★தானம்---தருமம்★

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:54 | Best Blogger Tips

தானம், தர்மம் என்கிறார்களே?
அப்படியென்றால் என்ன?
இந்த இறை கதையை படியுங்கள்.
மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க 
பேறு பெற்றது.
சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.
இதை உணர்ந்த ஈசன், 
அவர் முன் எழுந்தருளினார்.
சூரியனே,
என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டவர் ஈசன்.
பரம்பொருளே..
பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால்,
எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.
பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? 
இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.
இறை சிரித்தது.
சூரியனே...
நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள்... என்றது.
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.
புண்ணியக் கணக்கில் சேராது.
ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க, 
ஈசனை வணங்கி நின்ற சூரியத் தேவன்.
தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்கிறார்.
நாமும் புரிந்துகொள்வோம்.
கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம் !


 நன்றி இணையம்