கோபால கிருஷ்ண கோகலே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவர். கோகலே இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆவார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் அரசியல் குருவாக இவர் கருதப்படுகிறார்.
கோபால கிருஷ்ண கோகலே, 1866, மே 9 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில், ஒரு சித்பவன் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஓர் அங்கமாக இருந்தது. கோகலேவின் குடும்பம் ஏழ்மையில் இருந்த போதிலும், அவர்கள் கோகலேவுக்கு ஆங்கிலக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என்று நம்பினர். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே, 1884 ம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார்.
கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது – ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி, ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார். ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய கல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது.
சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரானடேவின் ஆதரவாளராக கோகலே, 1889ல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரானார். பால கங்காதர திலகர், தாதாபாய் நௌரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய் மற்றும் அன்னிபெசன்ட் போன்ற சமகாலத்திய தலைவர்களுடன் முரண்பாடுகளுடனும், இணைந்தும் கோகலே, சாதாரண இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடினார்.
அவர் தன்னுடைய எண்ணங்களில் மிதமானவராகவே இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத் தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார்.
அயர்லாந்து சென்ற கோகலே அங்கு ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது. இருவருமே சித்பவன் பிராமணர்கள். இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள். இருவருமே டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இருவரது அரசியல் வழிமுறை தொடர்பான அவர்களின் வேறுபட்ட எண்ணங்கள் வெளிப்பட்டது.
திலகருடனான கோகலேவின் முதல் முரண்பாடு அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே குழுவினர், இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமணத்தைத் தடுத்திடும் சட்டத்தை விரும்பினர். திலகர் அதை எதிர்த்தார்.
குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை திலகர் எதிர்க்கவில்லை ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். இத்தகைய சீர்திருத்தங்களை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்பாத்து திலகரின் கருத்தாக இருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே குழுவினர் ஆங்கிலேய அரசின் துணையுடன் அதற்கான மசோதாவை பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக ஆக்கினர்.
1905 ம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே இப்போது தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்தார். 1906 ம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசின் இரு பிரிவுகளுக்குள் பலத்த மோதல் ஏற்பட்டு, காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. கோகலே, திலகர் இருவரும் முறையே காங்கிரசின் மிதவாதி, தீவிரவாதிகளின் தலைவரானார்கள்.
திலகர், ஆங்கிலேயப் பேரரசை வீழ்த்துவதற்கு உள்நாட்டு கலவரம் மற்றும் நேரடி புரட்சியின் ஆதரவாளர், கோகலேவோ ஒரு மிதமான மறுமலர்ச்சியாளர். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து பத்தாண்டு காலத்துக்கு அதன் செயல்பாட்டுத்தன்மையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. 1916 ம் ஆண்டில் கோகலே இறந்த பின்னரே இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.
1905 ம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, 'இந்தியச சேவகர்கள்' அமைப்பினை ஏற்படுத்தினார். ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று அவர் எண்ணினார், இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார்.
இந்த அமைப்பு இந்திய கல்வியை முன்னேற்றும் நோக்கத்தை உள்ளார்வத்துடன் முன்னெடுத்தது. மேலும் அதன் பல செயல்முறைத் திட்டங்களுடன், நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது, பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கியது. கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும், அது இன்றும் நிலைத்திருக்கிறது,
கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை. ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சியை ஏற்கனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியமிழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கோகலே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலேயர்களுடன் நேரடியாந நட்புறவுடன் பணி செய்தார்.
1899 ல், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903, மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவி வகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பேரரசின் சட்டப் பேரவை 1909 ல் விரிவடைந்த பின்னர் அதில் சேவை புரிந்தார். அங்கு அவர் ஆண்டு வரவு செலவு திட்ட விவாதங்களில் பெரிதும் பங்காற்றினார். இங்கிலாந்து நாட்டின் செயலாளர் லார்ட் ஜான் மார்லேவைச் சந்திக்க லண்டனுக்கு அழைக்கப்படும் அளவுக்கு அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு சுமுகமான உறவை உருவாக்கிக் கொண்டார்.
1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிண்டோ-மார்லே திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ம் ஆண்டு, கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக ஆங்கிலேயப் பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.
மகாத்மா காந்தி வளர்ச்சி பெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். 1912 ல் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அறிவுரைகளைப் பெற்றார். 1920 க்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய வழிகாட்டி என்றே குறிப்பிடுகிறார்.
பாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் முன்னோடியாகவும் கோகலே இருந்தார், ஜின்னாவை "இந்து- முகமதிய ஒற்றுமையின் தூதுவர்" என்று கோகலே புகழ்ந்தார். கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதி வரையிலும் தொடர்ந்து அரசியல்ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப் பேரவையிலும் ஈடுபட்டு வந்தார். எனினும் இத்தகைய மன அழுத்தங்கள் இவரது உயிரை பலிவாங்கின. 1915 , பிப். 19 ம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் காலமானார்.
இந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் கோகலேவின் பாதிப்பு பெரும் பங்கு வகிப்பதாகும். ஆங்கிலேய பேரரசின் உயர்ந்த நிலையில் இருந்தவர்களுடன் கோகலே கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலம், இந்தியாவின் காலனியாதிக்க தலைமையாளர்களை இணக்கமான முறையில் சிந்திக்க வைத்தார். இவரது தாக்கமே அஹிம்சா மூர்த்தியாக மகாத்மா காந்தி மலர வழிவகுத்தது எனில் மிகையில்லை. 1950 ஆம் ஆண்டில் குடியரசான இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'வெஸ்மினிஸ்டர்' மாதிரியான அரசாங்கத்தின் உருவாக்கத்தில் கோகலேவின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு பெரும் பங்குண்டு.