எலுமிச்சை பற்றிய தகவல்:

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:53 | Best Blogger Tips

வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.

சட்டென இரண்டாக வெட்டி அதன் சாறை தண்ணீரில் கலந்து உப்போ, சர்க்கரையோ போட்டு கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் சுவையான குளிர்பானம் தயார்.
இப்படி சட்டென நாம் தயாரிக்கும் எலுமிச்சைப் பழச்சாற்றில் எத்தனை நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.
எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு என்பது கவனிக்கத் தக்கது.
எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதனால் வரும் பலன்களில் சில இதோ…

1. எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணி.

2. எலுமிச்சைப் பழச்சாறு குருதி சுத்தீகரிப்பானாகவும் செயல்படுகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.

3. எலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.

4. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும். மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.

5. எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

6. வாய் துற்நாற்றம் இருக்கிறதா ? பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா ? எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து !

7. உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா ? தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

8. உயர் குருதி அழுத்தம் உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மிகவும் நல்லது. உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் கூட எலுமிச்சைப் பழச்சாறு குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

9. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.

10. மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு எலுமிச்சைப் பழச்சாறு மருந்தாகிறது. உடலிலுள்ள தேவையற்ற நச்சுத்தன்மை, பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றுவதன் மூலம் உடலுக்கு நலமளிக்கிறது எலுமிச்சைப் பழச்சாறு !

இத்தனை பயன்கள் கொண்ட எலுமிச்சை பழச்சாறை பழச்சாறை எப்படி அருந்தலாம் ? எவ்வளவு அருந்தலாம் ? எனும் குழப்பம் இருக்கிறதா ? மருத்துவர்களின் ஆலோசனையைப் பாருங்கள்.

எழுபது கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழுமையான எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது பயனளிக்கும். குறிப்பாக காலையில் குடிப்பது சாலச் சிறந்தது. எழுபது கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்களுக்கு அரை எலுமிச்சைச் சாறே போதுமானது