'உங்கள் கணவர் சுதேசியா?' அம்புஜத்தைக் கோர்ட்டில் நிறுத்திக் கேட்கிறார்கள்.
'அப்ப நீங்கள்ளாம் பரதேசிகளா?' என்கிறாள் அம்புஜம்.
அம்புஜம் ஏன் கோர்ட்டிற்குப் போனாள் ?
அம்புஜத்தின் கணவரின் மீது வழக்கு.
கணவர் அப்படி என்ன செய்தார் ?
மெட்ராஸ் ஸ்டாண்டர்டு என்னும் பத்திரிக்கையில் அவர் ஒரு தலையங்கம் எழுதினார்.
ஏதாவது விரசமாக எழுதிவிட்டாரா என்ன ? இல்லை. அர்பத்நாட் என்னும் வெள்ளைக்கார வங்கி திவால் ஆனதால் பொதுமக்கள் பணம் இழந்தார்கள். அதைப் பற்றி தலையங்கம் எழுதினார் அம்புஜத்தின் கணவர்.
இந்த விஷயமாகக் கோர்ட்டில் அம்புஜம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டர். அப்போது நடந்த சம்பாஷணை நீங்கள் மேலே கண்டது.
சரி. அம்புஜத்தின் கணவர் யார் ? ஒரு தலையங்கத்திற்காக வழக்கு போட்டார்களா என்றால், இல்லை. அவருக்கு நெருக்கடி கொடுத்து, எப்படியாவது உள்ளே தள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் வெள்ளைக்கார அரசு செய்த காரியம் அது.
தலையங்கம் தவிர அம்புஜத்தின் கணவர் வேறன்ன செய்திருந்தார் ?
வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா முதலியோருடன் சேர்ந்து திருநெல்வேலியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடினார். கோரல் மில் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, வேலை நிறுத்தப் போராட்டம் செய்தார். அதில் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் திருநெல்வேலிக் கலவரம் நடந்தது.
நமது விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான நிகழ்வு அது.
ஆகவே, அது நம் தமிழகப் பாடநூல்களில் தென்படாது. வைக்கத்தில் துவங்கி, ராபின்சன் பூங்காவில் முடியும் வரலாறு நம்முடையது.
பாரத அரசின் பாட நூல்களிலும் தென்பட வாய்ப்பிருந்ததில்லை. ஆனால், 2014ற்குப் பிறகு மத்திய அரசின் தளங்களில் இந்த வரலாறு வெளியாகத் துவங்கியது. 75ம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் பயனாக இது வெளிவந்துள்ளது என்று புரிந்துகொள்ளலாம்.
அம்புஜத்தின் கணவரைப் பற்றி அரவிந்த கோஷ் இவ்வாறு எழுதுகிறார் :
“Madras has taken up the heroes out of our hands....... Gallant Chidambaram, brave Padmanabha, intrepid Shiva defying the threats of exile and imprisonment; fighting for the masses, for the nation, for the preparation of Swaraj, these are now in the forefront, the men of the future, the bearers of the standard.”
எல்லாம் சரி. அம்புஜத்தின் கணவர் பெயர் என்ன ?
பத்மநாப ஐயங்கார். சுதேசி பத்மநாப ஐயங்கார் என்று வரலாறு சொல்கிறது.
--ஆமருவி
07-07-2023
#வரலாறு #AzadiKaAmritMahotsav
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏