அன்னாபிஷேகம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:40 | Best Blogger Tips
ஐப்பசி மாதப் பௌர்ணமியில் [வரும் ஞாயிறு 28/10/2012] நிகழ்கின்ற அன்னாபிஷேகம் சிவபெருமான் சிறப்பாகச் செய்யப்படுவது.*** www.fb.com/thirumarai

சிவன் பரம்பொருள். சிவனது பிரதிபிம்பம் எல்லா உயிர்களிலும் பதிந்துள்ளது. அபிஷேக அன்னப் போர்வையால் சிவலிங்கத் திருமேனியில் அகமும் புறமும் குளிரும்போது, உயிர்களும் பேர் அருட் கவசத்தால் குளிரும்.


சிவன் அபிஷேகப் பிரியன். அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை.அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்பு.

அன்னம், அபிஷேக நிலையில் ஆண்டவனை முழுவதும் தழுவி, சிவனைத் தன்னுள் அகப்படுத்தி, சிவனிடம் அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயக்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன. இதன் உண்மை நிலையை உணர்த்துவதே அன்ன அபிஷேகம்.

அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களின் உயிர்நாடி. உலக வாழ்க்கைக்கு அச்சாணி. அன்னமே பிரத்யட்சமான பிரம்ம சொரூபம்; விஷ்ணு சொரூபம்; சிவ சொரூபம். ஆகையால், அது மிக உயர்வானது. நம் வாழ்வின் இயக்கத்துக்கு ஜீவாதாரமாக இருப்பது அன்னம்.

பட்டினி இருந்து, மகாபிஷேகம் செய்து, அதன்பின் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை உண்ணும்போது பக்தி, புண்ணியப் பலன்கள் பக்தர்களைச் சேர்கின்றன.

சிவலிங்கத்திற்கு மட்டும் சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.

அன்ன அபிஷேகத்தின்போது சிவலிங்கத் திருமேனி முழுவதும் அடங்கும்படியாக அன்னத்தை ஒரு வெள்ளைப் பட்டுப் போர்வையைப்போலச் சார்த்துகின்றனர்.

அப்போது கரிய சிவலிங்கத் திருமேனி, அன்னப் போர்வையால் தூய வெள்ளைத் திருமேனியாகக் காட்சியளிப்பது ஒரு அரிய சிறப்பான வேறுபட்ட தரிசனம்

அறுவடையாகும் புதுநெல்லைச் சிவனுக்கு முதலில் அர்ப்பணம் செய்வதைப்போல அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது.

ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்னாபிஷேக நாள்.