கடன் அட்டைகள் - கடனை மீறிய உபயோகங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:26 | Best Blogger Tips


பகிருங்கள் இதை - கொஞ்சமாவது ஜனங்களுக்கு நல்லது நடக்கட்டும்!

முதன் முதலில் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்ட்) உண்மையிலேயே கடன் வாங்கத்தான் வந்தது. உங்களுக்கென்று அனுமதி அளிக்கப் பட்ட வரையறைக்குள் நீங்கள் உங்களுக்கான செலவை கடன் அட்டையின் மூலம் உடனடியாக பணம் செலுத்தி, உங்கள் கடன்களை மாதத் தவணைகளில் அடைக்க சௌகரியமாக வங்கி சாரா அமைப்புகளான விசா, மாஸ்டர், டைனர்ஸ் க்ளப், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டிவந்தன.

பின்னர் அமெரிக்காவில் கணினி மயம் ஆக்கப் பட்டவுடன், வங்கிகள் அனைத்தும் இந்தக் கடன் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கத்தொடங்கின. இதற்காக ஒரு விசா, மாஸ்டர் கார்ட் ஆகியோருடன் ஒரு தேர்ட் பார்ட்டி அக்ரிமெண்ட் செய்து கொண்டு இன்று வரை கடன் அட்டைகளை வழங்கி அமெரிக்க முழுவதும் வசிப்பவர்களை வாழ்நாள் கடனாளி ஆக்கி விட்டார்கள். இனி அமெரிக்கர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பால் கார்டு ரேஷன் கார்டு போல் கடன் அட்டை என்பதை எந்த தலைமுறையும் தவிர்க்க முடியாது.

இந்தியாவில் கடன் அட்டை நுழைந்தது 1987 இல். தென்னகத்தில் கனரா வங்கி தனது கேன்கார்ட் எனும் கடன் அட்டையை முதல் முறையாக செயல் படுத்தியது. இந்த அட்டை அன்றைய காலக் கட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்று பிரபலமாகியது . மாதம் முதல் பத்து தேதிக்குள் தவணை பணம் செலுத்தி விடவேண்டும். கடைகளில் பரிவர்த்தனை செய்யும்போது கார்பன் பேப்பர் வைத்த காகிதத்தின் மேல் அட்டையை தேய்க்கவென்றே ஒரு மெஷின் வைத்திருப்பார்கள். நாலு சதவீதம் வரை கடைக்காரகள் வட்டி வாங்குவார்கள் (கடன் அட்டை மூலம் பணம் பெற மட்டும். செலவிற்கான வட்டி தனி).
கிட்டத்தட்ட 36 சதவீதம் வரை வட்டி வசூல் உண்டு.

இன்றைக்கும் நடை முறையில் 24 முதல் 36 சதவீத வட்டிதான் உள்ளது. கடன் அட்டை என்பதில் உள்ள அட்டை எனும் பெயர் போல வாடிக்கையாளரின் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு இருக்கும் ஒரு வஸ்து இது.

கடன் அட்டை போக பின்னர் டெபிட் கார்ட் (செலவு அட்டை) எனும் மற்றொரு அட்டையை வங்கிகள் தங்கள் சுயநலத்திற்காக வெளியிட்டார்கள்.

வாடிக்கையாளர் தன் கணக்கிலிருந்தே பணம் எடுத்து செலவு செய்ய வங்கி வரை போய் அல்லது ATM வரை போய் பணம் எடுக்க வேண்டி வராமல், அங்கங்கே கடைகளில் பரிமாற்றம் செய்ய இந்த அட்டையை உபயோகிக்கத் தோதாக வங்கிகள் புழக்கத்தில் விட்டன.

இதனால் வங்கிகளுக்கு ஏகப்பட்ட நன்மைகள்.

முதலில் அவர்களுக்கான வேலை பளு குறைந்தது.

இரண்டாவதாக அட்டை வாங்கும் கடைக்காரர்கள் கட்டாய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டி வந்தது.

சில கடைகளில் இன்னமும் வாடிக்கையாளர்களிடமிருந்து 2% தேய்ப்புக் கூலி பெறுகிறார்கள், இதையெல்லாம் வங்கிகள் கவனிப்பதில்லை.

ஆனால் வங்கிகள் இந்த அட்டைகளை உபயோகிப்பாளர்களுக்கு சௌகரியமான சில பரிமாற்ற வசதிகளை செய்து கொடுக்க இன்னமும் முன் வரவில்லை.

உதாரணமாக, ஏடி எம் மெஷினில் பணம் மட்டும்தான் போட வேண்டுமா? மின்சாரக் கட்டணமோ, இல்லை தொலைபேசிக் கட்டணமோ, இல்லை குடிநீர் கட்டணமோ, பஸ் பாஸுக்கான கட்டணமோ கட்ட இயலாதா?

முடியும்!

இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், அந்தந்த துறையைச் சேர்ந்த கணினித் இலாக்காவிலிருந்து , பேமெண்ட் போர்டல் டேட்டா பேஸை அணுகினாலே போதும்.

உங்களின் மின் வாடிக்கையாளர் எண்னை ATM கருவியில் இட்டால் நீங்கள் செலுத்த வேண்டிய பணம் எத்தனை என்று நொடியில் தெரிந்து விடும். உடனே உங்களின் கடன் அட்டையையோ இல்லை செலவு அட்டையையோ கொண்டு பணம் செலுத்தி விடலாம். இது போல அனைத்துத் துறைகளின் செலவினங்களையும் ஒரு ATM மெஷினில் செலுத்தி ஜனங்கள் வரிசையில் நின்று பணம் கட்டும் அவலத்திலிருந்து அவர்களை விடுவிக்கலாம்.

துபாய் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் இது போல் வசதி உண்டு. பெரிய பெரிய மால்களில் இந்த மெஷினை வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது.

நம் நாட்டில் உள்ள ஏ டி எம் இயந்திரங்களை கணக்கெடுத்தால் தெருவிற்கு ஐந்து உள்ளது. உள்ளபடியே, இந்த இயந்திரங்களில் மக்கள் தாங்கள் விரும்பு நேரத்தில் பணம் செலுத்தி விடலாம். கூட்ட நெரிசல் இல்லை, வியர்வை இல்லை, அவஸ்தை இல்லை.

தற்காலம் பணம் கட்ட இன்டர்நெட் இல் வசதிகள் உள்ளன. ஆனால் பேமெண்ட் போர்ட்டல் தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டு இருப்பதால் அவர்கள் ஒரு பரிமாற்றத்திற்கு சுமார் ரூ 100 முதல் 250 வரை எடுத்துக் கொள்கிறார்கள். இது ஒரு மிகப் பெரிய வருமானம் ஈட்டக் கூடிய தொழில்.

இந்தப் பணம் அவர்களுக்கப் போய் சேராமல் வங்கிகளே செய்தால் இந்த செலவு முற்றிலும் குறையும். மக்கள் பணம் மக்களுக்கே போய்ச் சேரும்.

இந்த போர்ட்டல் அக்செஸ் என்பது பெரிய காரியமல்ல. ஐடி ஜாம்பவான்கள் நிறைந்த இந்த நாட்டில் பத்து நொடிக்குள் செய்து கொடுக்க ஆள் இருக்கிறது.

ஆனால் இன்றைய தேவை என்ன என்றால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டி, வங்கிகளுக்கு மனம் வர வேண்டும். வழிமுறைகள் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன..

செய்வார்களா வங்கிகள் இதை?

- டிமிடித் பெட்கோவ்ஸ்கி for ஆந்தை ரிப்போர்ட்டர் 

& ரிலாக்ஸ் ப்ளீஸ்