நிறப் பார்வைக் குறைபாடுகள் (color blindness) பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:41 PM | Best Blogger Tips
 
வண்ணக் குருடு அல்லது நிறக் குருடு என்பது என்ன?

நிறக்குருடு பிரச்சனையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, மற்றும் நீல நிறங்களை அல்லது அவற்றின் கலப்பால் உருவாகும் வண்ணங்களைக் பார்த்து உணர்வதில் உள்ள பிரச்சனையாகும்.

நிறக் குருடு (color blindness) என்று பொதுவாகச் சொல்லப்பட்டபோதும் அது மிகச் சரியான பதம் என்று சொல்ல முடியாது. நிறப் பார்வைக் குறைபாடு என்று சொல்வதே சரியான பதமாகும்.

ஒருவர் நபர் எந்த நிறத்தையம் பார்க்க முடியாதிருத்தல் மிக அரிதாகும். அவ்வாறான மிகக் கடுமையான நிலையில் ஒருவரால் கருப்பு, சாம்பல், வெள்ளை போன்றே உருவங்கள் தோன்றும்.

அறிகுறிகள்

பெரும்பாலானவர்களுக்கு அது குறைந்த அளவிலேயே இருக்கும். அவர்களில் பலர் தங்களுக்கு அக் குறைபாடு இருப்பதை அறியாமலே இருக்கக் கூடும். உண்மையில் இதனை ஒரு பாரிய பாதிப்பு என்று சொல்ல முடியாது.

இவர்களால் சில நிறங்களை மட்டுமே பொதுவாக பார்க்க முடியாதிருக்கும். ஒருவரது வழமையான பார்வையில் பல வண்ணங்கள் தெரியக் கூடும். ஆனால் மற்றவர்கள் காணும் அத்தனை நிறங்களையும் பிரித்தறிய முடியாதிருக்கலாம்.

உதாரணத்திற்கு ஒருவரால் சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் வேறுபடுத்தி அறிய முடியாதிருக்கும். ஆனால் நீலத்தையும் மஞ்சளையும் பிரித்தறியும் ஆற்றல் இருக்கக் கூடும். இதன் காரணமாக ஆயிரக் கணக்கான வண்ணங்களால் உலகம் பிரகாசித்துக் கொண்டிருக்கையில் இவர்களால் குறைவான அளவு வண்ணங்களையே காணக் கூடியதாக இருக்கும்.

நிறப் பார்வைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

பெரும்பாலும் இது பிறவிக் குறைபாடுதான். பரம்பரை அம்சம் கொண்டது. மரபணுக்கள் (X chromosome) மூலம் பெற்றோரிலிருந்து பி்ள்ளைகளுக்கு கடத்தப்படுகிறது.

எனவேதான் பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கிறது. ஆண்களில் பத்துப் பேரில் ஒருவருக்கு சிறிய அளவிலேனும் நிறப் பார்வைக் குறைபாடு இருக்கிறது எனக் கணித்திருக்கிறார்கள்

ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களில் மிகக் குறைவாகவே (20ற்கு ஒன்று என்ற விகிதத்தில்) இருக்கிறது.

இருந்தபோதும் பெண்களுக்கு வண்ண உடைகளில் உள்ள பேரார்வத்திற்கு நிறப் பார்வைக் குறைபாடு அவர்களுக்கு பெருமளவு இல்லாதது மட்டும் காரணமாக இருக்க முடியாது.

நிறங்களைக் கண்டறிவதற்கு கண்ணில் உள்ள மூன்று வகையான கூம்புக் கலங்கள் (cone cells) இருக்கின்றன. இவையே அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, மற்றும் நீல வண்ணங்களைப் பிரித்தறியும் வல்லமை கொண்டவை. அதேபோல அவற்றின் கலவையான பல்லாயிரக்கணக்கான நிறங்களையும் காண வைக்கின்றன.

இந்தக் கூம்புக் கலங்களில் பெரும் பகுதி விழித் தரையின் நடுப்பகுதியில் உள்ள மக்கியூலாவில் (macula) இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஓரிரு வகை கூம்புக் கலங்கள் இல்லாதபோது அல்லது அவை சரியான முறையில் இயங்காதபோதே நிறப் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.

இத்தகைய நிலையில் ஒருவரால் சில நிறங்களைக் காண முடியாதிருக்கும். அவை வெறுமையாக இருப்பதில்லை. வேறு வண்ணமாக (Shade) இவர் உணர்வார்.

இவ்வாறான பிறவி நிறப் பார்வைக் குறைபாடு காலகதியில் மாற மாட்டாது. மருந்துகளாலும் மாற்ற முடியாது. வாழ்நாள் முழுவதும் தொடரும்.

வேறு காரணங்கள்

பிறவியில் இல்லாதபோதும் பிற்காலங்களில் சிலருக்கு நிறப் பார்வைக் குறைபாடு தோன்றுவதுண்டு.
முதுமையடையும்போது
குளுக்கோமா, மக்கியூலர் பாதிப்பு, நீரிழிவு ரெட்டினோபதி, போன்ற கண் நோய்களும் காரணமாகலாம். இவற்றால் விழித்திரை மற்றும் மக்கியூலாவில் எற்படும் பாதிப்புகளால் நிறப் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
கற்றரக்ட். இங்கு கண்வில்லை வெண்மையாவதால் ஒளித்தெறிப்புகள் காரணமாக நிறப் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. சத்திரசிகிச்சை செய்ததும் அது குணமாகும். .
கண்ணில் அடிபடுதல்
சில மருந்துகளின் பக்க விளைவுகளால்.
பாதிப்புகள்

பெரும்பாலும் பிறவிக் குறைபாடாக இருப்பதால் இப் பிரச்சனையுள்ள குழந்தைகள் கற்றை ஆற்றலைக் பாதிக்கலாம். வாசித்தல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடும்.

இதனால்தான் குழந்தைகளின் கண்களைப் பரிசோதிப்பது அவசியம். பொதுவாக குழந்தைகள் 3 - 4 வயதாகும்போது கண்பரிசோதனை செய்வது அவசியம்.

பிறவி நிறப் பார்வைக் குறைபாட்டை மாத்திரமின்றி. தூரப் பார்வை கிட்டப்பார்வை, வாக்குக் கண் (மாறுகண்) போன்றவற்றையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குழந்தைகளின் கற்கை ஆற்றல் பாதிப்படையாது காப்பாற்றலாம்.

நிறப் பார்வைக் குறைபாடுள்ளவர்களால், சரியாக நிறங்களை இனங் காண முடியாத காரணத்தால் சில தொழில்களைச் செய்ய முடியாது. கலர் வயர்களை இனங்காண வேண்டிய அவசியம் இருப்பதால் மின்னியல் தொழில் (எலக்ரிசியன்) பிரச்சனையாகும். அதேபோல பேஷன் வடிவமைப்பாளர்களாலும் திறமையாக செயல்பட முடியாது. விமான ஓட்டிகளில் இதனை அவசியமாகப் பரிசோதிக்கிறார்கள்.

பரிசோதனை

நிறப் பார்வைக் குறைபாட்டை இனங்காண பரிசோதனைகள் உள்ளன. பொதுவாக Ishihara color test எனப்படும் பல்வேறு நிறங்களிலான எண் பட்டியலைப் பயன்படுத்துகிறார்கள். கலர் புள்ளிகளால் நிறைந்த அட்டையில், குறிப்பிட்ட நிறமுடைய வண்ணத்தில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். இந்த எண்களை அடையாளம் காண முடிவதை வைத்தே குறைபாட்டைக் கண்டறிகிறார்கள்.

சிறு குழந்தைகளில் எண்களைச் சொல்ல முடியாததால் வட்டம் ,சதுரம், கார் குருவி, போன்ற சின்னங்களைக் கொண்ட நிறப் பட்டியலைப் பயன்படுத்துகிறார்கள்.

பெரும்பாலான விலங்குகளுக்கு நல்ல நிறப்பார்வை இல்லை. குரங்குகள், அணில், பறவைகள், பூச்சிகள், மற்றும் பல மீனகள் ஓரளவு நிறப் பார்வை கொண்டவையாகும். ஆயினும் பூனைகள் மற்றும் நாய்களது நிறப் பார்வை மோசமானது.


Thanks: Hainalama.com