இரைப்பை புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:58 AM | Best Blogger Tips
முறையான உணவு முறை இன்றி தங்களுக்கு பிடித்ததை எல்லாம் சாப்பிடுதல், பரபரப்பான வாழ்க்கை முறையால் ஏற்படும் டென்ஷன் போன்ற பல காரணங்கள் இரைப்பை புற்றுநோயை உருவாக்குகிறது. அல்சர், வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்பு, புகைபிடித்தல், மது போன்ற பழக்கங்களால் 30 வயதிலேயே இரைப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


இரைப்பை புற்றுநோய் அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது. இப்போது 30 வயது முதல் 35 வயதுக்குள் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. இரைப்பையில் புற்றுநோய் உருவாக ஹெலிகோபேக்டர் பைலோரி(Helicobacter pylori) என்ற கிருமியும் காரணம். இது முதலில் இரைப்பையில் அல்சரை உருவாக்குகிறது. அந்த அல்சரே, புற்றுநோய் எனும் அடுத்த கட்டத்தை அடைகிறது.

புகைபிடித்தல், புகையிலை போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கும் இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் காரணமாக இரைப்பையின் உள்பக்க திசுக்களின் மீது பித்தநீர் பட்டுக்கொண்டே இருக்கும்.

நாளடைவில் இதுவே புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது. மதுப்பழக்கம் மற்றும் மசாலா கலந்த உணவுகளும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இரைப்பையின் உள்பகுதியில் ஏற்படும் பாலிப்ஸ் என அழைக்கப்படும் சிறு சிறு கட்டிகளும் நாளடைவில் புற்றுநோய் கட்டிகளாக மாறலாம். பரம்பரைக் காரணங்களாலும் இந்நோய் ஏற்படலாம்.

இரைப்பையில் ஏற்படும் புற்றுநோயை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.

1. முதல் கட்டமாக பசி குறைந்து எடை குறையும். அப்போதே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால் பசியின்மை மற்றும் எடை குறைதலை மக்கள் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் புற்றுநோயை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் போகிறது. வெளிப்புற அறிகுறிகளை வைத்தே எந்த இடத்தில் புற்றுநோய் வந்துள்ளது என தெரிந்து கொள்ள முடியும்.

2. உணவுக்குழாய் மற்றும் இரைப்பை சேரும் இடத்தில் புற்றுநோய் இருந்தால் உணவு விழுங்குவதற்கு சிரமம் ஏற்படும். உணவுக்குழாய் புற்றுநோய் எனில் அதன் பாதிப்பு இரைப்பையின் மேல் புறத்தில் வரும். சிறு குடலோடு சேரும் இரைப்பையின் கடைசிப் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அப்பகுதி அடைபட்டு விடும். இதனால் சிறு குடலுக்குள் உணவைத் தள்ள இரைப்பை சிரமப்படும். அப்போது வயிற்றுக்குள் பந்து உருள்வது போன்ற உணர்வு இருக்கும். பின்னர் வாந்தி ஏற்படும்.

3. சிலருக்கு இரைப்பை புற்றுநோய் எந்த அறிகுறியும் இன்றி வளர்ந்து பின்னர் கல்லீரல் அல்லது நுரையீரலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இதன் அடுத்த கட்டமாக கல்லீரல் வீக்கம் இருக்கலாம். இது புற்றுநோயின் முற்றிய நிலையை குறிக்கும். கல்லீரலை அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து இதனை கண்டறியலாம். இரைப்பை புற்றுநோய் முற்றும் வரை விடாமல் ஆரம்ப அறிகுறிகளை முறையாக பரிசோதிப்பதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும்.

பாதுகாப்பு முறை: இரைப்பை புற்றுநோயை தவிர்க்க வயிற்றில் அல்சர் ஏற்படுவதற்கான காரணிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சத்தான உணவுமுறை, உடற்பயிற்சி அவசியம். டென்ஷன் குறைக்க யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட மனப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அசைவம், மசாலா கலந்த உணவுகள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதைக் கைவிடுவது நல்லது.

ஜீரணப் பிரச்னை, பசியின்மை மற்றும் எடை குறைதல் உள்ளிட்ட பிரச்னைகள் துவங்கும் போதே அதற்கான பரிசோதனைகள் செய்து புற்றுநோயா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்

 


Thanks to FB Karthikeyan Mathan