சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:52 PM | Best Blogger Tips
  
பொதுவாக சமையல் என்பதை அனைவரும் ரசித்து செய்ய வேண்டும். அவ்வாறு ரசித்து செய்தால்தான் சமையல் ருசியாக இருக்கும். ஏனோ தானோவென்று சமைத்தால் அது சரியாக வராது.

அதுபோல, சமையல் செய்யும் போது சுத்தமாக செய்ய வேண்டியதும் அவசியம். அது ஆரோக்கியத்தைக் காக்கும்.

மற்ற எதையும் விட, சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை என்று ஒன்று உள்ளது. அதாவது,

அடுப்பில், சுத்தமான பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். வேறொரு பாத்திரத்தில் அரிசியை அளந்து போட்டு அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அரிசியில் இருக்கும் தண்ணீரை ஊற்றிவிட்டு, இரண்டாவது முறையாக தண்ணீர் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து கழுவி, அந்த நீரையும் வெளியேற்றி விட வேண்டும். பிறகு மீண்டும் தண்ணீர் ஊற்றி பிசைந்து கழுவி தண்ணீரை வெளியேற்றிவிட்டு, அதனை சூடாகியிருக்கும் உலையில் போட வேண்டும்.

அரிசியை கழுவி தண்ணீரை வடிக்கும் போதும் சரி, உலையில் அரிசியைப் போடும் போது ஒரு அரிசி கூட வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அரிசி தானே என்று நினைக்கக் கூடாது. காரணம், அந்த அரிசிக்காக, எத்தனையோ விவசாயிகளின் உழைப்பு, தண்ணீர், உரம், மண்ணின் உழைப்பு என எத்தனையோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு அரிசியை வீணாக்கும் போது இத்தனையும் உங்களால் வீணாக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், இந்த ஒரு அரிசி கூட கிடைக்காமல், பட்டினியால் சாகும் எத்தனையோ குழந்தைகள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அடுத்து, சாதம் வேகும் போது, மூன்று நான்கு முறை கிளறிவிட்டு, சாதம் வெந்ததும் வடித்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே, சாதத்தில் அதிகமாக தண்ணீர் ஊற்றி அதனை வடித்துவிட்டு சாப்பிடாமல், சரியான அளவில் தண்ணீர் ஊற்றி, சாப்பாடு வெந்தபிறகு தண்ணீரை வடிக்காமல் சாப்பிடும் முறையைப் பின்பற்றுவது உடலுக்கு நலத்தை அளிக்கும். சாதத்தை வடித்து சாப்பிடுவதால் வெறும் சக்கையை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

உணவை, வெளி இடங்களிலும், கடைகளிலும் வாங்கி சாப்பிடுவதை விட, சுயமாக நாமே தயாரித்து சாப்பிடுவதுதான் சிறந்ததாகவும் இருக்கும். அனைத்தையும் சுத்தமாக செய்து சாப்பிடுவதால் நோய் நொடி அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி
By Vanisri Sivakumar, இயற்கை உணவும் இனிய வாழ்வும்