சப்தவிடங்கத்தலங்கள் என்பது தமிழ்நாட்டில் சிவபெருமானின் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.
இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும்.
இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன.
விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு. இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும்.
வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பர், இறைவனின் திருநடனமே இந்தப் பிரபஞ்சத்தின் அசைவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தில், ஆனந்த தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் ஆக்கத்தின்போதும், ஊர்த்துவ தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் அழிவின்போதும் இறைவன் ஆடும் திருநடனம் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு, சிவபெருமான் ஏழு திருத்தலங்களில் ஆடிய ஏழு வித நடனங்கள் சப்த தாண்டவம் என்றும், தாண்டவம் நடைபெற்ற இடங்கள் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன
ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.
திருவாரூர் - தியாகராசப்பெருமான் -- உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும்
அஜபா நடனம்
திருநள்ளாறு - நாகவிடங்கர் -- பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
திருக்காராயில் - ஆதிவிடங்கர்- கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
திருக்குவளை - அவனிவிடங்கர்- வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
திருவாய்மூர் - நீலவிடங்கர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
வேதாரண்யம் - புவனிவிடங்கர் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்
இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh


