இந்த பெயரை கேட்டாலே மனம் எத்தனையோ அழகான நினைவுகளை அசை போடும்.
ஓட்டலில் பார்சல் வாங்கி வருவதற்கு,வயலுக்கு சாப்பாடு கொண்டு போவதற்கு,வேலைக்கு செல்பவர்கள் மதிய உணவு எடுத்து செல்வதற்கு ஒரு அற்புதமான விசயம் இந்த கேரியர்.
என்ன தான் நமக்கு தெரிந்த உணவாக இருந்தாலும்,கேரியரை கழட்டி ஒவ்வொரு அடுக்காக கழட்டும் போது மனம் மட்டுமல்ல,நாவும் ஆசை கொள்ளும்.
சிறு வயதில் பட்டுக்கோட்டை ஓட்டலில் கேரியர் எடுத்துட்டு போய்தான் பார்சல் சாப்பாடு வாங்கி வருவதுண்டு!
அடி அடுக்கில் சாதம்,அடுத்து சாம்பார்,அடுத்து வத்த குழம்பு,ரசம்,மோர் என பட்டியல் நீளும்.
கூடவே பொறியல்களை வாழை இலையில் வைத்து பேப்பரில் மடித்து கொடுப்பார்கள்.
மத்தியானம் பசி நேரத்தில் கேரியரை கழட்டும்போது சாப்பாட்டு வாசம் பசி உணர்வை மேலும் தூண்டி சாப்பாடு தேவாமிர்தமாக இருக்கும்.
நாகரீகத்தின் வளர்ச்சியில் கேரி பேக் எனும் அரக்கன் எத்தனை ஆரோக்கியமான விசயங்களை விழுங்கிவிட்டது.
இதில் மனிதனின் சோம்பறி தனமும்,பாத்திரம் என்பது பழமை வாதம் என என்ற எண்ணமும் ஒரு காரணம்.
"ஏய் தம்பி!!அப்பாவுக்கு கேரியல்ல சோறு வயல்ல கொடுத்துட்டு வாடா"என அம்மா கொடுக்கும் சாப்பாட்டை வயலில் அப்பாவுக்கு கேரியலை கழட்டி போடும்போது அதில் வரும் மீன் குழம்பு வாசமும்,முட்டை அவியலும் வாழை இலை சாப்பாடும் வாழ்வில் மறக்க இயலா பொக்கிசமான நினைவுகள்..,