அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில் மூலவர்:திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)

மணக்கால் அய்யம்பேட்டை | 2:37 PM | Best Blogger Tips
அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில்

மூலவர்:திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
அம்மன்/தாயார்:வேதநாயகி
தல விருட்சம்:வன்னிமரம், புன்னைமரம்

தீர்த்தம்:வேததீர்த்தம், மணிகர்ணிகை
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருமறைக்காடு
ஊர்:வேதாரண்யம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

யாழைப்பழித் தன்னமொழி மங்கைஒரு பாகன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம்பேணில் தாழைப்பொழில் ஊடேசென்று பூழைதலை நுழைந்த வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 125வது தலம்.

திருவிழா:

மாசி மகம் - பிரம்மோற்சவம் - 29 நாட்கள் திருவிழா - அடைக்கப்பட்டிருந்த கதவு திறந்ததை கொண்டாடும் வகையில் திருவிழா நடக்கும். இதில் மக தீர்த்தம் அன்று சுவாமி கடலுக்கு போய் தீர்த்தமாடி வருவது சிறப்பு - 73 மூவர் சுவாமி புறப்பாடும் கைலாச வாகனம் புறப்பாடும் நடக்கும். ஆடிப்பூரம் - 10 நாட்கள் - இது அம்மனுக்கு நடக்கும் பெரிய அளவிலான திருவிழா ஆகும். விநாயகர் சதுர்த்தி, கந்தர் சஷ்டி ஆகியன இத்தலத்தின் முக்கிய விழா நாட்கள் ஆகும்.. மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு. இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது. வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம். நவகிரகங்கள் ஒரே முகத்தோடு தனிதனி விக்ரகமாக சுவாமி - அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், திருமறைக்காடு- 614 810. நாகப்பட்டினம் மாவட்டம்.

போன்:

+91- 4369 -250 238

பொது தகவல்:

இத்தலத்தில் மேற்குக் கோபுர வாயிலில் உள்ள விநாயகர், இராமபிரானைத் துரத்திவந்த வீரகத்தியை தமது ஒரு காலைத் தூக்கி விரட்டியதாக வரலாறு.

இங்கு சுவாமி அம்பாள் விநாயகர் மூவருக்கும் தனித்தனி கொடிமரம் உண்டு.

பிரார்த்தனை

இத்தலத்தில் வழிபடுவோர்க்கு பாவங்கள் விலகும். நாக தோசம் நீங்கும். இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

இதில் நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பிரம்மகத்தி போன்ற பாவங்களும் நீங்கும்.பல ஆண்டுகள் யோகம் , தானம், தவம் செய்த பலன்களை அடையலாம். இத்தலத்திற்கு தெற்கே நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்னும் கடல் தீர்த்தம். இதில் ஒருமுறை நீராடுவது சேதுவில் நூறு தடவை நீராடுவதற்கு சமம்.

இத்தீர்த்தங்களில் ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும்.

இத்தலத்து திருமறைக்காடரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்:

குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி வழிபடுகின்றனர். மிகப்புகழ்பெற்ற பரிகார தோச நிவர்த்தி தலம் என்பதால் பல்வேறு தோசங்களுக்கும் நிவர்த்தி பரிகாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி , பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

தலபெருமை:

மூடியிருந்த திருக்கோயில் கதவு திறந்த கதை : சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவதலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றி பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர். அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்துமறைக்காட்டீசுவரரை வழிபட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர். இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர். உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார்.அதைக்கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர்மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர்., சம்பந்தரே இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும் என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் சதுரம் மறை என்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக் கொண்டது. இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.

வேதநாயகி : இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில் வீணாவாத விதூஷணி எனவும் வழங்கப்படுகிறது. அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர். இதன் நினைவாக சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம்.

துர்க்கை : இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம்.

தியாகராசர் : இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று.முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்தங்களுள் ஒன்று. இவர் செய்யும் நடனம் அம்சநடனம் எனப்படும்.

திருமறைக்காடு என்று தமிழிலும், வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம்.

சப்தவிடத்தலங்களுள் இது இரண்டாவது தலம்.

சக்தி பீடங்களில் மிக்க விசேசம் வாய்ந்த சுந்தரி பீடத்தைப் பெற்று விளங்கும் கோயில்.

மூலவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்று சிறப்பு பெயரும் உண்டு.

வீணை இல்லாத சரஸ்வதி இருக்கும் சிவதலம் இது.

63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையறாக்கள் 10 பேர்., ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.

ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் இறைவனை வழிபட்ட தலம்.

அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம்.

மனு, மாந்தாதா, தசரதன், ராமன், பஞ்சபாண்டவர், மகாபலி முதலியோர் வழிபட்ட பேறு பெற்ற தலம்.

பதினாறு சபைகளில் 12 வது தேவ பக்த சபை என்ற திருநாமம் உடைய தலம்.

புகழ்பெற்ற கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கேதான் பாடியருளினார்.

தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்.

திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் இவ்வூரைச் சேர்ந்தவர்.

இக்கோயில் வளாகத்திற்கு வெளியில் உள்ள அத்தனை இடங்களிலும் உப்பு கரிக்கும் தண்ணீரே இருக்கும். இத்தலத்தில் மட்டுமே நல்லதண்ணீர் உள்ளது. இவ்வூருக்கு குடிதண்ணீர் இந்த கோயில் வளாகத்துக்குள் இருந்து எடுத்துதான் பயன்படுத்தப்படுகிறது.

தல வரலாறு:

வடமொழி வேதங்கள் ரிக், யசூர்,சாம, அதர்வண என்ற நான்கும் மனித உருக் கொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன் இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை ., இனி நாங்கள் இருப்பது நல்லதல்ல என்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது.பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும் ,வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம் என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம்.

இருப்பிடம் :

நாகபட்டினத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் வேதாரண்யத்துக்கு பேருந்து வசதி உள்ளது. திருத்துறைப்பூண்டியிருந்தும் பேருந்து வசதி உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாகபட்டினம் - 45 கி.மீ. திருத்துறைபூண்டி - 35 கி.மீ. திருவாரூர் - 63 கி.மீ. கோடியக்கரை - 12 கி.மீ.

அருகிலுள்ள ரயில் நிலையம் :

வேதாரண்யம்