முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிகள் மறைய….

மணக்கால் அய்யம்பேட்டை | 5:11 PM | Best Blogger Tips
உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும். உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும். நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது.

இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு, இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம்.


இதற்கு சரியான உணவு முறையை பின்பற்றுதலும், சரியான சிகிச்சையுமே சிறந்தது. முகப் பொலிவிற்கான ரசாயன பூச்சுகள் பலன் தராது. சிலருக்கு சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாட்டின் காரணமாக முகத்திலும் சருமத்திலும் பாதிப்புகள் உண்டாகும். இந்த பாதிப்புகளைக் களைய இயற்கையான சில பொருட்களைப் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதுமின்றி இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.

முகம் பொலிவு பெற: வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.

கஸ்தூரி மஞ்சள் – 5 கிராம்

சந்தனத் தூள் – 5 கிராம்

வசம்பு பொடி – 2 கிராம்

எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி மெல்லிய பருத்தித் துணி கொண்டு முகத்தை துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும். வாரம் இருமுறையாவது இவ்வாறு செய்து வரவேண்டும்.

முகச்சுருக்கம் மாற:

ஆவாரம் பூ காய்ந்த பொடி – 5 கிராம்

புதினா இலை காய்ந்த பொடி – 5 கிராம்

கடலை மாவு – 5 கிராம்

பயத்த மாவு – 5 கிராம்

எடுத்து ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகச் சுருக்கம் நீங்கும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் என்றும் இளமைப்பொலிவுடன் இருக்கலாம்.

வெள்ளரி – 2 துண்டு

நாட்டுத் தக்காளி – 1 பழம்

புதினா – சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கும். இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.

முகம் பளபளக்க: காலை வேளையில், கடலைமாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகம் கழுவி வந்தால் முகம் பளபளக்கும். இதை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

முகப்பரு தழும்பு மாற:

புதினா சாறு – 2 ஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன்

இவற்றில் பயத்த மாவு கலந்து முகப்பரு தழும்புகளின் மீது தடவி வந்தால் முகப்பருத் தழும்புகள் மாறும்.

ஆண்களுக்கு உண்டான முகப்பரு மாற:

ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து, நீர்விட்டு நன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் ஆண்களுக்கு உண்டாகும் முகப்பரு தழும்புகள் மாறும்.

கொத்தமல்லி – 5 கிராம்

புதினா – 5 கிராம்

எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.

(நன்றி இணையத்தில் எடுத்தது )