வயிற்று நோயும், தேனின் பயனும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:32 PM | Best Blogger Tips

சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....
* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள்பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.
* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.
* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.
* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.
* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.
* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.
* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.
* குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.
* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.
* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.
குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். "ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்" என்று கூறினார் அவர்.
நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.
ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.
மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.
படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.
ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும். 120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.
இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல் வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.
சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது. ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

 நன்றி இணையம்