நீதிக்கதை.
இல்லறம் சிறக்க..!
கணவனும் மனைவியும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். ஏனென்றால், அன்று அவர்களின் 25 ஆவது ஆண்டு திருமண நாள். முன்பு போல் இல்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து, நேரத்தை செலவிடுவது குறைந்து போய் விட்டது.
அவர்களுக்கு இடையே ஏன்? இடைவெளி அதிகரித்து வருகிறது என்பது அவர்களுக்கு புரியவில்லை.
தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது மனைவி மௌனத்தை கலைத்து, " உங்களிடம் நான் நிறைய சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நாம் இருவரும் சேர்ந்து உட்காரக்கூட நேரம் இல்லை" என்றாள்.
" இதைப் பற்றி நான் நிறைய யோசித்து இந்தச் சூழ்நிலையை சமாளிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளேன். நீங்கள் ஒப்புக் கொண்டால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்."
கணவர் தலையை அசைத்தார்.
மனைவி மேசையின் மீது இரண்டு டைரிகளைக் கொண்டு வந்து வைத்தாள்.
இந்த இரண்டு டைரிகளில் ஒன்று உங்களுக்கு, மற்றொன்று எனக்கு.
இனிமேல் நம் இருவருக்குள் ஏதேனும் புகார்கள் இருந்தால் அவற்றை நம் சொந்த டைரிகளில் எழுதி வைப்போம்" என்றாள்.
மேலும், " அடுத்த ஆண்டு நமது திருமண நாள் அன்று அவற்றை நாம் திறந்து படிப்போம்.
ஒருவருக்கொருவர் பிடிக்காத விஷயங்களைப் புரிந்து கொள்ள இது உதவும்.
மேலும் அவற்றை மேம்படுத்தவோ அல்லது தீர்வு காணவோ நாம் பணியாற்றலாம்."
கணவருக்கு மனைவியின் யோசனை பிடித்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் டைரிகளில் எழுத தொடங்கினர். காலம் விரைவாக சென்றது.
அன்று அவர்களின் 26 ஆவது ஆண்டு திருமண நாள்.
கணவன் மனைவி இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களின் டைரிகள் அருகில் வைக்கப்பட்டு, அவற்றை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டனர்.
தேநீர் அருந்தி முடிப்பதற்கு முன் கணவர் தனது மனைவியின் டைரியைப் படிக்கத் தொடங்கினார். அதில் பல புகார்கள் எழுதப்பட்டிருந்தன.
" என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தீர்கள். ஆனால். அதை நிறைவேற்ற வில்லை" என்பது போல...
" இன்று என் பெற்றோரின் வீட்டிலிருந்து விருந்தினர்கள் வந்தார்கள். நீங்கள் அவர்களிடம் நன்றாக பேசவில்லை." என்று மற்றொரு புகார் கூறப்பட்டிருந்தது.
" பல மாதங்களுக்குப் பிறகு , நீங்கள் எனக்கு ஒரு புடவையை வாங்கி வந்தீர்கள். ஆனால் அது பழைய வடிவமைப்பைக் கொண்டிருந்தது. "
" இன்று நான் எனக்கு பிடித்த டிவி சீரியலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நீங்கள் செய்தி சேனலை மாற்றினீர்கள்."
" இன்றைக்கு சோபாவில் ஈரமான டவலை விட்டுட்டு போயிட்டீங்க..."
டைரியில் இது போன்று பல புகார்கள் இருந்தன.
கணவர் அவற்றை படிக்கும் போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது.
அவர் மனம் திருந்தி தனது மனைவியிடம், " இந்தத் தவறுகளை நான் முன்பு உணரவில்லை. ஆனால், இப்போது நான் அவற்றை மீண்டும் செய்ய மாட்டேன் " என்று உனக்கு உறுதியளிக்கிறேன் என்றார்.
இப்போது மனைவி தன் கணவரின் டைரியைத் திறக்கும் முறை வந்தது. பல பக்கங்களைப் புரட்டினாள் மனைவி. ஆனால், அந்த டைரி முற்றிலும் காலியாக இருப்பதைக் கண்டாள். அதில் ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை.
ஆச்சரியப்பட்ட மனைவி, " நீங்கள் டைரியில் எதுவும் எழுதவில்லையா?" என்றாள்.
கணவர், " கடைசி பக்கத்தை பார். நான் அங்கே ஏதோ எழுதினேன் " என்று பதிலளித்தார்.
அந்தப் பக்கத்தில் அவர் எழுதியிருந்தது...
"இத்தனை வருடங்களாக நீ எனக்காகவும், நமது குடும்பத்திற்காகவும் நிறைய தியாகம் செய்துள்ளாய். எங்களுக்கு மிகுந்த அன்பைக் கொடுத்து இருக்கிறாய்.
இந்த டைரியில் உனக்கு எதிராக எதையும் எழுத முடியாது. மேலும் உன்னிடம் எந்த குறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு இருந்ததில்லை.
உன்னிடம் எந்த குறைகளும் இல்லை என்பதல்ல.. ஆனால் உன் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுடன் ஒப்பிடும்போது உன் குறைகள் எதுவும் அற்பமானவை.
என்னுடைய எண்ணற்ற தவறுகளைப் பொருட்படுத்தாமல் இந்த சவாலான வாழ்க்கையில், என் பக்கத்தில் ஒரு நிழலை போல நின்று கொண்டிருக்கிறாய். எப்படி ஒருவர் தன் நிழலில் தவறுகளைக் கண்டுபிடிக்க முடியும்? "
இப்போது மனைவியின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. அவள் தன் கணவனின் கையில் இருந்த தன் புகார் டைரியை வாங்கி கிழித்து அதை எரித்தாள்.
பாடம்:
கணவன் மனைவி இடையேயான உறவு, நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. அதுதான் அதை வலிமையாக்குகிறது. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கணவன் மனைவி புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தவறுகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக தங்கள் துணைவர் தங்களுக்காக எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொண்டால், அவர்களின் உறவு இன்னும் வலுவாகும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️
அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டுமே
சிரமப்படுவது போலவும்
சில பேருக்குப் பிரமை..
ஒன்றை மட்டும் உறுதியாக நம்புங்கள். பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை.
கண்ணதாசன்.
good morning
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏