சித்ரா பவுர்ணமி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:34 AM | Best Blogger Tips

சித்ரபுத்திரன்: இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார்.

அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதி வந்தார்.

ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள் புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.

சித்ரா பவுர்ணமி:
============
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.

பூஜை:
=====
சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

பூஜையின் பலன்:
=============
சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.

இந்திரன் செய்த சித்திரை பூஜை!
=======================
இறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம். ஒரு சமயம் இந்திரன், பிரகஸ்பதியை அவமதித்து விட்டான் அதனால் அவனுக்கு ஆலோசனை கூறுவதை பிரகஸ்பதி நிறுத்தி விட்டார். குருவின் வழிகாட்டுதல் இல்லாததால் இந்திரன் பல தீய செயல்களைச் செய்து வந்தான். இதனைக்கண்ட பிரகஸ்பதி, இந்திரனை மன்னித்து மீண்டும் அவனுக்கு நல்வழிகாட்டத் தொடங்கினார். பிரகஸ்பதி இல்லாத சமயத்தில் தான் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய நினைத்த இந்திரன், அவரிடமே யோசனை கேட்க, அவர் தீர்த்த யாத்திரை செல்லும்படி ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனைப்படி தீர்த்தயாத்திரை மேற்கொண்ட இந்திரன், ஒரு கடம்பவனத்தை அடைந்தவுடன் தனது தோள்களிலிருந்து பாவச்சுமை அகற்றப்பட்டது போல் உணர்ந்தான். தன் பாவங்கள் விலகியதற்கான காரணத்தை அறிய தேடியவனின் கண்களுக்கு அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திரவிமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தை போக்கிக் கொண்டான். இந்திரன் வழிபட்ட அந்நாளே சித்ரா பவுர்ணமி என்றும் கூறுகின்றனர். இந்திரன் வழிபட்ட அந்தப் பகுதியே பின்னர் மதுரை மாநகராயிற்றாம். இன்றும் கூட சித்ராபவுர்ணமி இரவில் தேவேந்திரனே வந்து மதுரை சுந்தரேஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

மதுரையில் சித்திரை திருவிழா:
=======================
மதுரையில் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரையிலும், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பங்குனியிலும் நடைபெறும். பங்குனி மாதம் மக்கள் விவசாய வேலையில் ஈடுபடும் காலம். அப்போது மக்கள் கையில் பணப்புழக்கமும் குறைவாக இருக்கும். எனவே மீனாட்சி திருமணத்திற்கும், தேர்த் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அப்போது சைவ-வைணவ பேதமும் இருந்த காலம். எனவே மன்னர் திருமலை நாயக்கர் யோசனை செய்து, பங்குனியில் நடைபெற்ற விழாவை சித்திரைக்கு மாற்றி, கள்ளழகர் விழாவையும் அத்துடன் இணைத்து விட்டார். மன்னரின் உத்தரவை மக்களும் ஏற்றனர். அவர் எண்ணியபடி, மீனாட்சி திருமணம், தேர் விழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி மதுரை குலுங்கியது. சைவ - வைணவ பேதமும் நீங்கி அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவை இன்றளவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.