். இதை உணர்ந்து பசுவதை தடை செய்து பசுவை பாதுகாப்பதே சிறப்பறிவாகும்.
பசுவை பாதுகாப்பது பெற்ற தாயை பாதுகாப்பதாகும். பசுவை வதை செய்வது பெற்ற தாயை வதை செய்த பாவத்தை உண்டாக்கும்.
பசு வதை தவிர்ப்பீர்! பசுவை போற்றி பாதுகாப்பீர்! புண்ணியம் பெறுவீர்!
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

நன்றி #ஓங்காரக்குடில் #Ongarakudil