வர்ணாசிரமத்தை எதிர்த்த முத்துக்குட்டி என்கிற அய்யா வைகுண்டர் மற்றும் அய்யாவழி வரலாறு பற்றிய ஒரு வரலாற்று தகவல் !!! '

மணக்கால் அய்யம்பேட்டை | 3:14 PM | Best Blogger Tips
நம் பெண்களுக்கு இழுக்கென்றால் நாம் சகித்துக் கொண்டு இருப்போமா? திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்த பதினெட்டு சாதியினர் மன்னன் சுவாதித் திருநாளின் அடக்குமுறைக்குப் பயந்து கொண்டு மார்பு வரி, தோள்சீலை வரி போன்றவைகளைக் கட்டிக் கொண்டிருந்திருக்கின்றனர். உயர் சாதியினரின் முன்பு மார்பைத் திறந்து போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும் சட்டம் போட்ட மன்னன் எவ்வளவு கொடூரமானவானாக இருந்திருக்க வேண்டும். அவனை எதிர்த்து நின்று மக்களுக்கு எழுச்சி ஊட்டிய அய்யாவைப் பாராட்டியே தீர வேண்டும்.உயிர்ப்பலியை அய்யா வெறுத்தார். அதற்காக அடுத்த பாராட்டு.

பேய், பிசாசு, பில்லி சூனியம் இல்லை என்றார். அதற்காக அடுத்த பாராட்டு. மூடநம்பிக்கைக்கு எதிரான குரலல்லவா? கடவுள் பெயரைச் சொல்லி மாய மந்திரங்கள் செய்பவர்களை நம்ப வேண்டாம் என்றார். அதற்காக அடுத்த பாராட்டு. நாம் கண்கூடாகக் காண்கிறோம். லிங்கத்தை வாயிலிருந்து வரவைப்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட போது லிங்கத்தை எடுப்பதில்லையே... அது தந்திரம்தானே!

அய்யா தருமம் செய்வதுதான் சிறந்த பக்தி என்றார். அதற்கொரு பாராட்டு. நிறையக் கடவுள் மனிதர்களைப் போல் அய்யாவிடம் படோடபம் இல்லை. அவர் உபயோகித்ததெல்லாம் சாதாராணக் கிராமத்து வாசி உபயோகித்த வார்த்தைகள்தாம். வீண் வார்த்தை ஜாலம் இல்லை .அய்யா ஒரு சமூகப் புரட்சியாளர்; இயலாதவர்களுக்கு உதவணும் என்கிற எண்ணம் கொண்ட தர்ம சிந்தனையாளர்; வருங்காலம் அறிந்து சொன்ன ஞானி என்பதில் ஐயமில்லை.

தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிரிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பச்சை பசேலாக காட்சி தரும் செழிப்பான பகுதியில் சாமிதோப்பு என்னும் அழகிய கிராமம். இந்திய அளவில் அவ்வளவாக பேசப்பாடாத இந்த ஊர் இந்துமதத்தின் வர்ணாஸ்ரம சாதிக்கொடுமைகளுக்கு எதிராக தனிக்களத்தை அமைத்த "அய்யாவழியின்" முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினர் கூடும் இந்த இடங்கள் கோவில் என அழைக்கப்படுவதில்லை; மாறாக 'பதி', 'நிழல்தாங்கல்' என அழைக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர்களால் கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் சாணார், பரவர், மூக்குவர், என 18 வகை சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் மனிதனை விட கேவலமாக நடத்தப்பட்டனர். பட்டன், தம்புரான், தம்பி, நம்பூதிரி, பிள்ளைமார், நாயர் (மேனன்), பிராமணர் என பல பல ஆதிக்கசாதியினர் திருவிதாங்கூர் மன்னனின் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைகளை மக்கள் மீது நடத்தினர். மன்னன் செல்லுகிற பகுதிகளில் ஆதிக்கசாதியினரை சார்ந்த பெண்கள் சிலரது வீடு 'அம்ம வீடு' என அறியப்பட்டது. இந்த 'அம்ம வீடு', 'உள்ளிருப்பு வீடு' களில் தான் மன்னன் ஓய்வெடுப்பது வழக்கம். கைமாறாக அந்த பகுதி நிலங்கள், வருவாய் துறை, நிர்வாகம் இவர்களது 'ஆதிக்கத்தில்' இருந்தது. மன்னனுக்கும் பார்ப்பனீயத்திற்குமான தொடர்பு இந்த உறவு முறைகளில் இருந்ததை பயன்படுத்தி ஆதிக்கசாதியினர் குறுநிலமன்னர்கள் போல தீர்ப்பு, தண்டனை வழங்குதல் என தொடர்ந்தனர்.

1809ல் பொன்னுநாடார், வெயியேலாள் தம்பதியினருக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அன்றைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட சாணார் சாதியை சார்ந்தவர்கள் அவர்கள். அந்த சிறுவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். "திருமுடியுடன் விஷ்ணு" என்னும் பொருள் படும் இந்த பெயரை கீழ்சாதி சாணார் குடும்பம் சூட்டியதும் பார்ப்பனீய ஆதிக்கசாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பெற்றோர் அந்த பெயரை முத்துகுட்டி என மாற்றினர். தாழ்த்தப்பட்ட குழந்தைக்கு பார்ப்பனீய தெய்வத்தின் பெயரை கூட சூட்ட அனுமதிக்காத இந்துத்துவ சாதிவெறியின் மத்தியில் பிறந்த இந்த குழந்தை தான் வளர்ந்து "அய்யா வைகுண்டர்" ஆகி, சாதி எதிர்ப்பை ஆயுதமாக எடுக்குமென்பது அன்றைய ஆதிக்கசாதியினருக்கு தெரியவில்லை. 17 வயதில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள புவியூர் என்னும் ஊரை சார்ந்த திருமாலம்மாள் என்பவரை மணந்தார்

முத்துகுட்டி பனையேறுதல், விவசாய கூலி வேலை வழி தனது வருமானத்தை தேடிக்கொண்டார். சாதாரண மக்களில் ஒருவராக காணப்பட்ட இவர் உருவாக்கிய வழிமுறை 'அய்யாவழி' என அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிமதம் என்கிறார் இன்று அய்யாவழியின் தலைமை பதியை நிர்வகித்து வருகிற பாலபிரஜாதிபதி அடிகளார் (அய்யாவின் வாழ்க்கை பற்றி தனிப்பதிவில் பார்க்கலாம்).


அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள் !!


பூசை செய்யக்கூடாது.

பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது

யாகம், ஹோமம் கூடாது

மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.

எந்த வழிபாடும் கூடாது

ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது

காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது

மாலையிடுதல் கூடாது

யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்

லஞ்சத்தை ஏற்காதீர்கள்

ஆசைகளை துறந்துவிடுங்கள்.

உண்மையாக இருங்கள் !!!

இவை அனைத்தும் அய்யா தனது வழியை பின்பற்றும் மக்களுக்கு கொடுத்த ஒழுங்குமுறைகள். இதன் வழி அய்யாவழி தனியொரு மதமாகவே இருப்பதை காணலாம்.

அச்சம் தவிர்த்து நிமிர்ந்து நில் "அய்யாவழி" !!!

இந்துமதத்திலிருந்து முற்றிலும் எதிர்பாதையை மக்களுக்கு காட்டுகிறது. தாங்களை உயர்த்திக்கொண்ட சாதியினரின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ""இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள்." என அய்யா சொன்னது இந்துமத வர்ணாஸ்ரம மனுதர்மத்தையும், அதன் வேதங்களையும் புறக்கணித்து புதிய பாதையை மக்களுக்கு தந்தது. கொடுமையான பார்ப்பனீய சட்டத்தை உடைத்து மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது அய்யாவின் வழி. விடுதலைக்கான பாதைக்கு முதல் நிலை அச்சம் தவிர்ப்பது அய்யாவழி அதை செய்தது.

தன்மானமும், சுயமரியாதையும் !!!

"நீங்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையுடனும் வாழ்ந்தால் கலி (தீமை/கொடுமைகள்) தானாகவே அழியும்" என அகிலத்திரட்டில் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதனை சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் அடிமையற்ற நிலையில் நிமிர்ந்து நடக்க வைப்பது அய்யாவின் முக்கிய பணியாக அமைந்துள்ளது. அகிலத்திரட்டில் இதை பல பகுதிகளில் காணலாம்.இந்துமதம் கீழ்சாதி என தீட்டாக வைத்திருந்து ஆடை அணிந்துகொள்ள கூட வரிவிதித்த காலத்தில்; ஆண்கள் தலையில் தலைப்பாகை அணியவும், பெண்கள் தோழ்ச்சீலை அணியவும் வழியை உருவாக்கி மக்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை உருவாக்கியது. இந்த அடையாளங்கள் "மனிதனாக பிறந்த எவனும் எவனுக்கு முன்னும் அடிமையில்லை" என்ற சுயமரியாதையை ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் விதைத்தது. மனித மாண்பை உன்னதமாக மக்களுக்கு எளிய வழியில் இந்த முறைகள் உணர்த்தின.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக

அய்யாவழியை சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.

பூசை, காணிக்கை, யாகங்களுக்கு எதிராக !!!

அய்யாவழி பூசை, சிலைவழிபாடு, பேய்வழிபாடு, பலியிடுதல், காணிக்கை செலுத்துதல், யாகம் முதலியவற்றை நடத்தக்கூடாது. இவைகளினால் எந்த பலனும் இல்லை. மக்களின் உழைப்பை யாரோ பூசாரிகள் அனுபவிக்க கொடுக்ககூடாது என அய்யா மக்களுக்கு அறிவுறுத்தினார்.
பூசாரிகளுக்கு கண்டனம்

"வேத பிராமணர்களுக்கு தொல்லை தர நாம் வந்தோம்", "பூணூல் அணிபவர்கள் இந்த பூமியில் இனிமேல் இருக்கமாட்டார்கள்" என புரோகிதர்களை கண்டிக்கிறார் அய்யா. ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் பிராமணர்கள் கடைபிடித்து வரும் மனிதத்தன்மையற்ற செயல்களை அய்யா கண்டித்தார். அய்யாவழி மக்களுக்கு பூசாரி எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டளை பிறப்பித்தார்.

விக்கிரக வழிபாட்டை மறுத்தல் !!

மூடப்பழக்கத்தையும், வெற்று சடங்குகளையும் வளர்த்து மக்களை அறிவில்லாதவர்களாகவும், அறியாமையிலும் வைத்து தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க பூசாரிகளுக்கு உதவியாக இருக்கும் விக்கிரக வழிபாட்டை அய்யா மறுத்தார். தனது வழியை பின்பற்றுபவர்கள் விக்கிரகங்களை வழிபடுவதை எதிர்க்கவும், மறுக்கவும் கட்டாயமாக்கினார்.

அய்யா வழிமுறை !!!

அய்யாவழி முறையில் கண்ணாடி வைத்து இருபக்கமும் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருக்கப்படும். அய்யாவழியினர் அந்த கண்ணாடியை பார்த்து தான் வணக்கம் செலுத்துவர். "மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது" என்ற உயரிய கோட்பாட்டை கண்ணாடி முன் நின்று வணங்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே காண அய்யா வழிவகை செய்தார்.

அய்யாவழியினர் கூடி "அகிலத்திரட்டு" வாசித்து ஒன்றாக கலந்து வணக்கம் செலுத்தும் இடங்களின் பெயர் 'பதி' அல்லது 'தாங்கல்' என அழைக்கப்படுகிறது. சாமிதோப்பில் அமைந்துள்ள பதியின் கிணற்றில் அனைத்து சாதியினரும் சேர்ந்து குளிக்க, அதே கிணற்று தண்ணியை எடுத்து சமைத்து சேர்ந்து உணவருந்த என சாதிபேதமற்ற வழிமுறையை உருவாக்கினார்.

ஆண்பெண் சமஉரிமை !!!

அய்யாவழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன.

அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமையுண்டு.

அய்யாவழி ஒரு தனிமதம் !!!

கலி பற்றிய விடயத்திலும், அதை எதிர்கொள்ளுவதிலும் அய்யாவழி மற்ற இந்துமதத்திலிருந்து முரணானது. கலியை (தீமையை) அழிக்க ஆயுதங்கள் தாங்கி கடவுள்கள் அவதரிக்கும் இந்துமதத்திலிருந்து வேறுபட்ட பார்வையை அணுகுமுறை வழியாக அய்யாவழி மதம் உருவாக்கியது.

இந்துமதம் தனது நம்பிக்கையை வர்ணாஸ்ரம சாதி அடித்தளத்திலிருந்து கட்டி பரவலாக்கி வைத்திருக்கிறது. அது கோயில்கள் பிரதான இடங்களாகவும், கடவுள் வழிபாடு, காணிக்கை, வழிபாடு, யாகம், விக்கிரகம், அபிசேகங்கள், யாகம், பூசாரி என அதன் ஆதாரங்களாக விளங்குகிறது. பெண்ணுக்கு இந்துமத கோவில்களில் வழிபாட்டில் உரிமையில்லை.

அய்யாவழி ஆரிய இந்துமதத்திலிருந்து எதிரான திசையில் மக்களை ஒன்று திரட்டியது. அய்யாவழியை தனிமதமாக பதிய இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் சாதகமாக செய்யவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அய்யாவழி மக்களை இந்துமதம் என கணக்கில் சேர்க்கும் மோசடி கடந்த காலங்கள் தொட்டு நடந்து வருகிறது. அய்யாவழியினர் தங்களை தனிமதமாக அடையாளம் காணவே விரும்புகின்றனர்.

இந்துத்துவம் என்கிற புளியமர நிழலில் அழிந்துபோகும் அழகிய ரோஜாசெடியாக நமது பண்பாடு ஆபத்தை சந்திக்கிறது. இந்த முறை பண்பாட்டை அழிப்பவர்கள் இந்துத்துவவாதிகள். அவர்களது எழுத்துக்கள் பொய்யையும் உண்மையாக நம்ப வைக்கும் கலையில் கைத்தேர்ந்தது. விழிப்பாக இருப்போம்.

தகவலுக்கு நன்றி
யோ .திருவள்ளுவர் ,கமல் கண்ணன்