தமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:26 | Best Blogger Tips


தமிழ்நாடு சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணியோ, அல்லது பயணத்தின் அனைத்து அம்சங்களையும் எடை போடக் கூடிய கூரிய திறனாய்வு கொண்ட ஒரு ஆர்வலரோ, யாராக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. தமிழ்நாடு, தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டு மலை வாசஸ்தலங்கள் – அறைகூவல் விடுத்து சலனப்படுத்தும் பயணப் பிரதேசங்கள்!

தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலங்களில், முக்கியமாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பெருஞ்சிறப்பு பெற்ற தலங்களில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர்.

நீலகிரியின் மலை வாசஸ்தலங்களான ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகியவை தங்களின் இயற்கை எழில் மற்றும் தேக ஆரோக்கியத்துக்கு உகந்த வானிலை ஆகியவற்றால், சுற்றுலாப் பயணிகளின் அளவில்லா கற்பனா சக்திக்கு உயிரூட்டக்கூடியனவாய், அவர்களுக்கு வரவேற்பு அறைகூவல் விடுக்கின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, தமிழ்நாட்டின், புகழ்பெற்ற மற்றொரு மலை வாசஸ்தலமாகும். அவ்வளவாக யாரும் இதுவரை சென்றிராத கொல்லிமலை மற்றும் வால்பாறை ஆகியவையும் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலாப் பயணிகளிடையே பரிச்சயமாகி வருகின்றன.

தமிழ்நாட்டு கடற்கரைகள் – கவர்ந்திழுக்கும் கரையோர வசீகரங்கள்!

தமிழகத்தின் கரையோர சுற்றுலாத்தலங்கள், முடிவின்றி அகல விரிந்திருக்கும் கடல்நீரின் அழகு சூழ, அனைத்து அம்சங்களும் பொருந்தியனவாய், ஒரு முழுமையான கடற்கரை விடுமுறையை அளிக்கவல்லனவாக உள்ளன.

கடற்கரை விடுமுறை என்றாலே, மஹாபலிபுரம் கடற்கரை நம் கண் முன்னே விரியும். மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவை, தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருவோர்க்கு பயண விருந்தளிப்பனவாய் உள்ளன.

மஹாபலிபுரம் மற்றும் சென்னை கடல் நீரின் விரிவாக்கமாக விளங்கும் கோவளம் கடற்கரை, அதற்குரிய அழகோடு சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது.

நாகப்பட்டின மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கியமான சில கரையோர சுற்றுலாத்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கோடியக்கரை, வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் தரங்கம்பாடி ஆகியவற்றை, உள்ளடக்கியுள்ளது.

நாகூர், வங்காள விரிகுடாவின் கரையோரத்தில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள, இனிய முரண்பாடுகளைக் கொண்ட ஒரு சிறிய நகரமாகும். பூம்புஹார், ஒரு கடற்கரையோர தலமாக இருப்பதோடல்லாமல், வரலாற்றுச் சிறப்பு பெற்று, புகழ் பெற்ற தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றதாகத் திகழ்கிறது.

கன்னியாக்குமரி, இந்தியாவின் தெற்குக் கடைக்கோடியில், வங்காள விரிகுடா, அரேபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை சங்கமமாகும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது.

இதன் பூகோள அமைப்பு மற்றும் சுண்டி இழுக்கும் சுற்றுலா அம்சங்களினால், இது தமிழ்நாடு சுற்றுலாவின், அதீத மவுசு கொண்ட தலமாக விளங்குகிறது. திருச்செந்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை கடற்கரையோரம் அமைந்துள்ள சில முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய முனைகள் ! கலாச்சார மையங்கள்!

தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்கள், அவற்றின் வலிமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சார மணம் கமழும் தன்மைக்காகவே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடையே பெரும் புகழ் பெற்றுள்ளன.

இவ்வகை தலங்களில் முதன்மையானது, செட்டிநாடு பகுதியில், மிகப் பிரபலமாய் இருக்கும் காரைக்குடி ஆகும். இங்குள்ள சமையற்கலை, நெசவுகள், ஏராளமான கோயில்கள் மற்றும் சொகுசு விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள மாளிகைகள், ஆகியவை தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

கொங்கு கலாச்சாரம் தவழும் கோயம்புத்தூர், கோயில் நகரங்களான மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகியவையும் தமிழ் கலாச்சாரத்தின் உறைவிடங்களாக விளங்குகின்றன. இவை, இந்த நவீன யுகத்திலும், கலாச்சாரப் பெருமை பொதிந்து காணப்படுகின்றன.

தமிழ்நாட்டுக் கோயில்கள் – ஆவலை தூண்டும் அற்புதங்கள்!

தமிழ்நாட்டின் கோயில்கள், தமிழ்நாடு சுற்றுலாவின், முத்திரை பதித்த மிக முக்கியமான தலங்களாகும். இங்குள்ள கோயில்களின் கோபுரங்கள் உயர்ந்தோங்கிய வண்ணம், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளும், அடுக்கடுக்கான சித்திர வேலைப்பாடுகள் மற்றும் வடிவங்களும் கொண்டவையாக மிளிர்கின்றன.

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகியவற்றின் தெய்வாம்சம் மற்றும் இவற்றை ஆண்ட அப்போதைய மன்னர்களால் நிறுவப்பட்டுள்ள கட்டிடக்கலை அற்புதங்களை பார்க்கவென்றே சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிகின்றனர்.

தாராசுரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமணஞ்சேரி, திருக்கருக்காவூர் ஆகியன கட்டாயமாக சென்று வரக் கூடிய சில முக்கிய கோயில்களாகும்.

பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு உன்னதமானதோர் சான்றாக, அற்புதமான சிற்ப வடிவங்களை கொண்ட கோயிலாக, உயரிய கட்டிடக்கலை அதிசயமாக விளங்குகிறது.

அலைகளற்ற அமைதியான கடற்கரையில் அமைந்துள்ள இராமேஸ்வரம் கோயில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றை கொண்டுள்ள சிறப்பு வாய்ந்ததாகும். தமிழ்நாட்டில், பாடற்பொருள் சார்ந்த கோயில்கள், ஆன்மீக சுற்றுலாக்களில் முக்கிய இடம் வகிக்கின்றன.

தஞ்சாவூரை சுற்றியுள்ள நவக்கிரக கோயில்கள் (ஒன்பது கிரகங்கள்), ஒன்பது கிரகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும். இக்கோயில்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

ஆலங்குடி (வியாழன்), திருநள்ளாறு (சனி), கஞ்சனூர் (வெள்ளி), திருவேற்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (பாம்பு கிரகம்), கீழ்பெரும்பள்ளம் (பாம்பு கிரகம்), சூரியனார் கோயில் (சூரியக் கடவுள்), திங்களூர் (சந்திரன்) மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) ஆகியனவே அந்த ஒன்பது நவக்கிரக கோயில்களாம்.

பஞ்சபூதக் கோயில்கள் (ஐம்பூதங்கள்) – சிவபெருமான், ஐம்பூதங்களின் ஆதாரமாகவும், அவற்றின் திவ்ய தரிசனமாகவும் போற்றப்பட்டதால், இக்கோயில்கள், அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும்.

திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன; காளஹஸ்தி மட்டும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.

வீரம் மற்றும் விவேகம் நிரம்பியவராய் வர்ணிக்கப்படும், சுப்ரமண்யர் என்றும் அழைக்கப்படும் தமிழ்க் கடவுளான முருகனின், ஆறு போர் முகாம்களான பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருத்தணி மற்றும் சுவாமிமலை ஆகியவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தனிச்சிறப்புடன், கோயில்களுள் ஐம்பொன்னாய் ஜொலிக்கின்றன.

தமிழ்நாட்டின் நகரங்கள்

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்கள், மாநிலத்தின் வெவ்வேறு ஊர்களுக்கும் செல்வதற்கான முக்கிய பயண தலங்களாக விளங்குகின்றன.

@ Aatika Ashreen.