தியானம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:04 AM | Best Blogger Tips
சுவாமி விவேகானந்தர் சொல்கிறார், ''தியானம் என்பது ஒரு பொருளின் மீது மனதைக் குவிப்பது. ஒரு பொருளின்மீது குவியும் ஆற்றல் மனதுக்கு வந்துவிட்டால், அது எந்தப் பொருளின் மீதும் குவியும் சக்தியைப் பெற்றுவிடும்.'' இதையே பதஞ்சலி முனிவர் ''ப்ரத்யய - ஏக்தானதா தியானம்'' . ஒரே எண்ணத்தை பற்றிய இடைவிடாத சிந்தனை என்கிறார். ராஜயோகம் மனதைக் குவிக்க இரண்டு முறைகளைக் குறிப்பிடுகிறது. ஒன்று ஐம்புலன்களில் இருந்து மனதை விடுவித்துக் கொள்வது. அதாவது பிரத்தியாஹாரம். இரண்டு மனதை ஒரு பொருளின்மீது நிலை நாட்டுவது. அதாவது தாரணை. மனதை புலன்களில் இருந்து விடுவித்தல், பின் அதை ஒரு பொருளின்மீது அல்லது எண்ணத்தின் மீது குவியச் செய்வது என்கிற ஒன்றிணைந்த பயிற்சி படிப்படியாக தியானத்தை அடைய உதவும். மனதை ஒரு புள்ளியில் இருக்க வைப்பதே ஏகாக்கிர சிந்தை எனப்படுகிறது. இது ஒருமுகமாகக் குவிப்பது. தியானம் வேறு. ஏகாக்கிர சிந்தை என்பதில் வலிமையான முயற்சி காணப்படும். சக்தி அதிகம் செலவழியும். அது தியானத்தில் வரவாகிவிடும். ஏகாக்கிர சிந்தையில் இருந்து மீண்டு வரும்போது களைப்பை உணர்வீர்கள். தியானத்திலிருந்து மீண்டு வரும்போது புத்துணர்ச்சியையும், தெம்பையும் உணர்வீர்கள்.சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை உதாரணம் கொள்ளலாம்.
மனம் அடையும் நிலைகளை சமஸ்கிருதத்தில் அவஸ்தா என்பார்கள். அவை ஐந்து வகைப்படும். இந்த ஐந்து வகையான நிலைகளை எல்லா மனிதர்களும் வெவ்வேறு சமயங்களில் அனுபவித்தே தீருவார்கள். அதாவது அலைபாயும் நிலை, உறக்க நிலை, சிதறிய நிலை, ஒன்று குவிந்த நிலை, தியான நிலை என்கிற ஐந்து நிலைகளே அதைப்போல தியான முறைகள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும், அவற்றை ஆறு விஷயங்களில் அடைத்துவிடலாம். அதாவது ஆத்ம சாட்சி தியானம், உன்னத சிந்தனைத் தியானம், நிலையாமைத் தியானம், இஷ்ட தெய்வ உருவத் தியானம், அரூபத் தியானம், பரம் பொருள் தியானம் என்கிற ஆறு முறைகளே அவை. இவைகளில் ஏதாவது ஒன்றை கைகொள்வதால் மட்டுமே சித்திகளை அடையமுடியும் .
பதஞ்சலி முனிவர் யோகதர்ஷனில் கைவல்ய பாதம் என்கிற கடைசி பாதத்தில் ஐந்து விதமாக சித்திகளை அடைய முடியும் என்கிறார். ''ஜன்ம ஔஷதி மந்திர
தப; சமாதிஜா; சித்திய;''
அதாவது ஜன்ம சித்தி, ஔஷத சித்தி, மந்திர சித்தி, தவ சித்தி, சமாதி சித்தி. என்பவைகள் ஐந்து. இதில் சமாதி சித்தியே தியானத்தால் அடையும் சித்தி. ஐந்து சித்திகளிலும் இதுவே உன்னதமானதாகும். சித்திகள் எட்டு நமக்குத் தெரிந்ததே. இந்த சித்திகளை அடைய அஷ்டாங்க யோகம் என்கிற எட்டு படிகளைத் தந்தருளிய அவர் தடைகளையும் குறிப்பிடுகின்றார். தடைகள் எவையெல்லாம் என்று தெரிந்து கொண்டால்தானே அவற்றைத் தகர்த்து முன்னேற முடியும். மூலக் காரணம் மனமானாலும் தடைகளை வரிசைப்படுத்திச் சொல்லியிருக்கிறார். 1- சோம்பல், 2- சந்தேகம், 3- உற்சாகமின்மை, 4- புலனின்ப நாட்டம், 5- தவறாகப் புரிந்துகொள்ளுதல், 6- கவனமின்மை, 7- சமாதியில் நிலை பெறாமை, 8 கிடைத்ததை நழுவ விடுதல் என்கிற மனதின் எட்டு சேஷ்டைகளும் 9 தாவதாக உடல் ரீதியாக மனம் அனுபவிக்கும் துன்பமாகிய வியாதி என்கிற 9 தடைகளே அவை. இவை எல்லாவற்றிலும் வலிமையானதாக சந்தேகத்தையே குறிப்பிடுகின்றார்.
தியானம் என்றாலே பல சந்தேகங்கள் வந்துவிடுகிறது. அதற்கு பல விளக்கங்களும் தேவைப்படுகிறது.