திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், மணக்கால்அய்யம்பேட்டை அகத்தீஸ்வரர் திருக்கோயில்
Manakkal ayyampettai Agatheeswarar temple.
கும்பகோணம் – திருவாரூர் நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்தது ௧௧/11கிமி தூரத்தில் இவ்வூர் உள்ளது. வெட்டாற்றின் வடக்கு கரையில் மணக்கால்அய்யம்பேட்டை அமைந்துள்ளது.
இவ்வூர் குலோத்துங்க சோழ வளநாட்டு வேளூர் நாட்டு திருப்பெருவேளூர் எனவும் அதற்கு முன்னர் ராஜேந்திரன் காலத்தில் திருப்பெருவேளூர் சதுர்வேதிமங்கலம் எனப்பட்டது. 15-ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தின் பின்னரே மணக்கால் சிறுவேளூர் அய்யம்பேட்டை என பெயர் வந்துள்ளது
மகாமக குளத்தினை கட்டமைத்த தஞ்சையைச் சார்ந்த கோவிந்த தீட்சிதர் (கிபி 1515 -1635 ) அந்தக் காலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இவரை மக்கள் அன்புடன் மரியாதையாகவும் அய்யன், தீட்சிதர் என்று அழைப்பார்கள்..இந்த அய்யன் பெயர் நிலை பெற்று இன்றும் அப்பகுதிகளில் அய்யன் தெரு, ஐயங்குளம் அய்யம்பேட்டை, மணக்கால் அய்யம்பேட்டை என்று பெயரிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இவ்வூருக்கு கோவிந்த தீட்சதர் பெயர் நிலைபெற்றுள்ளது.
இவ்வூரில் முற்காலத்தில் 18 சிவாலயங்கள், 18 தீர்த்தங்கள், 18 திருவீதிகள் இருந்தன. தற்போது இவ்வூரில் அபிமுக்தீஸ்வரர், அகத்தீஸ்வரர், சேஷபுரீஸ்வரர், கங்காதீஸ்வரர், வைகுண்டபெருமாள் கோயில், ஶ்ரீ முத்துமகா காளியம்மன் ஆலயம், கீழத்தெரு ஶ்ரீ வாலை முக்கண்ணியம்மன் ஆலயம், ஐயனார் கோயிலும் உள்ளன. அதுமட்டுமல்லாது எட்டு விநாயகர் ஆலயங்கள் தனித்தனியாக அமைந்துள்ளன
இதோ இப்போது நாம் காணும் திருக்கோயில் பிரதான சாலையின் தெற்கில் உள்ளது.
இறைவன் - அகத்தீஸ்வரர். இறைவி - சௌந்தரநாயகி.
மேற்கு நோக்கிய சிவன் கோயில் ராஜகோபுரம் இல்லை, மொட்டை கோபுரத்தின் மேல் பஞ்சமூர்த்தி சுதைகள் அணி செய்கின்றன. வலது பக்கம் ஒம்காரகணபதியும் இடதுபுறம் கல்யாணசுப்ரமணியர் சன்னதியும் உள்ளது. இறைவன் மேற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார், பெரிய லிங்கமாக உள்ளார், அவரது பாணம் மட்டும் ஆவுடையாரில் இருந்து உயர்ந்து காணப்படுகிறது. அவரின் எதிரில் ஒரு சிறிய நந்தியும் முகமண்டபத்தில் சுவர் ஓவியங்கள் சோழர் காலத்தவை என கூறக்கேட்க மனம் நெகிழ்கின்றது.
முக மண்டபத்தில் கிழக்கு நோக்கிய மகாலிங்கம் ஒன்றும், மேற்கு நோக்கிய நர்த்தன விநாயகரும் உள்ளார்கள். முகமண்டபத்தின் முன்னர் 14 கால்கள் கொண்ட மகாமண்டபம் உள்ளது, அதில் பெரிய அதிகார நந்தி இறைவனை பார்த்தவாறு உள்ளது. அருகில் பைரவர், சனைச்சரன் மற்றும் சந்திரன் உள்ளனர். மகாமண்டபத்தின் ஒரு புறம் தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதி உள்ளது.
கருவறை கோட்டத்தில் துர்க்கை உள்ளார். அடுத்துள்ள பிரம்மன் மாடம் காலியாக உள்ளது, பின்புறம் லிங்கோத்பவர் உள்ளார், தென்முகன் உள்ளார்.
இத்தலம் முன்னர் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் நால்வேதம் கற்ற பண்டிதர்களுக்கு உரித்ததாக இருந்துள்ளது.
இறைவனின் திருமணக்கோலம் காண்பதற்கு அகத்திய முனிவர் இங்கு தவம் செய்தார் என கூறப்படுகிறது. இறைவனை வேண்டி பெருவேளுரில் தவம் செய்த அம்பிகை, திருக்கரவீரத்தில் இறைவனை மணம் புரிகிறார் பின்னர் ராப்பட்டீஸ்வரத்தில் இரவு தங்கியதால் அங்கே அம்பிகைக்கு அந்தப்புர நாயகி என பெயர் இந்த திருமணதிற்கு ஊரடைத்து பந்தலிட்டதால் மணக்கால் என பெயர் வந்ததாக புராண கதை உள்ளது.
இத்தலம் வைப்புத்தலமாக ஆறாம் நூறாண்டில் பாடப்பட்டதால் இது 1500 ஆண்டுகள் பழமையான தலம் என கொள்ளலாம். 108 அகத்தீஸ்வரர் கோயில்களில் இதுவும் ஒன்று. கல்வெட்டுக்கள் அதிகம் உள்ளன. எனினும் சேதமாகிய கல்வெட்டுக்கள் என்பதால் வரலாற்றினை அறிய இயலவில்லை என்கின்றனர்.
பலகாலம் சிதிலமடைந்து இருந்த இக்கோயிலை தியாகேஸ்வரி எனும் சத்துணவு அமைப்பாளரால் முன்னின்று திருப்பணி நடத்தி குடமுழுக்கு செய்யப்பட்டது.
தை மாதத்தில் சில நாட்கள் அஸ்தமன சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவன் மீது வீழ்ந்து வணங்கும் காட்சி அற்புதமானது.
கோயிலின் எதிரிலேயே குருக்கள் குடியிருக்கிறார், அதனால் தரிசனம் செய்ய நல்ல வாய்ப்பு.
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.
Thanks & Copy from : Kadambur Vijay
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏