பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:49 AM | Best Blogger Tips


உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், தினசரி புதிய பிரச்னைகளும் வந்து கொண்டிருக்கின்றன. உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்னை. நாளை தீர்க்க வேண்டிய பிரச்னை. சில நாள் அல்லது சில மாதங்கள் கழித்து தீர்க்க வேண்டிய பிரச்னை என பிரச்னைகளின் வகைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு, அதனை எதிர்கொண்டு தீர்க்க முயல வேண்டும்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடன் பிரச்னை, தொழில் பிரச்னை, குடும்பப் பிரச்னை, தொழிலை வெற்றிகரமாகச் செய்யும்போது எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை என அடுக்கடுக்காக வருகிறது என வருத்தப்பட்டார். ஆனால், அவர் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் முடங்கி விடவில்லை.

கடன்காரர்கள் வந்தால் சளைக்காமல் பதில் கூறுவார். தொழிலாளர்கள் பிரச்னையை சாதுரியமாகப் பேசி முடிப்பார். வாழ்க்கையே போராட்டம்தான் என்பார்.

எந்தப் பிரச்னை வந்தாலும் அதில் மூழ்கிவிட வேண்டாம். சதா பிரச்னைகளை எண்ணிக் கொண்டிருந்தால் பிரச்னை தீராது. ஒரு பிரச்னையைத் தீர்க்க பல வழிகளை யோசிக்க வேண்டும். பிரச்னை குறித்து அலசி ஆராய வேண்டும். எந்த முடிவு என தீர்மானம் செய்ய வேண்டும். அந்த முடிவை அடையும் வழிமுறைகளை யோசிக்க வேண்டும். இறுதியில் எந்த வழி சிறந்தது என ஆய்வு செய்து, அந்த வழியில் செல்ல வேண்டும்.

இதனை விட்டுவிட்டு, இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என சும்மா இருந்து கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தால், அந்தப் பிரச்னையில் மூழ்க நேரிடும். பின்னர், அதிலிருந்து எழுந்துவருவது கடினமாக இருக்கும். குழப்ப நிலையிலிருந்து மீண்டு தெளிவான நிலையில் இருந்து கொண்டு பிரச்னைகள் குறித்து யோசிக்க வேண்டும். தேவைப்பட்டால் பிறரின் ஆலோசனையைக் கேட்கலாம்.

நமது பழக்கங்களும் மனப்போக்கும் ஒரு புதிய பிரச்னையைத் தொலைவில் நின்று பார்க்க முடியாமல், ஆராய முடியாமல் தடுக்கும்.

அடுத்து, நமது விருப்பு வெறுப்புகள் நம்மில் ஒரு பிடிவாதத்தை ஏற்படுத்தி விடும். பிரச்னைகளில் தடை ஏற்படும்போது சற்று பின்வாங்கிப் புதிய உத்திகளையும், புதிய திட்டங்களையும் யோசிக்க வேண்டும்.

ஒரு துறவி தன் சீடர்களுடன் காட்டுவழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆறு ஒன்று குறுக்கே ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வேண்டும் என முடிவு எடுத்தபோது, அங்குவந்த இளம்பெண் ஒருவர், சுவாமி எனக்கு நீச்சல் தெரியாது. என்னை ஆற்றைக் கடந்து அக்கரைக்கு கொண்டு செல்ல தாங்கள் உதவ வேண்டும் எனக் கேட்டார். அப் பெண் கூறியதைக் கேட்டதும் சீடர்களுக்குக் கோபம் வந்தது.

ஆனால் துறவி, "நீ என் தோளில் அமர்ந்து கொள். உன்னை அக்கரைக்குக் கொண்டு சென்று விடுகிறேன்' என பெண்ணிடம் கூறியதையடுத்து அப் பெண், துறவியின் தோளில் அமர்ந்து கொண்டார். துறவி தண்ணீரைக் கடந்து மறு கரையில் அப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் நடக்கத் தொடங்கினார். சீடர்கள் கசமுசாவென பேசிக் கொண்டார்கள். சிறிது தூரம் சென்ற பின்னர் ஒரு சீடன், "சுவாமி, நீங்கள் அப் பெணை தோளில் சுமந்து சென்றது தவறு என எங்களுக்குப்படுகிறது' என்றான்.

"நான் அப் பெண்ணை அப்போதே கீழே இறக்கிவிட்டு விட்டேன். நீ இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறாய்' எனத் துறவி கேட்டராம். அதுபோல, நாம் பிரச்னைகளை தேவையில்லாமல் நம் மனதில் வைத்துக்கொண்டு தடுமாறுகிறோம்.

சளைக்காத மனம் வேண்டும் என ஓர் அறிஞன் கூறுகிறான். பந்து விளையாட்டில், பந்தை எதிர்கொள்பவனே வெற்றி கொள்கிறான். அதுபோல பிரச்னைகளை எதிர்கொள்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். வாழ்வின் மிக முக்கியமான பிரச்னை -நாம் நம் வாழ்வில் அதிர்ஷ்டத்தைத் தோற்றுவிக்க முடியுமா என்பதுதான். "முடியும்' என பல ஞானிகள் கூறியுள்ளார்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறு சம்பவம் நேருகிறது. உடனே நம் மனம் நமது பிரச்னையுடன் அதை இணைத்து முடிவு காண்கிறது. சொல்லப் போனால் நமது மனம் பிரச்னைக்கு என்ன தீர்வு என சிந்தித்த வண்ணம், எதிர்பார்த்த வண்ணம் உள்ளது. மனம் எதிர்பார்க்கும்போது, அது எதிர்பார்ப்பதே நிகழ்கிறது.

பிரச்னைகளுக்கு விடை இருக்கும் என திடமாக நம்ப வேண்டும். நமது அன்றாட வாழ்வில் சிறு பிரச்னைகள், பெரும் பிரச்னைகள் என நமது வாழ்க்கை, பிரச்னைகளால் நிரம்பியுள்ளது. பல சிறு பிரச்னைகளுக்குச் சரியாக முடிவு எடுக்கும்போது, வாழ்க்கை பல சிறு வெற்றிகளால் அமைகிறது. சிறு வெற்றிகளை இணைத்து சாதனை என்ற மாலையை நாம் அணிந்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.