(ஒரு
நிமிடக் கதை)
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம் காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வாணி.
“ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?!”
“ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா லீவு விடுறாங்க?” சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர்.
“எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள் உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல போரடிக்குமே” என்றாள் வாணி.
“நோ சான்ஸ்! நான் வேற திட்டம் வெச்சிருக்கேன். நம்ம ஹரிணியையும் வினோத்தையும் கம்ப்யூட்டர் கிளாஸ்ல சேர்க்கலாம்னு நினைச்சிருக்கேன். மாலை நேரத்துல மியூசிக் கிளாஸ் போகட்டும். பக்கத்துலயே கராத்தே வகுப்பு இருக்கு. அதுக்கும் சேர்த்துவிடுவோம்.
இப்படி உபயோகமா ஏதாவது கத்துக்கிட்டா படிப்போட வேற திறமையும் வளரும். அதைவிட்டுட்டு கிடைக்குற நேரத்தை வீணாக்கினா எதிர்காலத்துல நமக்குத்தான் இழப்பு. அதைப் புரிஞ்சுக்கோ வாணி.” குரலை உயர்த்திப் பேசினான் சுதாகர்.
“அதையேதான் நானும் சொல்றேன். ஸ்கூல் போய்ட்டேகூட கம்ப்யூட்டர், மியூசிக் கத்துக்கிடலாம். ஊருக்குப் போய் பத்துநாள் இருந்துட்டு வர முடியுமா? சின்ன வயசுலயே தாத்தா, பாட்டி, மாமா, சித்தின்னு உறவுக்காரங்களோட நல்ல உறவை ஏற்படுத்திக்கணும்.
சொந்தக் காரங்களோட எந்தவித ஒட்டுதலும் இல்லாம இருந்துட்டு, படிப்பு வேலைன்னு ஓடி கடைசியில ஒரு உதவிக்குக்கூட ஆளில்லாம வாழ்றதாங்க வாழ்க்கை? சின்ன வயசுலயே குழந்தைகளை உறவுக்காரங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போய் உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம். அதுதாங்க பெரிய இழப்பு!” -வாணி சொன்னதில் சுதாகருக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது.
“ஓ.கே. நாளைக்கு எனக்கும் ஆபீஸ்ல லீவு சொல்லிட்டு டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்யறேன்” என்றான்.
நன்றி இணையம்